ஆனந்த ஜோதி

81 ரத்தினங்கள் 57: இங்கு பால் பொங்குமென்றேனோ வடுகநம்பியைப் போலே

உஷாதேவி

வடுகநம்பி மேல்கோட்டை அருகில் சாளக்ராமம் என்னும் ஊரைச் சேர்ந்தவர்.

ஸ்ரீரங்கத்தில் ராமானுஜர் கைங்கரியத்தில் வாழ்ந்துகொண்டிருந்த சமயம் ஒரு நாள் நம்பெருமாள் திருவீதி உலா வர, அந்த சேவையை ஆனந்தத்துடன் தனது மடத்தின் வாசலிலிருந்து ராமானுஜர் பார்த்தார். தனது அத்தனை கைங்கரியக்காரர்களும் அந்தச் சேவையைப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்ட ராமானுஜர், வடுகநம்பி அங்கே இல்லாததைப் பார்த்து, ஹே வடுகா, நம்பெருமாளைச் சேவிக்க வாடா என்றழைத்தார்.

அச்சமயம் வடுகநம்பி, ஆச்சாரியருக்காக பால் காய்ச்சிக் கொண்டிருந்தார். ராமானுஜர் கூப்பிட்டும் போகாமல், ‘அடியேன் உம் பெருமாளைச் சேவிக்க வந்தால், எம் பெருமானுக்கான பால் பொங்கிவிடும், அதனால் வர இயலாது’ என்று கூறிவிட்டார்.

அப்படிப்பட்ட ஆச்சாரிய பக்தியை வடுகநம்பி ராமானுஜர் மேல் வைத்திருந்தார்.

ஒருசமயம் ராமானுஜர் தனது மாணவர்கள் சூழ யாத்திரைக்குச் செல்லும்போது காவிரியைக் கடக்க வேண்டியிருந்தது. வடுகநம்பி, ராமானுஜரின் திருவாராதன பெருமாள் பெட்டியைத் தனது சிரசின் மேல் வைத்துக் கொண்டு, கைகளில் அவரது பாதுகைகளை எடுத்துச் சென்றார். காவிரியில் வெள்ளம் அப்போது பெருக்கெடுத்தது. குருவின் பாதுகையைப் பாதுகாக்கும் பொருட்டு வடுகநம்பி, பாதுகையை எடுத்து திருவாராதனப் பெட்டியின் மேல்வைத்துவிட்டார். இதைக் கண்ட உடையவர் பதறிப்போனார். உடனே அதைப் பார்த்த வடுக நம்பி, சுவாமி, உம்முடைய பெருமாளைவிட எம்பெருமாள் பாதுகை ஒன்றும் குறைந்ததல்ல, பதறாதேயும் என்று பதிலளித்தார்.

இப்படி ஆச்சாரிய கைங்கரியத்தில் ஊன்றிய வடுகநம்பியைப் போலே அடியாளுக்குப் பக்தியோ, கைங்கரியத்தில் ருசியோ இல்லாதவளாக இருக்கிறேனே என்று மனம் வருந்திக்கூறுகிறாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.

(ரகசியங்கள் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com

SCROLL FOR NEXT