ஆனந்த ஜோதி

செயலாக முதிரும் நம்பிக்கை

சாளை பஷீர்

இறை நம்பிக்கையானது ஓர் ஆன்மாவின் அந்தரங்க ஆசுவாசமாக சுருங்கி விடுவதிலிருந்தும், லௌகீகக் கறைகளுக்கு மேல் பக்தி மணமேற்றி மயக்கும் கணநேர விடுவிப்பாகவும் ஆகிவிடக் கூடாது என்பதிலும் இஸ்லாம் மார்க்கம் எச்சரிக்கையாக இருக்கிறது.

வாசனைத் திரவிய ஜாடியி லிருந்து பரவும் நறுமணம்போல் இறை நம்பிக்கை என்கிற வழிநடத்தும் கருவியிலிருந்து, நல்வாழ்வுக்கான வழிகாட்டுதல் சுகந்தமாகிக் கசிந்து இறங்குகிறது.

பணிவு, வீணிலிருந்து விலகுதல், இறைவனுடனான அந்தரங்க உரையாடல், விரயத்துக்கும் கஞ்சத்தனத்துக்கு மான பிரிகோடு, மூடர் தவிர்ப்பு, ஓர் இறைக் கொள்கை, அக்கிரமக் கொலையிலிருந்தும் ஒழுக்கக் கேடுகளிலிருந்துமான காப்பரண், பொய் சாட்சியத்துக்கு எதிர்ப்பு, கண்ணியமான நடத்தை , குருட்டுத்தனமான இறை நம்பிக்கை குறித்த சுட்டிக்காட்டுதல், வாழ்வின் சோதனைகளில் - இடர்ப்பாடுகளில் நிலைகுலையாத தன்மை என நல்லறங்களையும் நற்குணங்களையும் வரிசைப்படுத்தி, இவற்றின் தர்க்க முடிவாக நல்வாழ்வின் இறுதியான நிலையான வெகுமதியாக மறுமையில் கிடைக்கவிருக்கும் சுவனத்தை வாக்களிக்கிறது.

ஒரு நாளின் அல்லது ஒரு வாரத்தின் குறிப்பிட்ட காலத்துளிகளில் இறைவனுக்குக் கொடுக்க வேண்டியதை பொன், பொருள் காணிக்கையாகவோ அல்லது சில சடங்குகளின் வடிவிலோ செலுத்திவிட்டு வாழ்வின் எஞ்சிய நேரங்களில் இச்சை என்கிற தேவனிடம் சரண்டைவதை நெறிபிறழ்வாக, ஒழுங்கவிப்பாக இஸ்லாம் பார்க்கிறது.

மனிதர்கள் தனக்கு முற்றாக அடிபணிய வேண்டும் என்று விரும்பும் இறைவன் அந்த அடிபணிதலானது குருட்டுத்தனமான பக்தியாக தாழ்ந்துவிடாமலிருக்கவும் அறிவுறுத்துகிறான்.

பொன் சரடில் கோக்கப்பட்ட மணிமாலைபோல் இறைநம்பிக்கையின் ஒளியில் வழிநடத்தப்படும் அன்றாட வாழ்வின் நடைமுறை அறமானது, சுவனத்தில் போய் நிறையும் வகையில் அழகிய ஒத்திசைவுடன் கூடிப் பிணைகிறது.

இறை நம்பிக்கையின் விரிந்து பரந்த மறைவான பகுதியை தனது எளிய அறிவுகொண்டு அளக்க முயலும் மனிதன் புறக்கண் கொண்டு அறிந்தால் மட்டுமே, இறைமையை ஒப்புக்கொள்வேன் என அடம்பிடிக்கிறான்.

இந்த நிலையற்ற உலகின் நல்லதும் தீயதுமான செயல்பாடுகள் குறித்து வழிகாட்டி அதற்கேற்ப வெகுமதியையும் தண்டனைகளையும் இவ்வுலகிலும் மறுவுலகிலுமாக வழங்குவதன் வழியாகவும் புலன்களுக்கு உட்பட்டவற்றுக்கும் மறைவானவற்றுக்கும் இடையேயும் தொடர்புகளை மறுக்கவியலாத இயல்பு எனவும் நிறுவுகிறது இஸ்லாம் மார்க்கம்.

"நிலைகுலையாத தன்மையுடன் இருந்த காரணத்தால் இவர்களுக்கு (சுவனத்தில்) உன்னதமான மாளிகை நற்கூலியாக வழங்கப்படும். வாழ்த்தும் , ஸலாமும் கொண்டு அவர்கள் எதிர்கொண்டழைக்கப் படுவார்கள்” என்று குர் ஆனின் அல் ஃபுர்கான் அத்தியாயம் கூறுகிறது.

SCROLL FOR NEXT