ஆனந்த ஜோதி

இயேசுவின் உருவகக் கதைகள் 38: நானா? நீயா?

எம்.ஏ. ஜோ

தங்களுக்குள் யார் பெரியவர் என்ற காரசாரமான விவாதமும், அந்த விவாதம் ஏற்படுத்தும் எதிர்மறை உணர்வுகளும் இயேசுவின் சீடர்களையும் விட்டு வைக்கவில்லை.

ஒரமுறை இயேசுவும் அவரது சீடர்களும் பயணம் செய்து அவர்கள் சேர விரும்பிய ஊருக்கு வந்து, ஒரு வீட்டில் அமர்ந்ததும் தன் சீடரைப் பார்த்து, “வழியில் நீங்கள் எதைப் பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்டார் இயேசு. அவர்கள் பதில் ஏதும் கூறாமல் அமர்ந்திருந்தனர்.

அவர்களின் மௌனத்துக்குப் பின்னே சிறிது குற்றவுணர்வும் பயமும் இருந்திருக்கலாம். எதைப் பற்றி விவாதித்தோம் என்பது அவருக்குத் தெரிந்தால் அவர் தங்களைக் கண்டிப்பார் என்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும். தங்கள் குருவின் மனம் தெரிந்தாலும் அத்தகைய விவாதத்தை அவர்களால் தவிர்க்க முடியவில்லை.

காரணம் அவர்களும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள்தானே? பதவியின் மீதும் அப்பதவி தரக்கூடிய பணம், செல்வாக்கு, மற்ற சலுகைகள் மீதும் நமக்கு இருக்கும் ஆசையால் பதவி நமக்குக் கிடைக்கவேண்டும் என்று நாம் ஏங்குகிறோம். ஆனால் நம்மோடு இத்தனை பேர் இருக்கும்போது மற்றவர்களை விட்டுவிட்டு, அந்தப் பதவி நமக்கு ஏன் வழங்கப்பட வேண்டும் என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வோம்? 'ஏனென்றால் அவர்களைவிட நான் பெரியவன், உயர்ந்தவன்' என்று நாம் வாதிடுகிறோம்.

பதவி ஆசை மற்றவர்களுக்கும் இருப்பதால் அவர்களும் இவ்வாறே வாதிடத் தொடங்குகிறார்கள். இதற்கு முடிவு ஏதும் உண்டா? தீர்வு ஏதும் உண்டா? இல்லை. ‘மற்றவர்களை விட நானே உயர்ந்தவன்’ என்பதை நிலைநாட்ட, மற்றவர்களை மட்டம்தட்ட, குறைகூற நாம் முற்படுவோம். இந்த முயற்சிக்கு உண்மைகள் ஒத்துழைக்காவிட்டால், மிகைப்படுத்துவோம். பொய்களைக் கூடத் தயங்காமல் சொல்வோம்.

இத்தகைய நடவடிக்கைகள் பிறரைக் காயப்படுத்தும். காயப்பட்டவர்கள் நம்மைத் தாக்கிக் காயப்படுத்த முனைவார்கள். இதனால் சக மனிதர்களாக, சகோதரர்களாக இருந்தோர் போட்டியாளர்களாக, பகைவர்களாக மாறிவிடுகிறார்கள். அதுவரையில் இருந்த அமைதியும் நல்லுறவும் பறிபோய் விடுகின்றன.

கடைசியானவர் தொண்டராக இருக்கட்டும்

தன் சீடர்கள் இதற்குப் பலியாகிவிடக் கூடாது என்ற அக்கறையில், இயேசு தன் பன்னிரு சீடர்களையும் அழைத்து அமரச் சொன்னார். "உங்களில் ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" என்றார்.

‘தலைவனாக விரும்புகிறீர்களா? தொண்டனாக மாறுங்கள்' என்பதே இந்த அறிவுரை.

மற்றவருக்குப் பணி செய்வதே ஒருவரை உயர்ந்தவர் ஆக்கும் என்று அந்த வேளையில் மட்டுமல்ல, வேறு சமயங்களிலும் இயேசு திருத்தமாக, தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

நமக்குச் சமமானவர்கள் என்று நாம் நினைப்போருக்கு பணிவிடை செய்ய, தொண்டாற்ற நமக்கு எளிதில் மனம் வருவதில்லை. நான் என்னும் அகந்தை நம்மைத் தடுக்கிறது.

ஆங்கில அறிஞர்கள் இருவரிடையே இது நடந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த இருவர் யார் என்பதில் சிறிய விவாதம் ஒன்று பல காலமாக நடக்கிறது. இவர்கள் ஜி.கே. செஸ்டர்டன், ஜார்ஜ் பெர்னாட் ஷா என்று சிலரும், வேறு சிலர் இவர்கள் செஸ்டர்டன், ஹில்லேர் பெல்லக் என்றும் கூறுகின்றனர்.

நடந்தது என்ன? ஒரே ஒருவர் மட்டுமே எளிதில் நடந்து கடக்கக் கூடிய ஒரு குறுகிய பாதையின் ஒரு முனையில் ஒருவரும் மறுமுனையில் மற்றவரும் நின்றார்கள். இருவரில் யாராவது ஒருவர் ‘ஏதோ ஒரு விதத்தில் என்னைவிட நீங்கள் உயர்ந்தவர். எனவே இதனை முதலில் கடக்கும் முன்னுரிமை உங்களுக்கே இருக்கிறது. எனவே நான் விலகிக் கொள்கிறேன். முதலில் நீங்கள் நடந்து வாருங்கள். பிறகு நான் போய்க் கொள்கிறேன்' என்று ஒருவர் விலகிக்கொண்டால் மட்டுமே இருவரும் அந்தக் குறுகிய சாலையைக் கடக்க முடியும். ஆனால் ஆங்கிலத்தில் ‘ஈகோ' எனப்படுகிற மமதை முதலில் இருவரையும் முரண்டு பிடிக்க வைத்தது. இருவரும் எதிர்முனையில் நின்ற மற்றவரை முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றனர். இருவரில் ஒருவர் மற்றவரைப் பார்த்து “நான் முட்டாள்களுக்கு வழி விடுவதில்லை” என்றார். அக்கணத்தில் மற்றவரிடம் ஞானம் பிறந்தது. “அப்படியா? ஆனால் நான் முட்டாள்களுக்கு வழி விடுபவன்” என்று சொல்லி, பாதையை விட்டு விலகி அவர் ஒதுங்கி நின்றார்.

தொண்டரான இயேசு

இருவரில் கடைசிவரை முட்டாளா கவே இருந்தவர் யார்? அகந்தைக்குப் பலியாகி வழிவிட மறுத்தவர்தானே? இந்த அகந்தை ஒரு தீமை என்பதை உணர்த்த, இயேசுவே அவரது சீடர்களின் தொண்டராக ஆன நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அவர்களின் வாழ்க்கை முழுவதும் அவசியமான ஒரு உண்மையைக் கற்பிக்க இயேசு விரும்பினார். அதற்குச் சரியான தருணத்தை அவர் தெரிந்துகொண்டார். நாம் நேசிக்கும் ஒருவர் நம்மைவிட்டு தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ பிரியும் முன்னர், நம்மிடம் சொல்பவற்றை நாம் எளிதில் மறப்பதில்லை. மிக முக்கியமான ஒன்று என்பதாலேயே, நம்மை விட்டுப் பிரியும் முன்னர் அவர் இதை நமக்குச் சொன்னார் என்று புரிந்து கொண்டு. அதை மனத்தில் இருத்தி, அதன்படி செயல்பட முனைகிறோம்.

இதனால்தான் இயேசுவும் தான் இவ்வுலகை விட்டுச் செல்லும் நேரம் வந்துவிட்டது என்று உணர்ந்து, கடைசி முறையாகத் தனது சீடர்களோடு பாஸ்கா எனும் பெருவிழா விருந்து உண்ட பின்னர், சீடர்கள் யாரும் எதிர்பார்க்காத ஒன்றைச் செய்தார். தம் மேலுடையைக் கழற்றிவிட்டு, இடுப்பில் ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு, ஒரு குவளையில் நீர் நிரப்பி, தன் சீடர்களின் பாதங்களைக் கழுவி, இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைத்தார். ‘இது அடிமைகள் செய்யும் பணிவிடை ஆயிற்றே? இதை நம் குரு செய்யலாமா?' என்று சீடர்கள் தயங்கினாலும், இயேசு அனைவரின் பாதங்களையும் கழுவித் துடைத்தபின் அவர்களைப் பார்த்துச் சொன்னார். “ஆண்டவரும் போதகருமான நான், உங்கள் பாதங்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் மற்றவரின் பாதங்களைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.”

பணிவிடை செய்யுங்கள்

என்ன சொல்ல விரும்பினார் இயேசு? நானே பெரியவனாக, நானே தலைவனாக இருக்க வேண்டும் என்ற அகந்தை உங்கள் மனத்தில் முளைத்த மறுகணம் அதைக் கிள்ளி எறிந்துவிட்டு, அனைவருக்கும் பணிவிடை செய்யுங்கள். தொண்டு ஆற்றுங்கள்.

மகாத்மா காந்தி, அன்னை தெரசாவைப் போன்று இந்த ஞானத்தோடு செயல்பட்ட அரிய மனிதர்களை நாம் அறிவோம். சக மனிதருக்குப் பணிவிடை செய்த அவர்களே உண்மையில் உயர்ந்தவர்கள்.

(தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com

SCROLL FOR NEXT