ஸ்ரீரங்கத்தில் ராமாநுஜர் அரங்கனின் கோயில் பணிகளை திருத்தி கைங்கரியம் செய்பவா்கள் அனைவருக்கும் அவரின் பரம்பரைகள் அதைத் தொடா்ந்து செய்யும்படி பணி அமா்த்தினார். தினப்படிக் கட்டளைகளை திருத்திப் பணிக்கொண்டார். இதனால் ராமாநுஜருக்கு உடையவர் என்று பெயர்.
இறைவனுக்கு பூஜை, அர்ச்சனை செய்பவா்கள் தொடங்கி வரவு செலவு பார்ப்பவா்கள், பூ தொடுப்பவா்கள், அரங்கனின் பட்டாடையைத் துவைப்ப வா்கள், கோயிலைப் பெருக்கித் துடைப்ப வா்கள், விளக்குக்கு எண்ணெய் விடுபவா்கள் என அனைவரையும் சிறப்பித்து ராமாநுஜர் பாராட்டுவார். அக்காலகட்டத்தில் கோயிலில் பெரிய கோவில் நம்பி என்பவர் கைங்கரியத்தில் ஈடுபட்டுவந்தார். பாஞ்சராத்ர ஆகமம், பஞ்சாங்க படனம், வைகானச ஆகமங்களில் ஞானமுடையவராக இருந்தார். ஆனால், தனது ஞானம் காரணமாக அகம்பாவம் உடையவராக வேலையில் அசிரத்தையும் எளிய பணியாளர்களிடம் அவமரியாதையையும் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருக்கு ராமாநுஜர் மீதும் மரியாதை இல்லை. எங்கோ காஞ்சிபுரத்திலிருந்து இங்கு வந்தவா், அரங்கனுக்குப் பணி செய்ய இவர் யார்? என்ற மனோபாவத்துடன் அணுகினார்.
ராமாநுஜர், பெரிய கோவில் நம்பியை அனுசரித்து, திருத்துவதற்கு முயற்சி செய்தார். ஒருகட்டத்தில் அவரை சில நாட்கள் பணிநீக்கம் செய்யவும் யோசித்தார். ஆனால் ராமாநுஜரின் கனவில் கடவுள் தோன்றி, பெரிய கோவில் நம்பி இந்த ஆலயத்தை நம்பி இருப்பவன் என்று கூறி தயை காட்டுமாறு கோரினார்.
இச்சூழ்நிலையில் தனக்கு இந்த ஆலயத்தில் இடமில்லை என்று முடிவு செய்த ராமாநுஜர், கூரத்தாழ்வானிடம் கூறினார். பெரிய கோவில் நம்பி செய்யும் தவறுகளுக்கு பெருமாளும் உடனிருப்பது சரியா என்று வருந்தினார். கூரத்தாழ்வானோ, நாம் பொறுமையாக இருக்கலாம் என்று கூறி மனம் மாற்றினார்.
பெரிய கோவில் நம்பியைத் திருத்தும் பணி கூரத்தாழ்வானுக்கு வந்தது. அதுமுதலாக கூரத்தாழ்வான் பெரிய கோவில் நம்பி போகும் இடமெல்லாம் சென்று படிப்படியாக, அவரைத் திருத்தி ராமாநுஜரின் நல்லெண்ணத்தைப் புரிய வைத்தார். ஆதிசேஷனின் மறுஅவதாரம் தான் ராமாநுஜர் என்பதை உணர்ந்து பெரிய கோவில் நம்பி படிப்படியாக அவரை ஆச்சாரியராக ஏற்றுக்கொண்டார். அவர்தான் பின்னாளில் ராமநுஜரைப் போற்றி 108 பாடல்களைப் பாடினார். எனக்கெதற்கு இந்தப் பாசுரங்கள், நீ இறைவனையே பாடவேண்டும் என்று ராமாநுஜரிடம் காண்பிக்கப்பட்டபோது கிழித்தெறிந்தார்.
ஆனாலும் பெரிய கோவில் நம்பி விடவில்லை. ‘இராமாநுஜ நூற்றந்தாதி’ என 108 பாடல்களைப் படைத்தார். மூன்று வரிகள் இறைவனையும், ஸ்ரீராமாநுஜ ‘பூ மன்னு மாது பொருந்திய மார்பன்’ என்று தொடங்கி திருமகள் கேள்வனின் பெருமைகளையும் ஆழ்வார்களின் மகிமைகளையும் ஆழ்வார்களிடம் பக்திகொண்ட ராமாநுஜரின் ஆத்ம குணங்களையும் அனைவரும் அனுபவிக்கும் வகையில் பாடினார். இப்படித்தான் ராமாநுஜர், பெரிய கோவில் நம்பியை திருவுள்ளம் உகந்து ‘அமுதனாரோ’ என்று கொண்டாடும் நிலை ஏற்பட்டது.
திருவரங்கத்து அமுதனாரைப் போலே. நூற்றந்தாதி பாடும் வல்லமை எனக்கில்லையே, நான் கல்வியறிவு இல்லாதவளாய் இருக்கிறேனே என மனவருத்தம் கொண்டாள் திருக்கோளுா் பெண்பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com