முல்லா நஸ்ரூதின் கடன் வாங்குவதற்காக ஒரு பணக்காரரைப் போய்ப் பார்த்தார். அவரிடம் எனக்குப் பணம் தேவைப்படுகிறதென்றார். பணக்காரர் அக்கறையுடன் முல்லாவின் தேவை என்னவென்று கேட்டார்.
முல்லாவோ, யானை வாங்கப் போவதாகச் சொன்னார்.
“கையில் பணம் இல்லாவிட்டால் யானையை எப்படிப் பராமரிப்பாய்" என்று அந்த பணக்காரர் கேட்டார்.
“நான் பணம் வாங்குவதற்காகத் தான் இங்கே வந்தேனே தவிர, அறிவுரை வாங்க அல்ல.” என்று பதிலளித்தார்.
எனது முகம் கடவுளை ஒத்தது
முல்லாவும் அவரது நண்பர்களும் தங்களது முகச்சாயல் குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
“எனது முகம் வின்ஸ்டன் சர்ச்சில் போன்று இருக்கிறது. எல்லாரும் என்னை அவர் என்று தவறாக நினைத்துக் கொள்வார்கள்.” என்றார் ஒரு நண்பர்.
“என்னை எல்லாரும் அமெரிக்க அதிபர் நிக்சன் என்று நினைத்துக் கொள்கின்றனர். ஆட்டோகிராப்பும் கேட்கிறார்கள்.” என்றார் இன்னொருவர்.
“இதெல்லாம் பரவாயில்லை. என்னுடைய முகமோ கடவுளுடையது போல இருக்கிறது என்று கருதுகிறார்கள்.” என்று சலிப்புடன் கூறினார் முல்லா.
இதைக் கேட்ட நண்பர்கள் வியந்துபோய், எப்படி என்று கேட்டனர்.
“நான் குற்றம் செய்து தண்டனைக்கு உள்ளாகி சிறைக்கு நான்காவது முறை சென்றேன். அப்போது என்னைப் பார்த்த ஜெயிலர், “அடக்கடவுளே திரும்பவுமா” என்று கேட்டார்" என்று பெருமூச்சுவிட்டார் முல்லா.
காரணம் தெரிந்துவிட்டால்
முல்லாவின் பழைய தோழி ஒருவர் அவரை மனநல மருத்து வரின் கிளீனிக்கில் சந்தித்தார்.
ஆச்சரிப்பட்டுப் போன அவள், முல்லாவை காபி சாப்பிட அழைத்தாள்.
“நீ டாக்டரைப் பார்த்துவிட்டு வருகிறாயா? அல்லது உள்ளே போவதற்காக காத்திருக்கி றாயா முல்லா” என்று காபி அருந்தும்போது அவள் முல்லாவிடம் விசாரித்தாள்.
“எனக்கு அது தெரியுமானால் நான் இங்கே இருப்பேனா என்ன?” என்று முல்லா குழப்பத்துடன் பதிலளித்தார்.