ஆனந்த ஜோதி

81 ரத்தினங்கள் 55: கண்டுவந்தேன் என்றேனோ திருவடியைப் போலே

உஷாதேவி

சீதையைத் தேடிக்கொண்டு ராம, லட்சுமணர்கள் போனபோது, கபந்தனால் வழிகாட்டப்பட்டு, சபரி மோட்சம் பெறுவதற்கு துணைநின்று, பின்னர் ரிஷ்யமுக மலையில் சுக்ரீவனுடன் நட்பாகி அவனுக்காக வாலியுடன் போராடி சுக்ரீவனுக்கு வானர ராஜ்ஜியத்தைப் பெற்றுக்கொடுத்தார். சுக்ரீவனின் சேனையில் இருந்த அனுமன், ரகுராமனின் தாசன் ஆனார்.

மழைக்காலம் போனபிறகு சீதையைத் தேடும் முயற்சி தொடங்கியது. ஜடாயுவின் சகோதரன் சம்பாதி தனது தொலைதூரப் பார்வையால், இலங்கையில் சீதை சிறை வைக்கப்பட்டிருப்பதை அறிந்து சொன்னார். வாயுபுத்திரனான அனுமன், கடலைத் தாவிக் கடந்து சீதையைத் தேடிச் சந்திக்கும் ஆற்றல் பெற்றவன். இதையறிந்த ராமன், தனது முத்திரையாக கணையாழியைத் தந்து அனுமனை இலங்கைக்கு அனுப்பிவைத்தார். ராமனின் கிருபையாலும் கருணையாலும் தடைகளையெல்லாம் மீறிக் கடலைத் தாண்டி இலங்கையை அடைந்து, பல இடங்களிலும் சீதையைத் தேடிக் கடைசியில் அசோக வனத்தில் பார்த்தார்.

அனுமன் கொண்டுவந்த மோதிரத்தைப் பார்த்து அனுமனை அங்கீகரித்த சீதை, தனது அடையாளமாக சூடாமணியைக் கொடுத்தார். அத்தோடு நில்லாமல், இலங்கை அரசன் ராவணனின் படைபலம் அறிய, பல ராட்சசர்களுடன் போராடி ராவணனைச் சந்திப்பதற்காகவே அவன் மகன் இந்திரஜித்துக்குக் கட்டுப்பட்டு வாலில் தீ வைக்கப்பட்டு, அந்தத் தீயாலேயே இலங்கையை தீக்கிரையாக்கி எச்சரித்து அனுமன் திரும்பினார்.

திரும்பி வந்த அனுமன், ராமரைப் பார்த்து நீட்டிப் பேசி முழக்காமல், ‘திருஷ்டா சீதா’ என்பதை முதல் வார்த்தையாகச் சொன்னான். அதுதான் ‘கண்டேன் சீதையை’. அப்படி அனுமன் சொல்லி முடிக்கும் நேரத்தில், உயிரிழந்த எனக்கு உயிர் கொடுத்தாய் எனச் சொல்லி அனுமனை ஆரத்தழுவினார் ஸ்ரீராமன்.

ஸ்ரீராமனுக்கு அணுக்கமான தொண்டனாக வாழும் அனுமனைப் போல் நான் என் வாயால் ஸ்ரீராம நாமம் சொல்லும் நற்கதியையும் அடையவில்லையே என்று வருந்தினாள் நம் திருக்கோளுர் பெண்பிள்ளை.

(ரகசியங்கள் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு :

uyirullavaraiusha@gmail.com

ஆதாரம்: வைணவச் செல்வம், பேராசிரியர் ந. சுப்புரெட்டியார், தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியீடு

SCROLL FOR NEXT