எளிதில் இழக்கக்கூடிய இந்த வாழ்க்கையைப் பொருள் திரட்டுவதற்கான ஒரு தொடர் ஓட்டம் என நினைத்துக்கொண்டு செயல்படுவோர் எவ்வாறு ஏமாளிகளாக இருக்கிறார்கள் என்பதை இயேசு தன் மலைப்பொழிவில் சுட்டிக்காட்டினார்.
“மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம்” என்று அறிவுறுத்தினார் இயேசு. காரணம், இங்கு சேர்த்து வைக்கும் யாவும் தொலைந்துவிடும், அழிந்துவிடும் என்றார். “விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்” என்று சொன்ன இயேசு, அது என்றைக்கும் அழிவதில்லை என்றார்.
நேர்மையான வழிகளில் கடுமையாக உழைத்து, நமது தேவைகளுக்காகவும், நம்மைச் சார்ந்திருக்கும் நமது குடும்பத்தினரின் தேவைகளுக்காகவும் பணம் சம்பாதிப்பதைத் தவறென்று இயேசு ஒருபோதும் சொல்லவில்லை. அந்த நடைமுறை சரியானது மட்டுமல்ல, நமது கடமையும்கூட.
மக்கள் பணியையே தன் வாழ்வாக ஏற்றுக்கொண்டோருக்கு பணத்துக்காக உழைக்க நேரம் கிடைப்பதில்லை. இத்தகையோர் தங்கள் தேவைகளை நிறைவேற்ற பிறர் மனமுவந்து தருவதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
இயேசு இப்படித்தான் வாழ்ந்தார். ஊருக்கு வெளியே இருந்த தொழு வத்தில்தான் அவரது தாய் மரியாள் அவரைப் பெற்றெடுத்து, விலங்கு களுக்குத் தீவனம் வைக்கும் தீவனத் தொட்டியில் கிடத்தி னார். சொந்த வீடு என்று தனக்கு எதுவுமில்லை என்பதை உணர்த்த, “மனுச குமாரனுக்குத் தலைசாய்க்க இட மில்லை” என்றார். சொந்த நிலபுலன்கள் அவருக்கு எதுவுமில்லை. தொடர்ந்த வருமானம் என்று ஏதுமில்லை.
அப்படியானால் பசி, ஆடையின்மை போன்ற வறுமையின் கொடுமைகளிலிருந்து இயேசு எப்படித் தப்பினார்? அவரையும் அவரது பணியின் நோக்கத்தையும் புரிந்துகொண்டவர்கள், அவரிடம் அன்பு செலுத்தியவர்கள், அவரைப் பின்பற்றியவர்கள் மனமுவந்து தந்த கொடைகளே இயேசு தன்மதிப்போடும் மாண்போடும் வாழ உதவின.
ஏதாவதொரு தருணத்தில் முக்கியமான ஒரு நிகழ்வுக்கு பிறரின் உடைமைகளை இயேசு கேட்டுப்பெற்றார். படகில் இருந்தவாறு கரையில் அமர்ந்திருந்த மக்களோடு பேச, சீடர்களின் படகைக் கேட்டார். எருசலேம் நகருக்குள் நுழைய இன்னொருவருக்குச் சொந்தமான கழுதைக்குட்டியைக் கேட்டார். பாஸ்கா எனப்பட்ட யூதர்களின் பெருவிழாவன்று தன் சீடரோடு விருந்துண்ண ஒரு நபரின் வீட்டு மாடியறையை ஒதுக்கித் தருமாறு கேட்டார். அவரை ரகசியமாய்ப் பின்பற்றிய ஒரு செல்வந்தருக்குச் சொந்தமான கல்லறையில்தான் இயேசு புதைக்கப்பட்டார்.
இப்படி வாழ்ந்த இயேசுவுக்கு “மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்துவைக்க வேண்டாம்” என்று சொல்வதற்கு தார்மிக உரிமை இருக்கிறது.
ஆனால் சிலர் தந்திரமாக என்ன சொல்லலாம், ‘சொத்து சேர்ப்பதே எங்கள் வாழ்வின் குறிக்கோள். ஆனால், நாங்கள் கடவுளையும் மறக்க மாட்டோம். பணம், பணம் என்றே நாங்கள் அலைந்தாலும், அவ்வப்போது ஆலயம் செல்வோம், வழிபடுவோம், சமயத் திருவிழாக்களில் உற்சாகமாகக் கலந்துகொள்வோம்’ என்பதே பலரின் மனநிலையாக இருக்கலாம்.
இவர்களுக்கு இயேசு சொன்னது என்ன? “நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.” காரணம், கடவுளும் செல்வ மும் எந்த அளவுக்கு நேர்மாறானவை, ஒன்றுக்கொன்று எதிரானவை என்றால், நீங்கள் ஒரே நேரத்தில் இருவருக்கும் பணிவிடை செய்ய இயலாது என்று இயேசு தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
தராசின் ஒரு தட்டில் கடவுளை வைத்தால், மறு தட்டில் யாரை வைக்க வேண்டும்? கடவுளுக்கு இணையான, சமமான ஒருவரைத் தானே? ஆனால் கடவுள் ஈடு இணையற்றவர். நேர் நிகரில்லாதவர். அப்படியிருக்க, இயேசு ஏன் தராசின் ஒரு தட்டில் கடவுளை வைத்துவிட்டு மறு தட்டில் செல்வத்தை வைக்கிறார்? மனிதரை மதிமயக்கி, தன் அடிமைகளாக்கும் ஆற்றல் செல்வம், சொத்து, பணத்துக்கு இருப்பதால்தான்.
யாரெல்லாம் செல்வத்துக்கு அடிமையாகிவிட்டவர்கள்? எப்போது ஒருவருக்கு காசே கடவுளாகிவிடுகிறது? இதற்கு நேர்மையான பதிலைக் காண இயேசுவே ஒரு வழிமுறை சொன்னார்: “உங்கள் செல்வம் எங்கே உள்ளதோ, அங்கேதான் உங்கள் உள்ளமும் இருக்கும்.”
எதை நமது செல்வம் என்று கருதுகிறோமோ, எது நமக்கு மிக முக்கியம் என்று நம்புகிறோமோ, அதைச் சுற்றியே நம் எண்ணங்கள் வலம் வரும். அதற்கே நம் நேரத்தின் பெரும்பகுதியைச் செலவிடுவோம். அதற்கு ஒரு ஆபத்து என்றால் அலறுவோம். அதை இழக்க நமக்கு ஒருபோதும் மனம் வராது. கஞ்சத்தனத்துக்குக் காரணம் இப்போது புரிகிறதா?
செல்வத்துக்கும் பணத்துக்கும் அடிமைகளாகிவிட்டவர்கள் பட்டியலில் கஞ்சர்கள் மட்டுமல்ல, வேறு பலரும் இடம்பெறுவார்கள். பணத்துக்காக உறவுகளைத் தொலைப்பவர்கள், பணத்துக்காக நேர்மை, இரக்கம், மனிதநேயம் போன்ற உயரிய விழுமியங்களைத் துறப்பவர்கள், காசுக்காக கடமைகளை மறுதலிப்பவர்கள், பணத்துக்காக சக மனிதர்களை ஏமாற்றவோ துன்புறுத்தவோ துணிவார்கள், லஞ்சம் இல்லாமல் எதையும் செய்ய மறுப்பவர்கள்… என்று இந்தப் பட்டியல் நீளும்.
பணமிருந்தால் போதும், எல்லா வற்றையும் வாங்கிவிடலாம் என்ற பொய்க்குப் பலியாகும் பேதைகள்தான், இந்தப் பட்டியலில் இடம்பிடிக்கும் ஏமாளிகள். ஏன் இவர்கள் ஏமாளிகள்? பணத்தால் வாங்க முடியாதவை பல. மகிழ்வும் நிறைவும் தருகிற வாழ்க்கைக்கு இன்றியமையாத சில காரியங்களைக்கூட பணத்தால் வாங்க இயலாது என்பதை இவர்கள் உணர்வதில்லை.
பணத்தைக் கொண்டு கட்டில் வாங்க லாம்; தூக்கத்தை வாங்க இயலாது. உணவை வாங்கலாம், மருந்துகள் வாங்கலாம்; உடல்நலத்தை வாங்க இயலாது. விலையுயர்ந்த உடைகள் வாங்கலாம்; அழகை வாங்க இயலாது. அடிவருடிகளைப் பணத்தால் வாங்கலாம்; உண்மையான நண்பர்களை வாங்க இயலாது. பாலுறவை வாங்கலாம்; அன்பை வாங்க இயலாது. அனைத்துக்கும் மேலாக, பணத்தைக் கொண்டு இறையருளையோ விண்ணகத்தையோ வாங்க ஒருபோதும் இயலாது. எனவேதான், கிடைத்தற்கரிய வாழ்வை பணத்துக்காக தொலைப்பவர்களைப் போன்ற ஏமாளிகள் வேறு யாருமில்லை.
சரி, விண்ணகத்தில் செல்வம் சேர்த்து வைப்பது எப்படி? இன்னொரு முறை இயேசு இதற்கான பதிலைத் தெளிவாகச் சொன்னார். பசியுடன் இருப்பவர்களுக்கு உணவு கொடுப்பது, தாகமாக இருப்பவர்களின் தாகத்தைத் தணிப்பது, அந்நியரை வெறுக்காமல் ஏற்றுக்கொள்வது, ஆடையின்றி இருப்பவர்களுக்கு ஆடை தருவது, நோயுற்றிருப்பவர்களைக் கண்காணிப்பது… இவைதான் விண்ணகத்தில் நாம் சேர்த்து வைக்கும் செல்வம். இந்த மனிதநேய செயல்களுக்காக நாம் இங்கே பணத்தைக் கொடுக்கக் கொடுக்க, அங்கே நமது கணக்கில் செல்வம் கூடிக்கொண்டே போகும்.
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: majoe2703@gmail.com