ஆனந்த ஜோதி

பக்தி இசையால் உள்ளத்தை உருக்கும் குரல்

வா.ரவிக்குமார்

திரையிசையிலும் பக்திப் பாடல்கள் வாயிலாகவும் கேட்பவரின் உள்ளத்தை உருக்கும் பிரபாகர், சமீபத்தில் வெளியிட்டுள்ள முருகனின் 108 போற்றி பாமாலை கேட்பவர் நெஞ்சத்தில், வேலவனின் பெருமைகளை உணரவைக்கிறது.

சிங்கப்பூர், மலேசியாவில் பல்வேறு பக்தி இசை நிகழ்ச்சிகளை நடத்தி யிருக்கும் பிரபாகர், ஸ்விட்சர்லாந்தில் இசை படிக்கும் மாணவர்களுக்கு குரல்வளப் பயிற்சி அளிக்கும் நிபுணராகவும் பணிபுரிந்திருக்கிறார்.

பால்ராஜ், ரங்கநாதன், இசையமைப்பாளர் சரத் (பாலமுரளி கிருஷ்ணாவின் சீடர்) ஆகியோரிடம் இசை பயின்றவர் பிரபாகர். இசையமைப்பாளர் சந்திரபோஸ் இசையில் `கழுகுமலை கள்ளன்’ திரைப்படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். அதிலிருந்து தமிழ்ப் படங்களில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் (`முத்தினா கண்மணி’ பாடலை எஸ்.பி.பியுடன் இணைந்து பாடியிருப்பார்), இந்தி, வங்க மொழிப்படங்களிலும் பாடியிருக்கிறார்.

தமிழில் வெளிவந்த ராமாயணம், மகாபாரதம் தொலைக்காட்சி தொடர்களில் இவர் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. நௌஷத் இசையில் வெளிவந்த `அக்பர் தி கிரேட்’ தொடரின் டைட்டில் பாடலை இவர் பாடியிருக்கிறார். சாய் பாபா தொடரின் தொடக்கப் பாடலையும் பிரபாகர் பாடியிருக்கிறார்.

`தி லயன் கிங்’ அனிமேஷன் படத்தின் தமிழ் வெளியீட்டில் `டிமன்’ கதாபாத்திரத்துக்காக சர் எல்டன் ஜான் இசையில் பாடியிருக்கிறார். `தி பிரின்ஸ் ஆப் எகிப்த்’ ஆங்கிலப் படத்தின் மலையாள மொழிமாற்றம் செய்யப்பட்ட படத்தில் பைபிள் கதாபாத்திரமான மோசஸுக்கும் பிரபாகர் பாடியிருக்கிறார்.

மத நல்லிணக்கப் பாடல்கள்

இவர் `ஃபீனீக்ஸ் மெலடிஸ்’ என்னும் பெயரில் 150க்கும் மேற்பட்ட ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார். ரமண மகரிஷி எழுதிய 'அருணாசல அக்ஷர மணமாலை' பாடல்க ளுக்கும் இசையமைத்து ஒலிப்பேழையாக வெளியிட்டுள்ளார்.

இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதப் பாடல்கள் பலவற்றுக்கும் இசையமைத்துப் பல பாடகர்களை பாடவைத்து ஆல்பங்களாக வெளியிட்டுள்ளார். திருக்குறள், தேவாரம், திருவாசகம், திருவருட்பா பாடல்களுக்கு இசையமைத்து இவர் வெளியி்ட்ட ஆல்பங்களை கேட்ட குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்.

20 நாள்களில் 1,000 ஸ்லோகம்

திருசெந்தில் முருகனே..., செந்தில் வடிவேலனுக்கு..., வள்ளலார் அருளிய அருளார் அமுதே... உள்ளிட்ட பாடல்களையும் இவர் பாடி வெளியிட்டுள்ளார். அன்னை உமாதேவியின் திருவருளைப் போற்றி, காவ்யகாந்த கணபதி முனி அருளிய உமா சகஸ்ரம் சம்ஸ்கிருத ஸ்லோகங்களின் ஒரு பகுதிக்கு இசையமைத்து உஷா ராஜுடன் பாடி அண்மையில் வெளியிட்டிருக்கிறார் பிரபாகர். ஆயிரம் ஸ்லோகங்களைக் கொண்ட உமா சகஸ்ரம் தொகுப்பை கணபதி முனி 1907 நவம்பர் 26 தொடங்கி டிசம்பர் 15 முடிய, 20 நாள்களில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முருகனைப் போற்றி பழனியிலிருக்கும் முருகனடிமை கவிஞர் கு.செல்வராஜ் பாமாலையை எழுத, அதற்கு இசையமைத்துப் பாடி, யூடியூப் அலைவரிசையில் கார்த்திகை மாதத்தில் வெளியிட்டுள்ளார் பிரபாகர்.

முருகன் போற்றி காண: https://bit.ly/33OLVNA

SCROLL FOR NEXT