பேறுபெற்றோர் என்று இயேசு அழைத்த எட்டு வகை மனிதர்களில் நான்காவது வகையினரும் எட்டாவது வகை யினரும் ஏறத்தாழ ஒரு வகையினரே. எனவே இந்த இருவகை மனிதர் களையும் இணைத்தே பார்க்கலாம் .
“நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.” அதன் பிறகு இன்னும் மூன்று வகையினரைக் குறிப்பிட்ட பிறகு அவர் சொன்னார்: “நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர். ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.”
நீதி நிலைநாட்டும் வேட்கை என்பது என்ன? இந்த வாக்கியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை அப்படியே தமிழில் சொன்னால் ‘நீதிக்காக பசித்திருப்போர், தாகத்தில் தவித்திருப்போர்' என்று சொல்ல வேண்டும்.
கடும் பசியில் நாம் வாட நேர்ந்தால், உணவைத் தேடிப் புசிப்பதற்காக எதையும் செய்வதற்குத் தயாராக இருப்போம். ‘எங்காவது சிறிது தண்ணீர் கிடைக்காதா?' என்று நம்மைத் தவிக்க வைத்து விடுகிறது தாகம்.
உணவைப் போன்று, தண்ணீரைப் போன்று நீதியைத் தேடுவதைத்தான் ‘நீதியை நிலைநாட்டும் வேட்கை' என்று இயேசு குறிப்பிடுகிறார். இது வெறும் ஆவல் இல்லை. வெறும் ஆவல் என்றால், அது நிறைவேறும் நாளுக்காக பொறுமையாகக் காத்திருக்க நாம் தயாராக இருப்போம். ஆனால் வேட்கையோ, அப்படிக் காத்திருக்க விடாது. ‘எழு, கிளம்பு, போ, போய் என்ன செய்ய முடியுமோ செய்’ என்று விரட்டிக்கொண்டே இருப்பது வேட்கை.
நீதிக்கான வேட்கை
நீதிக்கான வேட்கை கொண்டோரை எல்லாக் காலங்களிலும் எல்லாச் சமுதாயங்களிலும் பார்க்கலாம். அநீதி இழைக்கப்படுகிறது என்பது புரிந்ததுமே, அதை நீக்கி நீதியை நிலைநாட்டும் நோக்கத்துடன் இவர்கள் உடனடியாக செய்ய முடிந்ததெல்லாம் செய்வார்கள்.
நீதிக்கான அடிப்படை ஆவல் எல்லா மனித மனங்களிலும் இயல்பாகத் துளிர்க்கும் ஒன்று. இதைத்தான் மனசாட்சி அல்லது மனிதத்தன்மை என்கிறோம்.
பேராசைகளுக்குப் பலியாகி மனசாட்சியை மறுதலிப்போரே அநீதிகளை இழைக்கிறார்கள். அல்லது அநீதிக்குத் துணை நிற்கிறார்கள். இவர்களைத் தவிர மற்ற எல்லா மனித மனங்களிலும் நீதிக்கான ஆவல் இயல்பாகவே இருக்கிறது. ஆனால், பலர் அநீதியை எதிர்க்க அஞ்சி மௌனம் காக்கின்றனர். தங்களின் மனக்குமுறல் வெளியில் கேட்காத வண்ணம் கவனமாக அதை அடக்கி விடுகின்றனர். ஆனால், சிலரிடம் இந்த ஆவல் வேட்கையாக மாறி வெகுண்டு எழுகிறது.
நீதியின் ஆதாரமும் காவலரும் இறைவன் தானே? எனவே, இறைவன் விதைக்கும் விதைதான் இவர்கள் மனதில் விழுந்து, நீதிக்கான வேட்கை எனும் விருட்சமாக வளர்கிறது.
அது என்ன நிறைவு
பெரும்பாலும் அநீதி இழைப்போருக்கு அதிகாரமும் பணமும் செல்வாக்கும் இருப்பதால், அவற்றைப் பயன்படுத்தி, நீதி கேட்டு போராடுபவர்கள் மீது பொய்க் குற்றம் சாட்டி, சிறை, சித்திரவதை, கொலை போன்ற துன்பங்களை அவர்கள் மீது சுமத்துகின்றனர்.
நீதியை நிலைநாட்டும் இறைவன் இவ்வுலகில் நீதிக்காக துன்புறுத்தப்படுவோருக்கு விண்ணரசில் இடம் தருவார் என்பது நாம் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று. ஆனால், நீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் நிறைவு பெறுவர் என்கிறார் இயேசு. அது என்ன நிறைவு? அவர்கள் பேச முயன்றதால், போராடத் துணிந்ததால் பலருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையே அவர்களுக்குக் கிடைக்கும் மனநிறைவு. அவர்களது போராட்டம் அவர்களுக்குத் துன்பம் தந்தாலும் பலருக்கு அது துணிவும் ஊக்கமும் உற்சாகமும் தந்து நீதிக்கான போராட்டத்தில் அவர்களையும் சேர வைக்கும் என்ற எண்ணம் தரும் மகிழ்ச்சி.
நீதிக்கான தங்களது செயல்பாடுகள் இறைவனை மகிழ்விக்கும் என்ற உறுதி. நீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்டோரும் நீதிக்காகத் துன்புறுவோரும் பேறுபெற்றோர் என்றால், அநீதி இழைப்போரும் அவர்களுக்குத் துணைநிற்போரும் கேடுகெட்டோர். காரணம், நீதியின் ஆதாரமான இறைவன், நீதி மறுப்போரை நிச்சயம் ஒருநாள் தண்டிப்பார்.
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com