மகாபாரதத்தில் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் ஒருவன் கர்ணன். தான் பிறந்த குலத்தை அறியமுடியாமல், வளர்ந்த குலத்தின் அடையாளத்தால் அவன்பட்ட அவமானங்களும், கஷ்டங்களுக்கும் இடையில், ஒரு வீரனுக்குரிய அனைத்தும் மறுக்கப்பட்ட நிலையில் வீரனாகவும், கொடை வள்ளலாகவும் உயர்ந்து நின்றவன் அவன். கொடுப்பதற்கு குலம் அவசியம் இல்லை, குணம்தான் முக்கியம் என்று உணர்த்தியவன். நட்புக்காக உயிரையும் ஈந்த வள்ளல். அதனால்தான் அவனை உயரமான சிற்பமாக சிற்பிகள் அமைத்திருக்கிறார்கள்.
நீங்கள் காணும் இந்தச் சிற்பம், அர்ஜுனன் மீது நாகாஸ்திரம் ஏவத் தயாராகும் நிலையில் கர்ணன் நிற்கும் கோலத்துடன் படைக்கப்பட்டுள்ளது. பரந்த மார்பும், இடது கரத்தில் வில்லை வைத்திருக்கும் லாகவமும், வலது கரத்தில் நாகாஸ்திரத்தை பிடித்திருக்கும் பாங்கும் அருமை. இடது காலை சற்றே வளைத்து, நன்கு ஊன்றியபடி வில்லில் அஸ்திரத்தைப் பூட்ட முற்படும்போது ஏற்படும் வலது காலின் அசைவும், சற்றுத் தூக்கிய நிலையில் உள்ள பாதத்தின் அமைப்பும் உயிர் அசைவை உணர்த்துகின்றன.
அங்க அசைவுகளால் ஏற்படும் சுருக்கங்களையும் வளைந்த இருப்பின் தன்மையையும், கால்களின் திரட்சியையும் நரம்புகளையும் பார்த்தால், கல்லிலே இப்படியெல்லாம் ரசவாதம் செய்ய முடியுமா என்று பிரமிப்பு ஏற்படுகிறது. தலையில் வித்தியாசமான மகுடம், காதிலும் கழுத்திலும் அணிந்துள்ள அணிமணிகள், இடையில் அணிந்துள்ள ஆடையில் உள்ள வரி வடிவங்களை அவ்வளவு அழகாக, நுணுக்கமாகப் பார்த்துபார்த்து செதுக்கியுள்ள சிற்பிக்கு சிரம் தாழ்த்த வணக்கம்.
இந்தச் சிற்பம் பதினாறாம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அமைந்திருக்கும் இடம் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில். நாயக்க மன்னர்கள், ராமாயணத்தைவிட மகாபாரதத்தில்தான் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் போலும். அவர்கள் திருப்பணிகள் செய்த பெரும்பாலான கோவில்களில் கர்ணன், அர்ஜுனனின் போர்க்கோலக் காட்சிகளையே அதிகம் வடிக்கச் செய்துள்ளனர்.