ஆனந்த ஜோதி

சூபி தரிசனம்: புல்லா ஷாவின் கதை கேளுங்கள்

செய்திப்பிரிவு

ஷா இனாயத், லாகூர் நகரத்தில் உள்ள சாலிமார் தோட்டத்தில் தலைமைத் தோட்டக்காரராகப் பணியாற்றினார். அங்கே சூபி ஞானியும் கவிஞருமான மதோ லால் ஹூசைனின் சமாதி இருந்ததால் துறவி புல்லா ஷா அவ்வப்போது அங்கே வருகை தருவார். ஒரு வேனில் பருவத்தில் புல்லா ஷா, சாலிமார் தோட்டத்தில் மாந்தோப்பு ஒன்றுக்குள் நுழைந்தார். கனிந்த பழங்களின் வாசனை அவரை உடனே மாம்பழங்களைச் சாப்பிடத் தூண்டியது. சுற்றிமுற்றிப் பார்த்தார். தோட்டக்காரரைக் காணவில்லை. மாம்பழங்களைப் பறித்துச் சாப்பிட புல்லா ஷா முடிவுசெய்தார். மாம்பழங்களைப் பறிக்க விரும்பாமல் கிளைக்குக் கீழே நின்று ‘அல்லா, அருளாளர்' என்றார்.

அப்படிச் சொன்னவுடன் ஒரு மாம்பழம் அவர் கையில் வந்து விழுந்தது. இப்படித் திரும்பச் சொல்லி அவருக்கு வேண்டிய அளவு பழங்களை எடுத்துக்கொண்டு தனது மூட்டையில் பொட்டலமாக கட்டி எடுத்துக்கொண்டு நகர்ந்தார். அப்போது தலைமை காவல்காரரான ஷா இனாயத் அங்கே தென்பட்டார். மாம்பழங்களை அரண்மனைத் தோட்டத்திலிருந்து எடுத்துச் செல்வது குறித்து கேள்வி கேட்டார்.

புல்லா ஷா, கேள்வி கேட்ட தோட்டக்காரரை தாழ்ந்தவர் என்று நினைத்தார். அவரிடம் தனது அற்புதத்தைக் காட்டிப் பயமுறுத்த எண்ணினார். “நான் ஒன்றும் மாம்பழங்களைத் திருடிச் செல்லவில்லை. அவை என் கைகளில் விழுந்தன. நீ விரும்பினால் எப்படி என்பதைப் பார்க்கலாம்.” என்று பதிலளித்தார். அதைச் சொன்னதோடு செய்தும் காட்டினார்.

ஆனால் ஷா இனாயத் அதைப் பொருட்படுத்தவில்லை. சிரித்தபடி புல்லா ஷாவிடம், மந்திரத்தைச் சரியாக உச்சரிக்கவில்லை என்று கூறி ஷா இனாயத் அதையே உச்சரித்தார்.

தோட்டத்திலிருந்த மாம்பழங்கள் அனைத்தும் தரையில் விழுந்தன. புல்லா ஷாவுக்கு, ஷா இனாயத் ஒரு குரு என்பது தெரிந்தது. தாழ்ச்சியாக நினைத்த ஒருவர் அவரது மனத்தை வென்றுவிட்டதைப் புரிந்துகொண்டார். உடனடியாக ஷா இனாயத்தை வணங்கி அவரிடம் சீடராக ஆனார் புல்லா ஷா.

புல்லா ஷாவின் கதையைக் கேளுங்கள். மறுமையின் கரைக்கு அவரைக் கொண்டு சென்றவர் ஒருசமயத்தில் அவர் தாழ்மையாக நினைத்த ஷா இனாயத் தான்.

SCROLL FOR NEXT