‘இன்று அனுமன் ஜெயந்தி’ என்று வீட்டின் திண்ணை இருட்டிலிருந்து பாட்டி சொன்னாள். அன்று பௌர்ணமியும்கூட. கேரளத்தில் காஞ்சன்காடு கிராமத்தில் 1884-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி பிறந்த அந்தக் குழந்தைக்கு விட்டல்ராவ் என்று பெயர் சூட்டினார்கள். ஆனால், அது விட்டல்ராவாக ஆகாமல் சுவாமி ராமதாஸ் என்ற மகானாக உலகில் அறியப்பட்டது.
‘விட்டல்ராவ் பள்ளிக்கு ஒழுங்காக வருவதில்லை. படிப்பில் அவனுக்கு நாட்டமில்லை’ என்று ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டினார்கள். பாடம் புகட்ட வந்தவன், பாடம் கற்பானோ? மாட்டுத் தொழுவத்தில் உள்ள பரணில் ஒளிந்துகொள்வதே அவனுக்குப் பிடித்தமானது. இலக்கியங்களும் காவியங்களுமே அவனுக்கு விருப்பமானவை. ஆங்கிலம் அவன் வசப்பட்டது. பள்ளிப்படிப்பு பாதியில் நின்றது.
வேலை கிடைக்கவில்லை. கிடைத்த வேலைகள் நிலைக்க வில்லை. வியாபாரத்தில் நஷ்டம். முப்பத்தாறு வயதில் வாழ்க்கைச் சூறாவளி அவனை தோல்விப் பாறைகளுக்குள் கொண்டுசென்று மோதியது. அந்த இளைஞனுக்குள் பற்றற்ற மனப்போக்கு ஏற்படலாயிற்று.
தந்தையே குருவுமானார்
சகோதரர் வீட்டில் குழந்தைகள் ராமநாம சங்கீர்த்தனம் செய்வது வழக்கம். குழந்தைகளுடன் உட்கார்ந்துகொண்டு ராமநாமம் சொல்லத் தொடங்கினான். தன்னை மறந்த லயம் வாய்த்தது. சுய உணர்வு போயிற்று. எங்கிருந்தாலும் ராமநாமமே அவனுக்குத் துணையாயிற்று. ராமபக்தரான அவன் தந்தையே அவனுக்கு குருவுமானார். ‘ஓம் ராம் ஜெயராம். ஜெய ஜெயராம்’ என்ற மந்திரத்தை அவனுக்கு உபதேசம் செய்தார். அவ்வளவில் விட்டல்ராவ் ராம்தாஸ் ஆனார். சாதுவின் கோலத்தில் தெருவில் சுற்றித்திரிந்த அவரை குடும்பத்துக்குத் திருப்ப முடியவில்லை.
நபிகள் நாயகம், புத்தர், யேசு கிறிஸ்து, நம் காலத்து காந்தியடிகள் அனைவரையும் ராமநாமத்தின் பரிபூரண இறைவடிவமாகக் கண்டார் சுவாமி ராமதாஸ்.
‘புதிய ஏற்பாடு', ‘ஆசிய ஜோதி', மகாத்மா காந்தியின் ‘யங் இந்தியா' இதழ்கள், ‘பகவத் கீதை', ‘புனித குரான்' ஆகிய நூல்கள் எப்போதும் அவருடன் இருந்தன. மற்ற மதங்களின் அவதார புருஷர்கள் வாயிலாக ராமன் பேசுவதாக ராமதாஸ் உணர்ந்தார். மனைவிக்கும் நண்பருக்கும் கடிதம் எழுதி வைத்துவிட்டு, ஒருநாள் அதிகாலை உலகியலிலிருந்து ராமதாஸ் விடைபெற்றார். ராமநாமத்தை மட்டுமே துணையாக வைத்துக்கொண்டு ராமனைத் தேடிப் புறப்பட்டுவிட்டார்.
ரயில் புறப்படும் வேளை அது எங்கு போகிறது என்று தெரியவில்லை, ஏறிக்கொண்டார். இறங்கிய இடம் ரங்கம். அரங்கனை வணங்கிவிட்டு மீண்டும் டிக்கெட் இல்லா ரயில் பயணம். இம்முறை ராமேஸ்வரம், சிதம்பரம், புதுவை, திருவண்ணாமலை, திருப்பதி, காளஹஸ்தி என்று ராமநாமம் இழுத்துக்கொண்டு போயிற்று.
விலக்கப்பட்டவர்களைத் தேடி
ஒரு ரயில் பயணத்தின்போது டிக்கெட் இல்லாத காரணத்தால் ஒரு ஸ்டேஷனில் இறக்கிவிட்டார் டிக்கெட் பரிசோதகர். ரயில் நின்று கொண்டிருந்தது. டிக்கெட் பரிசோதகர் ‘எங்கு செல்கிறீர்கள்?’ என்று கேட்டார்.
‘கடவுளைத் தேடி’ என்று அழகான ஆங்கிலத்தில் பதிலளித்தார் ராம்தாஸ். ‘கடவுள்தான் எங்கும் இருக்கிறாரே! ஏன் இப்படித் தேடிச்செல்ல வேண்டும்?’ என்று விடாமல் கேட்டார் டிக்கெட் பரிசோதகர். “எங்கும் இருக்கிறார் என்பதை நிலைநாட்டத்தான் இப்பயணம்” என்றார் ராம்தாஸ் புன்னகையுடன்.
‘இங்கே கடவுள் இருக்கிறாரா? நிலைநாட்டுங்கள் பார்க்கலாம்’. “இதோ கடவுள்” என்று டிக்கெட் பரிசோதகரைக் காட்டினார் ராம்தாஸ்.
டிக்கெட் பரிசோதகர் வயிறு குலுங்கச் சிரித்தார். “வாருங்கள்” என்று ரயிலில் ஏற்றிக்கொண்டு ஆன்மிக விஷயங்களை உரையாடி மகிழ்ந்தார் டிக்கெட் பரிசோதகர்.
மற்றொரு பயணம். சாதுக்களுடன் கல்கத்தா நோக்கி ரயிலில் சென்று கொண்டிருந்தார் சுவாமி. டிக்கெட் பரிசோதகர் வந்தார். அவர் ஒரு ஆங்கிலோ இந்தியர். ‘டிக்கெட் எங்கே?’ என்று கேட்டார். “நாங்கள் சாதுக்கள். பிச்சை எடுத்து உண்போம். டிக்கெட் எடுக்க எங்களிடம் பணமில்லை” என்று ஆங்கிலத்தில் கூறினார் ராம்தாஸ்.
டிக்கெட் பரிசோதகர் கோபத்துடன் சாதுக்களின் பைகளைக் கலைத்துப் போட்டார். ராம்தாஸின் பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தார். ‘புதிய ஏற்பாடு’ என்ற தலைப்பு அதில் மின்னிட்டது. ‘இதை வைத்து என்ன செய்வீர்?’ என்று கேட்டார் டிக்கெட் பரிசோதகர். ‘எல்லாமும்' என்றார் ராம்தாசர்.
‘யேசுவை நம்புகிறீரா?’
‘ஏன் கூடாது?’ யேசு கிறிஸ்துவும் இறைத்தூதரே!’ என்ற ராமதாசர் பைபிளின் வாசகங்களை ஒப்பித்தார்.
ராமதாசரின் பதில் ஆங்கிலோ இந்திய டிக்கெட் பரிசோதகரின் இதயத்தைத் தொட்டது. ராமதாசருக்கும் உடன்வந்த சாதுக்களுக்கும் வசதியான இருக்கைகள் தந்து வழியனுப்பிவைத்தார்.
தட்சிணேசுவரம், தாரக்நாத் கோயில், காசி, மதுரா, பிருந்தாவனம் என்று பயணம் தொடர்ந்தது. செல்லுமிடமெல்லாம் தயக்கமே இல்லாமல் சுடுகாடுகளிலும், தாழ்ந்த சாதியினர் என்று விலக்கப்பட்டவர்களின் குடிசைகளிலும் தங்கினார். செல்வந்தர்கள் மனமுவந்து அளித்த வசதியான தங்கு மிடங்களை தவிர்த்தார்.
குற்றமும் தண்டனையும்
இந்தியப் பயணத்தின் போது ஒரு குறிப்பிட்ட ஊரில் பக்தர்களிடம் ராமதாஸ் கூறிய உபதேச மொழிகளை ஒரு நபர் பழித்துப் பேசினார். மறுநாள் பேச முடியாமல் அவரது தொண்டை இயல்பற்று கட்டிக்கொண்டுவிட்டது.
தவறினை உணர்ந்த அந்த நபர், ராமதாஸிடம் ஓடோடி வந்து ‘கடவுள் தந்த தண்டனை’ என்று தொண்டையைக் காட்டி அழுதார். ‘கடவுள் ஒருபோதும் தண்டிப்பதில்லை. தீமை என்று கூறுவது நாம் உண்டாக்கியவையே!’ என்றார் ராமதாஸ்.
ராமதாஸரின் கரத்தைப் பற்றி கழுத்தின் மீது வைத்துக்கொண்ட அந்த மனிதரின் தொண்டை சற்று நேரத்தில் சரியாகிவிட்டது. ‘பார்த்தீர்களா? கடவுள் அன்பே உருவானர்! நான் அல்ல; உங்கள் விசுவாசமே உங்களைக் குணப்படுத்தியது’ என்றார் ராமதாஸ்.
ராமதாஸ் தனது இறை அனுபவப் பயணங்களை ‘கடவுளைத் தேடி’ என்ற நூலாக வெளியிட்டார். தன்னைப் படர்க்கையில் (மூன்றாம் மனிதனாக) குறிப்பிட்டு தனது அனுபவங்களை அந்நூலில் அவர் விவரித்திருக்கிறார்.
அதில் கூறுகிறார்: “ராமதாஸ் கர்வம் கொள்ளாதே
உலகில் எவரும் தாழ்ந்தவர் இல்லை
அனைவரும் அன்பும் மரியாதை யும் அளிக்கத் தகுதியுள்ளவர்கள்"
ராமதாஸ் உன் மனத்தை எப்போதும் ராமநாம ஸ்மரணை என்னும் ராட்டையில் சுற்றிவிடு. நாளடைவில் அது மனத்தூய்மை எனும் வெண்ணிற கதர் ஆடையை அணிவிக்கும்.
ராமநாம ராட்டை சுழல்கிறது
(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com