ஆனந்த ஜோதி

அகத்தைத் தேடி 52: அலைகளின் மீது!

தஞ்சாவூர்க் கவிராயர்

“கன்னியாகுமரி கடற்கரையில் சஞ்சரிக்கும்
ஆயி என்ற பெயரற்ற கிழவியின் பிரஸ்தாபம்
அந்தச் சுற்று வட்டாரத்தில் இக்கட்டுகளின்போது
பிரக்ஞையை மீறிப் பிறக்கிற மந்திரம்...”

கன்னியாகுமரி கடற்கரை ஓரம் கடற்பரப்பையே உற்று நோக்கியபடி அமர்ந்திருக்கிறது ஒரு பெண் உருவம். கந்தல் ஆடை, விரித்த கூந்தல். திடீரென்று கடலுக்குள் பாய்ந்தது. அலைகள் மீது அநாயாசமாக நீந்திச் சென்றது. ஏற்கெனவே இன்னொரு ஞானமார்க்கி, அதே நூற்றாண்டின் ஆரம்பத்தில் தேடி நீந்திப் போய் அடைந்த பாறையிடம் அது. பின்னர் அது விவேகானந்தர் பாறை என்று பெயர் பெற்றது. ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மாயம்மாவைப் பார்த்ததாகச் சொல்கிறார்கள்.

அகத் தேடலுக்காக கடலை அடைக்கலம் கொண்டு நீந்தியும், மிதந்தும், அமர்ந்தும் தவத்தில் ஈடுபட்ட அந்தப் பெண் துறவியின் பெயர் பெயர் மாயம்மா. ஒருசமயம் பிச்சைக்காரராய் நாய்கள் புடைசூழக் கடைத்தெருவில் நடப்பார். கடைகளில் அடுக்கி வைத்திருக்கும் வடைகளையும், இட்லிகளையும் எடுத்து நாய்களிடம் வீசுவார். உண்மையில் அவர் யார்? எங்கிருந்து வந்தார்? அவர் பெயர் என்ன? யாருக்கும் தெரியாது. அவர் உடல் அமைப்பிலும், முகத்தோற்றத்திலும் மங்கோலியக் களை தெரிகிறது..

வருவதும் போவதும் தெரியாமல் மாயமாய்த் தோன்றி மாயமாய் மறைந்தபடி தங்களோடு வாழ்ந்த அந்த மனுஷியை மீனவர்களும், கன்னியாகுமரி மக்களும் மாயக்கா, மாயம்மா என்று அழைத்ததில் வியப்பில்லை.
‘கன்னியாகுமரியே இந்த மாயம்மா’ என்று கன்னத்தில் போட்டுக் கொண்டவர்கள் உண்டு.

பேதங்கள் எரிந்தன

உரித்துப்போட்ட பச்சை வாழை மட்டைகளையும் கடலில் இருந்து அவர் கொண்டு வந்து எறிந்த ஈரம் பாரித்த பச்சைப் பாசிகளையும் குவித்து எரிப்பது அவர் வழக்கம். நள்ளிரவில் கன்னியாகுமரி கடற்கரை ஓரம் தீக்கங்குகள் தகதகவென்று எரிந்து கொண்டிருக்க அதனைப் பார்த்தபடி முகமெல்லாம் நெருப்பின் ஜ்வாலை பூசிய செக்கர் வண்ணத்தில் மினுமினுக்க அலை ஓசையோடு போட்டி போட்டுக் கொண்டு அதிரச் சிரிக்கும் அவர் சிரிப்பு ஊருக்குள்ளும் கேட்டது. துறவிக்குரிய எவ்விதப் புற அடையாளமும் மாயம்மாவிடம் இல்லை.

ஒரு மனுஷியாக வாழ்வதன் உன்னதத்தை உலகுக்கு அறிவிக்கவே இங்ஙனம் உலவினாளோ அறியோம். உடம்பெல்லாம் கடல் சேறு. ஒட்டிக்கொண்டிருக்கும் கரும் பச்சைப்பாசி ஆடை. உடையேதும் அணியாத வெற்றுடம்பில் ஆதிமனுஷியாக கடல் மணலில் கால் புதைய நடந்தவளை காவல் தெய்வமாகவே கண்டனர் கன்னியாகுமரி மக்கள். சில சமயம் மாயம்மாளின் உடலுக்குள் சக்தியின் சன்னதம் குடிகொண்டுவிடும். கடல் அலைகளில் அவர் ஆடுவதும், நீந்துவதும் சிவனின் ஊழிக்கூத்தை ஒத்திருக்கும்.

அப்போதெல்லாம் அலைகளை அடக்கி நீரைப் பாறையாக்கி அமர்ந்து நெடுந்தவத்தில் மூழ்குவார். கிழமானாலும் ஒரு பெண் கடற்கரையில் அநாதரவாய்ப் பகலிரவு பாராமல் சுற்றித் திரிந்தால் பைத்தியம் என்று பேர் பெறும். ஆனால் காரில் வருகிற தம்புரான்களும் தம்புராட்டிகளும் அவருடைய காலில் விழ ஆரம்பித்தனர்..என்று தனது அமானுஷ்யக் குறுநாவல் “ஆயி” யில் தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான பிரமிள் குறிப்பிட்டிருக்கிறார்.

தேடிவந்த ஜனாதிபதி

அவளது பெருமையை உணர்ந்து தேடிவந்த பிரபலங்கள் உண்டு. ஆன்மிகப் பெரியார்களும், எழுத்தாளர்களும் உண்டு. மாதா அம்ருதானந்த மயி, ஜக்கி வாசுதேவ், பூண்டி மகான், எழுத்தாளர்கள் தி.ஜானகிராமன், பிரமிள் தர்மு அரூப் சிவராமு....

குடியரசுத் தலைவர் ஜெயில்சிங் அவரைச் சந்தித்து ஆசிபெற மாயம்மாள் சுற்றித் திரியும் சாலைக்கே வர நேர்ந்தது. அவரை மெளனமாக முகத்தில் எவ்வித சலனமும் இன்றிப் பார்த்துவிட்டு கடற்கரை நோக்கி நடந்தார் மாயம்மா. மாயம்மாவுக்கு வாசனைகள் பற்றிய பிரக்ஞையே இல்லை. சாலை ஓரக் கடைகளில் பக்கோடாவும் வடையும் தயாராகும் வாசனையை அவர் பொருட் படுத்தியதில்லை. அவர் கைநிறைய ரோஜாப்பூக்களையும் மல்லிகைச் சரங்களையும் கொடுத்தாலும் முகத்தில் எவ்வித சலனமும் இராது. குடலைப் புரட்டும் துர்நாற்றம் வீசும் குட்டை ஓரம் மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பார்.

நாய்களின் ஒழுங்கு

அவரைச் சுற்றிவரும் தெருநாய்களின் கூட்டம் அவர் மீது ஏறி விளையாடும். ஆச்சரியம் என்னவெனில் ஒரு நாய்க்கு, அவர் இட்டிலிகளைப் போட்டால் மற்ற நாய்கள் அந்த உணவுக்கு போட்டி போடாது. தமது முறைக்காகக் காத்திருக்கும். விபத்து ஒன்றில் ஒருவரது வலக்கை விரல்கள் மூடி திறக்கவே முடியாத நிலை ஏற்பட பெரிய மல்யுத்த வீரர்போல பலம் கொண்டவராலும் விரல்களைப் பிரிக்க முடியவில்லை. மாயம்மாள் வழக்கம்போல் பேசவில்லை. ஒரு கையில் நாடி பார்க்கிற மாதிரி மணிக்கட்டைப் பிடித்து மற்றொரு கையால் பூவிதழை விரிக்கிற மாதிரி முஷ்டிப் பிடியை கைக்குள் என்ன என்று எட்டிப் பார்ப்பதுபோல் மெல்ல விரிக்க முற்பட்டபோது விரல்கள் விரிந்தன.

மாயமானார்

மாயம்மா கன்னியாகுமரி யிலிருந்தும் திடீரென்று காணாமல் போனார். அவரது அணுக்கத் தொண்டராய் அனுதினமும் பணிவிடை செய்த ராஜேந்திரனுடன் சேலத்தில் ஏற்காடு மலையின் எழில்மிகு அடிவாரத்தில் குடிசை ஒன்றில் தவவாழ்வை மேற்கொள்ளும்போது மீண்டும் தென்பட்டார். ராஜேந்திரனின் முகச்சாயல் மெல்ல மெல்ல மாறிக் கொண்டே வந்து. அப்படியே மாயம்மாளின் முகம்போலவே ஆகிவிட்டது. சேலத்தில் 1992-ல் ஜீவ சமாதி அடைந்தார் மாயம்மா. அங்கு மாயம்மாவுக்காக கட்டப்பட்ட உறுதியும் வனப்பும் துலங்கும் சிறிய ஆலயத்தில் அமர்வோர் கடவுளின் சாயல் தம்மீது படிவதை உணர்வது உறுதி.

(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

SCROLL FOR NEXT