முகத்தில் மெல்லிய புன்னகையுடன் சாந்தசொரூபியாகக் காட்சியளிக்கும் இந்த துர்க்கை அம்மன் வடக்கு திசையை நோக்கியபடி இருக்கிறார். ஏழாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட திருக்கண்டியூர் பிரம்ம சிரகண்டீஸ்வர் கோவிலில் வடக்குப் பிரகாரத்தில் இருக்கிறார். துர்க்கையின் காலடியில் மகிஷன் தலை இல்லை. வலது மேல் கரத்தில் பிரயோகச் சக்கரத்துடனும் கீழேயுள்ள கரம் நமக்கு உள்ளங்கையைக் காட்டியபடி நான்கு விரல்களையும் சற்று மடக்கியபடி உள்ளது. இடது மேல் கரத்தில் சங்கு உள்ளது.
கீழ் கரத்தை இடுப்பில் ஒய்யாரமாக வைத்தபடி ஐந்தடி உயரத்தில் ஆஜானுபாகுவாக கம்பீரமாக அழகுடன் துர்க்கை காட்சியளிக்கிறாள். தலையில் வித்தியாசமான மகுடமும் அதில் சிம்மத்தின் உருவமும் அணிமணிகளும் அழகுற அமைந்துள்ளன. காதுகளில் குழையும், மார்பிலும் தோள்களிலும் வித்தி யாசமாக அணிகலன்களும் காணப்படு கின்றன. இடுப்பில் உள்ள ஆடை அணிகலன்களிலும், கரங்களில் உள்ள வங்கிகளிலும் சோழர்களுக்கே உரித்தான சிம்மமும் காட்சியளிக்கின்றன. மற்ற ஆலயங்களில் இல்லாதபடி இங்கு தேவிக்கு மார்புக் கச்சை அணிவித்திருப்பது சிறப்பு. தலை முதல் பாதம்வரை ஆடை அணிகலன்கள் என அனைத்திலும் வித்தியாசம் காட்டியுள்ளார் சிற்பி.
இந்தக் கோவிலில் சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவர் மீது சூரியனின் ஒளிக்கதிர் மாசி மாதம் 13, 14, 15 தேதிகளில் மாலை 5.40 முதல் 6.10 மணிவரை விழும். மேலும், பிரம்மனுடன் சரஸ்வதியும் சேர்த்து தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர். நவக்கிரக சந்நிதியில் சூரிய பகவான் தனது இரு தேவியர்களான உஷா, பிரத்தியுக்ஷா உடன் காட்சி தருகிறார். மற்ற கிரகங்கள் இவர்களை நோக்கியபடி இருப்பது தனிச்சிறப்பு.