அகத்தைத் தேடி புறப்பட்டவர்கள் உலகின் பெரிய பதவிகளை அதிகாரங்களைத் துறந்து எளிய வாழ்க்கையில் ஈடுபட்டார்கள்; அரச போகத்தைப் பலர் துறந்தார்கள். மட்டற்ற செல்வத்தை மதியாமல் அவற்றை விட்டுச் சென்றார்கள்; அரச பதவியை உதறித் தள்ளினார்கள். புத்தனைப் போல் அன்பு மனைவி, அருமைக் குழந்தை களை விட்டுப் பிரிந்தவர்கள் பலர்.
இவர்களுக்கெல்லாம் கிடைத்த இன்பம் எது? அந்த இன்பத்தை அனுபவித்தவர்கள் ஏன் அதை விளக்க முடியாமல் மௌனம் அடைந்தனர்.
அந்த இன்பம் உனக்கு உள்ளே இருக்கிறது; அதைத் தேடி வெளியே போக வேண்டாம்; அது ஓர் உள்முகப் பயணம் என்கிறார் பண்டிட் கண்ணையா யோகியார். இவர் ஏறத்தாழ 108 ஆண்டுகள் இந்தப் பூவுலகில் வாழ்ந்தவர்.
கோவிலுக்கு ஓடிய சிறுவன்
மனத்தைக் கட்டுப்படுத்தி அதன் கவனத்தை சித்தத்துள் ஒடுக்கி சித்த விருத்திகளைத் தடுத்தால் நாம் நம்மை கடவுளாகக் கண்டு அகம் பிரம்மாஸ்மி என்று உணர்வோம் என்பது பண்டிட் கண்ணையாவின் வாக்கு.
1880-களில் கோவையில் பிறந்த பண்டிட் கண்ணையா பிறந்ததிலிருந்தே வெறித்த பார்வையும் ஏக்கமுமாக இருந்தார். இதனால் அவரது பெற்றோர் விசனமுற்றனர்.
திண்ணையில் உட்கார வைத்து தெருக்காட்சிகளில் லயிக்குமாறுச் செய்து சிறுவனிடம் உயிர்ப்பை ஏற்படுத்த முயன்றனர். அவனோ, தெருவில் சென்ற பரதேசிகள், சாதுக்களின் பின்னால் ஓடுவான். ‘சாமீ’, ‘சாமீ’ என்றுஅவர்களைத் தொட்டு இழுப்பான். "சாமி கோவிலில் இருப்பார், போய்ப் பார் " என்று சொல்லிப்போன ஒரு பண்டாரத்தின் வாக்கை அப்படியே ஏற்றுக் கோவிலுக்கு ஓடினான் அந்தச் சிறுவன்.
பள்ளிக்குச் செல்லாமல் கோவிலில் சுற்றித் திரிந்த சிறுவனிடம், சாமி இரவில்தான் வருவார் என்று கூறி அர்ச்சகர் விரட்டிவிட்டார். அந்தி வேளையில் கோவிலுக்குள் நுழைந்து அங்கேயே ஒளிந்துகொண்டான் சிறுவன். இரவில் காண்டாமணி விளக்குகளின் மங்கலான வெளிச்சத்தில் கற்சிலைகள் உயிர்பெற்று கண்ணையாவின் கண்முன் உலாவினவாம். இந்த அனுபவத்தைக் கண்ணையா யோகியார் விவரித்திருக்கிறார். உயிர்பெற்ற சிலைகள் தன் அருகே வந்து உற்றுநோக்கிச் சென்று மீண்டும் சிலைகள் ஆயினவென்றும், அவை சிலிர்த்தெழுந்து கடவுளரின் பிம்பங்களாகத் தன் முன்னே நடமாடிய அமானுஷ்யத்தை மறக்கவே முடியாது என்றும் நினைவுகூர்ந்துள்ளார் பண்டிட் கண்ணையா.
சித்தர்களின் அறிமுகம்
சாது ஒருவர் மிகச் சிறிய வயதிலேயே கோவைக்கு அருகில் உள்ள நீலமலைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த சித்தர் கூட்டத்தை கண்ணையாவுக்கு அறிமுகப்படுத்தினார். குறிப்பாக, அகத்தியமுனி, புலிப்பாணி முனிவர் போன்றோரை அங்கு காணவும் அவர்களிடம் நேரடியாகப் பல்வேறு யோக முறைகளைப் பயில்வதற்கும் திருவருள் கிட்டியது.
மானுடக் கண்களுக்கு அதிகம் புலப்படாத, கானகத்தின் மாய உலகில் கண்ணையா தனது பதினெட்டு ஆண்டுகளைக் கழித்தார்.
துறவிகள் அவரைக் கோவைக்கு மீண்டும் அனுப்பிவைத்தனர். குடும்பத்தின ருடன் சேர்ந்துகொண்ட கண்ணையா தமது சமஸ்கிருத புலமையாலும் தமிழ்க் கவிகளை இயற்றும் வல்லமையாலும் பண்டிட் கண்ணையா ஆனார். திருமணம் புரிந்துகொண்டு இல்லறத்தில் ஈடுபட்டார். தந்தையின் மறைவுக்குப் பின்னர் குடும்பத் தொழிலான நாடி ஜோதிடத்தைத் தொடர்ந்தார். படிப்படியாகப் பொருளீட்டும் உத்வேகம் குறைந்துவந்தது. கற்ற ஞானத்தை உலகுக்கு அளிப்பதே உவகையாக மாறியது. அவர் சென்ற இடமெல்லாம் சத்சங்கமாகின. ஜான் அலோசியஸ், ஷேக் தாவூத் எனப் பல மதங்களைச் சேர்ந்தவர்களும் இவருக்குச் சீடர்களாக இருந்தனர்.
மனம் என்பது ஆகாயத்தின் ஒரு பகுதி. சித்தம் என்பதே சித்தாகாசம் என்று சொன்னார் கண்ணையா யோகி. மானச யோகம் கற்பிக்கும் வகுப்புக்காகத் தனது ஆசிரமத்தில் உட்கார்ந்து சொற்பொழிவாற்றியபோது, மனமே உடலை விட்டு வெளியே போ என்று உத்தரவிட்டார் யோகியார்.
உடல் மரக்கட்டையாய் விறைத்தது. அவரது உயிரற்ற சடலம் அங்கு உட்கார்ந்திருந்தது. எல்லோரும் பயந்தபடி பார்த்திருக்க, மனமே வா, வந்துவிட்டாயா என்று மறுபடியும் உரையாடலானார். "எறும்பு, ஈ, ஏழை, பணக்காரன், ஞானி, மனிதன் என்று உயிரினங்கள் இப்படிப் பல்வேறு வேற்றுமைகளோடு பிறக்க அவை செய்த பாவ புண்ணியங்களே காரணமா?" என்று ஒரு சீடர் வினவினார். புலன்களுக்கு அப்பாற்பட்ட சூட்சும தத்துவம் அது என்றார் சுவாமிகள். உடல்நலம், நீண்ட ஆயுள், அழகு, விகாரம் எல்லாம் மனத்தால் ஏற்படுவன. மரணத்தைப் பற்றி அறியாதவன் மரிக்க மாட்டான் என்கிறது உபநிடதப் பழமொழி.
யத்பாவம் தத்வபதி
‘யத்பாவம் தத்வபதி’; எதை நீ பாவிக்கிறாயோ அது உனக்கு ஆகும் என்கிறான் கண்ணன் பகவத் கீதையில். மனத்தின் சக்திக்கு அளவில்லை என்று சொல்லி அதைத் தெளிவுபடுத்துகிறார் பண்டிட் கண்ணையா. ஒருவன் தன் மனத்தில் பூனையின் உருவத்தை நிலைப்படுத்தி அதற்குச் சக்தியைக் கொடுத்தால் உண்மையாகவே ஒரு பூனை, ஸ்தூலத்தில் உண்டாக்கப்பட்டு வெளிவரும்.
பூனையின் உயிர், மனம், உணர்வுகளின் அமைப்பை அறிய தியான நிலையிலேயே பூனையை அறிந்தாக வேண்டும்.
அறிபவனின் மனம் அப்படியே அறியப்படும் பொருளாக மாறி நிற்பதால், அப்பொருளின் ஸ்தூல சூட்சும அமைப்புகள் முழுவதும் மனத்தில் பதிகின்றன. அணிமா, லகிமா, மஹிமா, கரிமா, ஈஸித்வம், வஸத்வம், ப்ராகாம் என அட்டமா சித்திகளை நன்கறிந்த பண்டிட் கண்ணையா அவற்றை வேண்டாம் என்று விலக்கிவிட்டார். தன்னை அறிய அவை உதவாது என்பது அவர் தீர்ப்பு.
சித்தர்களும் சித்திரக் குள்ளர்களும்
திருப்பதி காட்டுப்பகுதியில் தனது சீடர்களோடு சித்தர்களையும் அவர் காண்பித்ததாகக் கூறப்படுகிறது. நேத்திர தீட்சை, ஸ்பரிச தீட்சை, கலந்த தீட்சை, பாத தீட்சை என்று பல்வேறு திட்டங்களை கற்றுத்தேர்ந்த கண்ணையா சுவாமிகள் மானச தீட்சை மூலம் வெளிநாட்டு வாழ் சீடர்களின் நோய்களைக் குணப்படுத்தியிருக்கிறார். மக்களின் நன்மைக்காக வாழ்ந்து தமது 108ஆவது வயதில் உடலை உதிர்த்தார் பண்டிட் கண்ணையா யோகியார்.
(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com