காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் ஆலயத்தின் கருவறையின் வலப்பக்கத்தில் நின்ற கோலத்தில் எழுந்தருளியிருப்பவர் திருக்கள்வன் என்று அழைக்கப்படு கிறார்.
அசுரர்களின் அரசன் மகாபலியின் வேள்வி இடத்தில் வாமனனாய் நுழைந்து மூன்றடி மண்ணை யாசித்து வாமனனுடைய நடை, உடை, பாவனை, சிரிப்பு, கள்ளத்தனம் அனைத்தையும் பார்த்து மகாபலியின் குருவான சுக்கிராச்சாரியார் சந்தேகப்பட்டார். இவன் மாயம் செய்யும் கள்வன் விஷ்ணு என்று எச்சரிக்கை செய்தார்.
ஆனால், மகாபலி சக்கர வர்த்தியோ கிளர்ச்சி யடைந்தான். அஹோ பாக்கியம் அஹோ பாக்கியம் என்று பரவசமாய்க் கூவி, வராகராக, நரசிம்மராக, தன்வந்திரியாக, மோகினியாக பல அவதாரங்கள் எடுத்த விஷ்ணு, தனக்காக வாமனத் தோற்றத்தில் வந்து கைநீட்டி நிற்கிறாரே என்று பெருமிதம் கொண்டான். அத் தருணத்திலேயே வாமனன் கேட்டதை தருவதற்கான அடையாளமாக கமண்டல நீரைத் தரையில் விட்டு தாரை வார்த்தார்.
கள்வன் என்பது நாராயணனுக்கு ஆழ்வார்களும் அவரின் பக்தர்களும் செல்லமாகப் பிரியத்துடன் வழங்கிய பெயராகும். கள்வன் என்றால் திருடன் அல்லது ஏமாற்றுபவன் என்று பொருள். அசுர குருவான சுக்கிராச்சாரியாரும் கள்வன் என்றே வாமனனாக வடிவெடுத்து வந்து விஸ்வரூபம் காட்டி மகாபலியை வென்றவனை அழைத்தார்.
இப்படிப் பகவானை கள்வன் என்று கொண்டாடும்படியான ஞானம் கூட இல்லாதவளான அடியாள் முயல் புழுக்கை போல் வரப்பில் கிடந்தால் என்ன? வயலில் கிடந்தால் என்ன? என்றபடி பஞ்சம் பிழைக்க இந்த ஊரைவிட்டுக் கிளம்புகிறேன் என்று ராமானுஜரிடம் முறையிடுகிறாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com