ஆனந்த ஜோதி

சூஃபி கதை: உலகத்தை மாற்றுதல்

செய்திப்பிரிவு

பயாஸித் என்ற சூஃபி மெய்ஞ்ஞானி, தனது சுயசரிதையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நான் இளமையாக இருந்தபோது, புரட்சிகரமான எண்ணத்துடனும், உலகை மாற்றிவிட வேண்டும் என்கிற உத்வேகத்துடனும் இருந்தேன். அதனால், கடவுளிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்தேன்: “இறைவா! எனக்கு நிறைந்த சக்தி கொடு! நான் இந்த உலகத்தை மாற்ற விரும்புகிறேன்!”

பிற்பாடு சற்றே பக்குவப்பட்ட பிறகுதான், வாழ்க்கை என் கைகளைவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டேன். எனது வாழ்க்கையில் பாதியை நான் கடந்துவிட்டிருந்தேன். என்றபோதிலும் என்னால் ஒரே ஒரு நபரைக்கூட மாற்ற முடியவில்லை. ஆகவே, நான் இவ்வாறு பிரார்த்தனை செய்தேன்: “உலகத்தை மாற்றுவது என்பது அதிகப்படியானதாகத்தான் இருக்கிறது. இறைவா, என்னுடைய குடும்பத்தாரை மட்டும் மாற்றுவதற்கான சக்தியை எனக்குக் கொடுத்தால் போதுமானது!”

முதியவன் ஆன பின்னரே, குடும்பத்தினரை மாற்றுவது என்பது கூட அதிகப்படியானதுதான் என்பதை உணர்ந்து கொண்டேன். மேலும், மற்றவர்களை மாற்றுவதற்கு நான் யார்? என்னை மட்டுமே நான் மாற்றிக்கொண்டால் போதுமானது. அதுவே தாராளம்!

அந்த தெளிவு வந்தவுடன் நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன்: “இறைவா! இப்போது நான் சரியான புரிதலை வந்தடைந்திருக்கிறேன். குறைந்தபட்சம், என்னை நான் மாற்றிக்கொள்வதற்காவது என்னை அனுமதிக்க வேண்டுகிறேன்!”

அப்போது கடவுள் சிரித்தார்.

SCROLL FOR NEXT