சூரியனும் குகையும் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தன. குகையால் ஒளி என்றால் என்ன என்பதையும், தெளிவு என்றால் என்ன என்பதையும் புரிந்துகொள்ள இயலவில்லை. அதேபோல் சூரியனுக்கு இருட்டு என்றால் என்னவென்றே தெரியவில்லை. எனவே, இருவரும் தத்தமது இடத்தை மாற்றிக்கொண்டு அவற்றைப் புரிந்துகொள்ள விரும்பினர்.
குகை, வானத்தில் ஏறி சூரியனின் இடத்திற்கு சென்றது. சூரியன், பூமிக்கு இறங்கி வந்து குகையின் இருப்பிடத்துக்குச் சென்றது. சூரியனின் இடத்தை தற்போது அடைந்திருந்த குகை, "அருமை! வெளிச்சம் என்றால் என்ன என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது. பிரபஞ்சத்தில் உள்ள பொருள்கள் யாவும் தெளிவாகத் தெரிகின்றன. நான் இதற்கு முன் எவ்வளவு கீழ்மையாக வாழ்ந்தேன் என்பது இப்போதுதான் புரிகிறது!" என்றது.
குகையின் இருப்பிடத்தை அடைந்திருந்த சூரியனோ, "எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை!" என்றது.
அறியாமையில் உள்ளவர்கள் ஞானிகளின் அண்மையை அடையும்போது அவர்க ளது பார்வைகள் தெளிவாகி, உண்மையின் தரிசனமும் ஞானமும் அடையக் கிடைக்கிறது. அதனால் அவர்கள் தங்களது கடந்த கால வாழ்விலிருந்து தற்கால நிலைமையில் பெரும் வேறுபாட்டை உணர்கின்றனர்.
ஞானிகளைப் பொறுத்தவரை, அவர்கள் அறியாமை நிறைந்தவர்களின் பெரும் கூட்டத்தில் இருந்தாலும், அந்த அறியாமை அவரை சிறிதும் பாதிக்கப் போவதில்லை. தன்னுடைய ஞானத்தின் ஒளியில் அவர் எப்போதும் தெளிவாகவே இருப்பார்.