துறவு மேற்கொண்டவர்கள் வனாந்திரங்களிலும், குகைகளிலும் தனிமைத் தவத்தில் ஈடுபட்டு தம்மைச் சுற்றி புற்று வளர்ந்திருப்பதுகூடத் தெரியாமல் நிட்டையில் மூழ்குவது புதிய செய்தி அல்ல. ஆனால் வீட்டிலிருந்து சாலைக்கு வந்து சாலையிலேயே ஏகாந்தத்தில் நடந்தபடி நிட்டையில் மூழ்கிய சித்தர் ஒருவர் இருந்தார். அவரை மக்கள் ரோட்டுச்சாமி என்றே அழைத்தனர்.
ரோட்டுச்சாமியின் பூர்வாசிரமப் பெயர் சிவராமகிருஷ்ணன். மயிலாடுதுறை அருகே மாதிரிமங்கலம் கிராமத்தில் ஏழைப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிக் கல்வி முடித்து ஆசிரியர் பணிபுரிந்தபோது திருமணம் ஆயிற்று. திருவண்ணாமலையில் பணிபுரிந்தபோது இல்லறத்தின் மீதான பற்று அறுந்தது. திருவாரூர் அருகில் உள்ள கொல்லுமாங்குடிக்குப் போய்ச் சேர்ந்தார்.
அவரது புறத்தோற்றமும், அமைதியும், ஏகாந்த ஒடுக்கமும் கண்ட மக்கள் அவரை மகானாகவே கருதி வணங்கி நின்றனர். கொல்லு மாங்குடியிலிருந்து கும்பகோணம் ரயில்வே கேட் வரை பலமைல் தூரம் தினமும் நடந்து திரும்பலானார். அவரது நாள், நெடுஞ்சாலையில் தொடங்கி நெடுஞ்சாலையில் முடிவுற்றது.
பராக்குப் பார்
நெடுஞ்சாலையில் நடக்கும்போது கண்ணுக்குப் புலப்படும் காட்சிகளைப் பற்றற்ற தன்மையுடன் பராக்குப் பார்ப்பதுபோலப் பார்த்து பழகினால், துறவு நிலை எய்தலாம் என்பது கும்பகோணம் குருநாதர் சாது பொன் நடேசன் உபதேசங்களில் ஒன்று.
நெடுஞ்சாலையில் நடப்பது ஒரு கிளர்ச்சி தரும் அனுபவம். ஏதேனும் மலையை நாடியோ, சிலையைத் தேடியோ யாத்திரை செல்வோரின் நடையை கவனித்திருக்கிறீர்களர? வேண்டுதலில் விருப்போ, வேண்டாமையில் வெறுப்போ இன்றி நடக்கும் அவர்களின் கால்களின் நடையில் வேகமோ பதற்றமோ இராது. சாலையிலும் சாலையின் இருமருங்கும் எதை எதையோ நாடிச் சாடிச் செல்லும் மனிதக் கூட்டத்தை கவனித்தபடி செல்லும் தேசாந்திரியின் பார்வை அடிவானத்தில் படிந்து கிடக்கும். தூரத்தே தார்ச் சாலையின் முடிவில் கானல் நீரலைகள் அவனைச் சலனமுறச் செய்வதில்லை.
வழியெங்கும் மர நிழல்கள், குளத்தங்கரைகள், ஏரியோரங்கள், கண்ணைக் கரிக்கும் சுடலைத்தீயின் புகை, தலைக்குமேல் கிளிக்கூட்டம், நாரைகளின் ‘கிராக்’, ‘கிராக்’ எல்லாம் ஏகாந்தச் சிலிர்ப்புக்குச் சுருதி கூட்டும். எல்லாவற்றுக்கும் மெளன சாட்சியாக நெடுஞ் சாலை துணையாக நீண்டு கொண்டிருக்கும்.
நடந்தேன், நடக்கின்றேன் நடந்து நடந்தேகுகின்றேன் என்ற புதுமைப்பித்தன் கவிதை வரிகளின் உணர்வு பிடர்பிடித்து நம்மை உந்திச் செல்லும்.
சாமித்துவம் அல்ல, சாதாரணத்துவம்
சுவாமிகள் நிகழ்த்தியதாகக் கூறப்படும் சித்து விளையாட்டுகள், அற்புதங்கள், அமானுஷ்யத் தோற்றங்கள் இவற்றை சலித்துவிட்டுப் பார்த்தால், மிஞ்சுவது சக மனிதனை நேசிக்கும் ஒரு எளிய மனிதனின் பிம்பமே ஆகும். சுவாமிகள் சாலையில் நடந்து போகும் சாதாரண மனிதர்களில் ஒருவராகவே தம்மை அடையாளம் காட்டினார். உடம்புக்கும் மனத்துக்கும் மருந்தை நாடி அவரிடம் வருவோர் அவரைச் சாலையிலேயே சந்தித்தனர்.
மனிதக் கூட்டத்திலிருந்து பிரிந்து நிற்கும் ஒரு மனிதனே அவர்களுக்குத் தேவைப் பட்டான். மனித சக்தியை மீறிய ஒரு சக்தியைக் கொண்டவராக, அவரை நம்புவதில் அவருக்கு ஏதும் நஷ்டம் இல்லை. சாமித் துவத்தை சாலைக்கு ஏற்றவும் அவர்கள் தயங்கவில்லை.
அவரை ரோட்டுச்சாமி என்று அழைக்கலாயினர். சாலை வழியே நடந்து செல்லும்போது ஏதேனும் ஒரு கடையில் வாழைப்பழம் வாங்குவதற்குக் கைநீட்டினாலும் போதும்; தங்களின் வியாபாரம் வானளாவ வளர்ந்துவிடும் என்ற அவர்களது நம்பிக்கையின் தூசு தம்மீது படியாமல் விலகிச் செல்வது அவர் வழக்கம்.
இதனால் அவர் உண வின்றியும் உறக்கமின்றியும் நடக்க நேரிட்டது. நெடுஞ்சாலை ஓரமாகவே நிட்டையில் அமரும்படி ஆயிற்று. ஆற்றங் கரை ஓரமும், சுடுகாடுகள், ரோட்டு ஓரமும் அவர் படுத்துக்கிடப்பார்.
சாலையில் தன்னிலை மறந்து நடந்துசென்ற சித்தரை காவல்துறை அதிகாரி ஒருவர் விரட்டிச் சென்றிருக்கிறார். மெல்லத் திரும்பிய ரோட்டுச் சித்தர் காவல்துறை அதிகாரி வாங்கிய லஞ்சம் உட்பட எல்லா குற்றங்களையும் அடுக்கிக் கொண்டுபோக அதிகாரி மன்னிக்கச் சொல்லி மன்றாடியிருக்கிறார். தன்னளவில் ரோட்டோரம் அமர்ந்து தவத்தில் அமர்ந்தாலும் தங்களின் துயர் தீர்க்க மக்கள் அவரது நிட்டையைக் கலைத்தனர். அப்போதெல்லாம் மக்களுக்கு உதவிட அவர் தயங்கியதே இல்லை.
மாதிரிமங்கலம் கிராமத்தில் உள்ள அவரது அதிஷ்டானத்தில் அமைதியாக நிட்டையில் ஆழ்ந்துள்ளார் ரோட்டுச் சித்தர்.
(தேடல் தொடரும்)
தஞ்சாவூர்க்கவிராயர்
தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com