பேராசையும் வன்முறையும் சேர்ந்தால் என்னென்ன நிகழும் என்று சொல்லும் இயேசுவின் கதையொன்று இருக்கிறது.
திராட்சைத் தோட்டம் ஒன்றின் உரிமையாளர் நெடும்பயணம் போக வேண்டி யிருக்கிறது. எனவே, தோட்டத்தை சிலரிடம் குத்தகைக்கு விட்டுவிட்டு அவர் பயணம் சென்றார். குத்தகைக்காரர்கள் பயிரிட்டு, பராமரித்து, கனிகள் கிடைத்ததும் அவற்றில் ஒரு பகுதியை உரிமையாளருக்குக் கொடுக்க வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம்.
தோட்ட உரிமையாளர் பயணம் முடித்துத் திரும்பினார். காலம் வந்ததும் ஒப்பந்தப்படி விளைச்சலில் தனக்குரிய பங்கை வாங்கிவர தன் பணியாளர் ஒருவரை அவர் அனுப்பினார். குத்தகைக்காரர்களோ அவரை அடித்து உதைத்து, எதுவும் தராமல் அனுப்பினர். உரிமையாளர் பொறுமை காத்து, இன்னும் இரண்டு பணியாளர்களை அனுப்பினார். அவர்கள் இருவரையும் குத்தகைக்காரர்கள் அதேபோலவே அடித்து, உதைத்து அனுப்பினர். ‘இதுவரை என் பணியாளர்களை அனுப்பினேன். என் மகனை அனுப்பினால், அவனை மதித்து எனக்குத் தர வேண்டியதைத் தருவார்கள்’ என்றெண்ணி அந்த உரிமையாளர் தன் மகனை அனுப்பினார்.
தூரத்தில் வரும் மகனைக் கண்டதும் குத்தகைக்காரர்கள், ‘இவன் தானே உரிமையாளரின் மகன்? அவரது வாரிசு இவன்தான். இவனை நாம் கொன்றுவிட்டால் இந்தத் தோட்டமே நமக்குச் சொந்தமாகிவிடும்’ என்று தங்களுக்குள் பேசி, மகன் வந்ததும் அவனை அடித்துக் கொன்றனர்.
செய்தி அறிந்த உரிமையாளர் என்ன செய்வார் என்று கேட்டு இயேசுவே பதில் சொல்லுகிறார். தன் ஆள்கள் அனைவரையும், ஆற்றல் அனைத்தையும் திரட்டி, குத்தகைக்காரர்களைக் கொன்றொழித்து விட்டு, தன் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் குத்தகைக்கு விடுவார் என்று சொல்லி இக்கதையை முடிக்கிறார் இயேசு.
கதையும் நிஜமும்
இறைவன் தோட்டத்தின் உரிமையாளர். யூத மதத் தலைவர்கள் குத்தகைக்காரர்கள். உரிமையாளரின் பணியாளர்கள், கடவுள் சொல்ல நினைத்த செய்தியை அவர்களுக்குச் சொல்ல வந்த இறைவாக்கினர்கள். உரிமை யாளரின் மகன் இறைத்தந்தையின் திருமகன் இயேசு… என்று இயேசு சொல்லாமல், அவர் சொல்ல நினைத்ததையெல்லாம் இந்தக் கதையைக் கேட்ட யூதத் தலைவர்கள் புரிந்து கொண்டார்கள். அதனால் கதையின் முடிவில் நிகழ்ந்தது போலவே நிஜ வாழ்விலும் நடந்தது. அவர்கள் இயேசுவைக் கொல்ல முடிவெடுத்து, அதற்குச் சரியான தருணத்தைத் தேடினர்.
நியாயத்தை மறந்து, இன்னொருவருடைய தோட்டத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என்ற அநியாய ஆசையை நிறைவேற்ற வன்முறையை நம்பிய குத்தகைக்காரர்கள் முடிவில் மொத்தமாக அழிந்துபோயினர்.
வளரும் நச்சு
அவர்களை ஏமாற்றி அழித்தது இரண்டு காரியங்கள். ஒன்று, தோட்டத்தை அபகரித்துக்கொள்ள நினைத்த பேராசை. இரண்டாவது, இந்தத் தீய ஆசையை நிறைவேற்ற அவர்கள் நம்பிய வன்முறை.
தோட்ட உரிமையாளருக்கு விளைச்ச லில் தர வேண்டிய பங்கைக் கேட்டு அவரது பணியாளர்கள் வந்தபோது வன்முறை யாளர்களாக மாறிய குத்தகைக்காரர்கள், அவரது மகன் வந்தபோது கொலைகாரர்களாக மாறிவிட்டனர். பேராசைக்காரர்கள் ஆசைப்பட்டதை அடைய வன்முறையில் இறங்குவதும், அந்த வன்முறையின் சுவடு களை அழிக்க கொலைகாரர்களாக ஆவதும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே உள்ளன.
மண், பொன், பெண், பதவி, புகழ் என்று மனதில் முளைக்கும் ஆசை எதுவாக இருந்தாலும், அந்தப் பேராசையை நச்சு மரமாக வளர்த்துக்கொண்டு, ஆசைப்பட்டதை அடைய வன்முறையை நம்பும் தீயோர் இன்று நேற்றல்ல, எப்போதும் இருந்துவந்திருக்கிறார்கள்.
பேராசைகளின் பலன்
பைபிளின் முதற்பகுதியான பழைய ஏற்பாட்டில் வரும் ஜெசபெல் எனும் அரசி இத்தகைய பெண். அவளது கணவன் ஆஹாப் எனும் அரசன். அரண்மனைக்கு அருகிலிருந்த ஒரு திராட்சைத் தோட்டத்தை வாங்க ஆஹாப் ஆசைப்பட்டான். அந்தத் தோட்டம் நாபோத் எனும் சாமானிய மனிதருக்குச் சொந்தமான தோட்டம். அவரோ, தன் மூதாதையரின் சொத்து என்பதால், அதை விற்க விரும்பவில்லை என மறுத்துவிடுகிறார். அரசன் ஏமாற்றமும் கோபமும் கொள்கிறான்.
அதைப் பார்த்த அவனது மனைவி ஜெசபெல், “ஓர் அரசன் இதற்கெல்லாம் கவலைப்படலாமா?” என்று சொல்லி, கடவுளுக்கும் அரசனுக்கும் எதிராக நாபோத் பேசினார் என்ற பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்தி, அவரைக் கல்லால் அடித்துக் கொல்ல ஆணையிட்டாள்.
அரசனின் பேராசையும் அரசியின் வன்முறையும் சேர்ந்து ஓர் அப்பாவி மனிதரைக் கொன்றுவிடுகின்றன. ஆனால் இறைவன், அரசன், அரசி இருவரையும் கடுமையாகத் தண்டிக்கிறார். அரசன் ஆஹாப் போரில் மாண்டுபோகிறான். சில ஆண்டுகளுக்குப் பின் மாடியில் தன் இல்லத்திலிருந்த ஜெசபெலை இன்னொரு அரசனின் பணியாள்கள் தூக்கிக் கீழே வீச, அவ்விடத்திலேயே இறந்த அவளின் உடலை நாய்கள் தின்கின்றன.
இப்படிப் பேராசையும் வன்முறையும் சேரும்போது, இறுதியில் பேரழிவுதான் நிகழ்கிறது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்ற பல போர்களின் தொடக்கமாக பேராசைகளே இருந்திருக்கின்றன.
பேராசைகளை வளர்த்து, அவற்றை அடைய வன்முறையை நம்பும் தீயவர்களைத் தண்டிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் அதைச் செய்யாவிட்டால், இறைவனின் கோபத்தையும் மக்களின் கோபத்தையும் சம்பாதித்துக் கொள்கின்றனர்.
நாம் பெற்றுக்கொள்வது என்ன?
நம் அனைவருக்கும் இந்தக் கதை என்ன சொல்கிறது?
நாம் வெறுமனே குத்தகைக்காரர்கள் என்பதை மறந்துவிட்டு, உரிமையாளர்கள் போல் நடந்துகொண்டால், விரைவில் நாம் எல்லாவற்றையும் இழந்து நிற்போம்.
நமக்குச் சொந்தம் என்று இவ்வுலகில் எதுவுமில்லை. நம்மிடமுள்ள யாவும் சிறிது காலத்துக்குக் குத்தகையாக நமக்குக் கொடுக்கப்பட்டவையே. அனைத்துக்கும் உரிமையாளரான இறைவன் நம்மை நம்பி நமக்கு இவற்றைத் தந்திருக்கிறார்.
குத்தகைக்காரர்களாகிய நாம் உழைத்து, இறைவன் எதிர்பார்ப்பதுபோல் உரிய காலத்தில் கனி தருபவர்களாக இருக்க வேண்டும். கனி தருபவர்களாக இருப்பது எப்படி? சக மனிதருக்குப் பயன் தருபவர்களாக, அதன் மூலம் இறைவனுக்குப் புகழ் தருபவர்களாக நாமிருக்க வேண்டும்.
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: majoe2703@gmail.com