எல்லோரும் தன்னைப் பார்க்கு மாறு, சொல்வதையும் கேட்பதற்கு எளிதாக இருப்பதற்காக, இயேசு ஒருமுறை மலை மீது ஏறி அமர்ந்து, தனது போதனைகளைச் சொல்லும் பகுதிதான் ‘மலைப்பொழிவு’. நாம் பகைமையை எதிர்கொள்வது தொடர்பிலானது.
நம்மால் இயன்றதை எல்லாம் கவனமாக மேற்கொண்டு, நாம் தப்பிக்கவேண்டிய பேராபத்து பகையுணர்வு. நம் மனத்தில் இருக்கும் பகை உணர்வின் இலக்கு இன்னொருவர் என்றுதான் நாம் நினைக்கிறோம். ஆனால், நமக்குள் இருந்து நம்மை மெல்ல மெல்லக் கொல்லும் நஞ்சு அது.
இதை எளிதாகப் புரிந்துகொள்ள உதவும் ஒரு நல்ல எடுத்துக்காட்டை கௌதம புத்தர் சொன்னார். இன்னொருவர் மீது எறிய வேண்டும் என்பதற்காக, தீயில் வெகுநேரம் கிடந்து வெப்பத்தில் தகிக்கும் ஒரு கல்லைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு, எறிவதற்குச் சரியான தருணம் பார்த்துக் காத்திருக்கும் முட்டாளைப் போன்றவர் பகையுணர்வைத் தனது நெஞ்சில் சுமந்து திரியும் மனிதர் என்றார் அவர். அதை அவன் எறிந்து இன்னொருவர் காயப்படுவதற்கு முன்பே தன் கை எரிந்து புண்ணாகிவிடும் என்பதை அவன் உணர்வதில்லை.
இவ்வளவு ஆபத்தான பகையை நம் மனதி லிருந்து அகற்றி, அதன் பாதிப்புகள் ஏதுமின்றி நாம் தப்பித்துக்கொள்வதற்கு, இயேசு சில வழிமுறைகளை மலைப் பொழிவின்போது சொன்னார்.
தப்பிக்கும் வழிமுறைகள்
பகை எங்கே தொடங்குகிறது? மனத்தில் தோன்றும் கோபத்தை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல், கட்டுப்பாடுகளை இழந்து, வன்முறையில் இறங்கி, யார் மீது நமக்குக் கோபமோ அவரைத் தாக்கிக் காயப்படுத்துவதுதான் பகையின் ஆரம்பம். உடல் சார்ந்த வன்முறை ஒருவரின் உயிரைப் பறிக்கலாம். உடலைக் காயப்படுத்தலாம். சொல் சார்ந்த வன்முறை ஒருவரின் மனத்தைக் காயப்படுத்துகிறது. எளிதில் ஆறாத இந்த மனக் காயத்தைத்தான் 'நாவினால் சுட்ட வடு' என்கிறார் திருவள்ளுவர்.
இதனால்தான் இயேசு இப்படிச் சொன்னார்: “கொலை செய்பவன் மட்டுமல்ல, தன் சகோதர, சகோதரி களிடம் சினம் கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார். கடும்கோபத்தில் கண்டபடி பேசி, பிறரின் மனத்தைக் காயப்படுத்தும் நபர்களை எச்சரிக்கும் விதத்தில் தன் சகோதரனையும் சகோதரியையும் முட்டாள் என்று இகழ்வோர் தண்டனைக்கு உரியவர். ‘அறிவிலியே’ என்று சொல்லி இன்னொருவரை அவமானப்படுத்து வோர் எரி நரகத்தில் தண்டனை அனுபவிப்பர்.”
கோபத்தில் நம் சக மனிதர்களை நாம், 'முட்டாளே', 'அறிவிலியே' என்று அழைப்பது இவ்வளவு பெரிய குற்றமா? இதற்கு இவ்வளவு கடுமையான தண்டனையா என்று சிலர் கேட்கலாம். அவர்கள் மறந்துபோவது என்ன?
சகிப்புத்தன்மையின் அவசியம்
கோபத்தில் கவனமின்றி, கட்டுப்பாடின்றி பேசி இன்னொருவரின் மனத்தைக் காயப்படுத்தத் தயங்காதவன் இன்னொரு தருணத்தில், இன்னொரு சூழலில் தன் நாவுக்குப் பதிலாக கத்தியையோ துப்பாக்கியையோ எடுத்து வன்முறையில் ஈடுபடத் தயங்க மாட்டான். அந்த வன்முறை, கொலையில் முடியலாம் என்பதை அவனே உணர்ந்திருக்க மாட்டான்.
அப்படி வன்முறையில் இறங்கும் ஆத்திரக்காரனை நிறுத்தக்கூடியது எது? சகிப்புத்தன்மை, பொறுமை, இரக்கம். இதனால்தான் இயேசு தன் சீடர்களிடம், “உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் காட்டுங்கள்” என்றார்.
பகைமையை பகைமையால் வெல்ல இயலாது. அன்பு மட்டுமே பகையை வெல்ல முடியும் என்பதால், “உங்கள் பகைவருக்கும் அன்பு காட்டுங்கள். உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்” என்றார் இயேசு.
கோபம் மறையாமல் உள்ளத்தில் நெடுங்காலம் தங்கிவிட்டால் அது பழிவாங்கும் உணர்வாக உருமாறி, நம் மனத்தைப் பாதிக்கத் தொடங்குகிறது. நம் உறக்கத்தை மட்டுமல்ல, நம் உள நலத்தையும் உடல் நலத்தையும் கெடுக்கும் இந்தப் பழிவாங்கும் உணர்வு எப்போது மறையும்? நாம் பகைவராகக் கருதி வெறுக்கும் மனிதரை மன்னிக்கும் போது. எனவேதான், “உங்கள் பகைவர்களை மன்னித்து இரக்கம் காட்டி, அவர்களுக்காக இறைவனிடம் வேண்டுங்கள்” என்றார் இயேசு.
பிறரையும் நம்மையும் ஒருசேர அழிக்கும் பகைமையை மேற்கொள்ள இறை நம்பிக்கையும் வழிபாடும் உதவக்கூடும் என்பதனை இயேசு தன் மலைப்பொழிவில் சுட்டிக்காட்டினார்.
மன்னிப்பு வேண்டாத மனிதன் யார்?
தான் செய்த தவறுகளை நினைத்து மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு வேண்டாத மனிதர் யார்? ஆனால், எப்போது இறைவன் நம்மை மன்னிப்பார்? “மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னித்தால், உங்கள் இறைத்தந்தை உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்கா விட்டால் இறைவன் உங்களை மன்னிக்க மாட்டார்” என்ற உண்மையை இயேசு நினைவுறுத்தினார்.
‘இறைவனுக்கு காணிக்கை செலுத்த நீங்கள் ஆலயம் வரும்போது, யாரோ ஒருவர் மீது இன்னும் கோபமோ பகையோ இருந்தால், உங்கள் காணிக்கைகளை அப்படியே ஆலயத்தில் வைத்துவிட்டு, அந்த மனிதரைத் தேடி அவருடன் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அதன்பின் ஆலயம் வந்து உங்கள் காணிக்கைகளைக் கொடுங்கள்’ என்றார் இயேசு. சக மனிதர் ஒருவரோடு சண்டையிட்டு, இன்னும் சமாதானம்செய்து கொள்ளாத ஒரு நபரின் காணிக்கையை எப்படி ஏற்பார் கடவுள்?
பரிசு ஒன்றை வாங்கிக்கொண்டு தந்தையின் பிறந்த நாள் அன்று, அதைக் கொடுத்து அவரை வாழ்த்தி, ஆசி பெற வருகிறான் மூத்த மகன். தன் இளைய மகனோடு சண்டையிட்டு அவர்களுக்குள் சமாதானம் இல்லை என்று அறிந்த தந்தை என்ன சொல்வார்? “நீங்கள் இருவரும் என் பிள்ளைகள். நீங்கள் இருவரும் நல்லிணக்கத்தோடு, மாறாத பாசத்தோடு இருந்தால்தான் என் மனம் மகிழ்ச்சியுறும். அந்த மகிழ்ச்சியை முதலில் எனக்குக் கொடு. பிறகு வந்து நீ உன் பரிசைத் தந்தால், நான் மகிழ்ச்சியோடு அதனை ஏற்றுக்கொள்வேன்” என்றுதானே அவர் சொல்வார்?
எனவே, கோபத்தைக் கட்டுப்படுத்தும் ஞானம், மன்னிக்கும் மனம் இவற்றோடு இறை நம்பிக்கையும் வழிபாடும்கூட பகைமை எனும் கொடிய நஞ்சை நாம் உட்கொண்டு அழிந்துபோகாமல் நம்மைக் காப்பாற்ற முடியும் என விளக்கி மலைப்பொழிவில் வழிகாட்டினார் இயேசு.
“பகை சூழும் இதயத்துச் சுவரை எல்லாம் - என் பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கிறேன்” என்று மன்றாடும் ஆலயப் பாடல் ஒன்று உள்ளது. அப்படித்தான் பகை சூழ்ந்திருக்கும் இதயச்சுவரை நாம் அன்பால் தகர்க்க வேண்டும்.
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com