ஆனந்த ஜோதி

சித்திரப் பேச்சு: பூக்கும், காய்க்கும், பழுக்காது

செய்திப்பிரிவு

ஓவியர வேதா

“இதுவோ திருநகரி, ஈதோ பொருநை

இதுவோ பரமபதத்து எல்லை

இதுவேதான் வேதம் பகிர்ந்திட்ட

மெய்ப்பொருளின் உட்பொருளை

ஓதும் சடகோபன் ஊர்.”

என்று ராமானுஜரால் புகழ்ந்து பாடப்பட்ட ஊர் இது. ‘கூழ் குடித்தாலும் குருகூரில் வசித்துத் திருவடி சேர்’ என்ற முதுமொழியைக் கொண்ட ஊர். திருப்புளியாழ்வார் என்று புளியமரத்தைப் போற்றிப் புகழும் ஊர். இத்தகைய பெருமைகளைக் கொண்டது திருக்குருகூர் எனப்பட்ட ஆழ்வார் திருநகரி. நெல்லைச் சீமையைச் சுற்றியுள்ள பல திருப்பதிகளில் ஒன்றானது.

நவக்கிரகத் தலங்களில் குரு தலமாக போற்றப்படும் இடம் இது. குருகு என்னும் சொல்லுக்கு கொக்கு என்று பொருள் உண்டு. குருகு என்று பறவையின் பெயரிலேயே திருக்குருகூர் எனப்பட்டது. மேலும் குருகன் என்ற மன்னன் ஆட்சிசெய்த பகுதி என்பதால், இந்தப் பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.

ஆறாம் நூற்றாண்டு முதல் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் இது. இத்தலத்தில் இறைவன் ஸ்ரீ ஆதிநாதர், தாமாகவே தோன்றியதால் இவரின் திருவடிகள் பூமிக்குள் இருப்பதாக ஐதிகம். உற்சவர் ‘ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான்’ எனப்படுகிறார். ஆதிநாதவல்லிக்கும் குருகூர்வல்லிக்கும் இரண்டு தாயார் சன்னிதிகள் உள்ளன.

இந்த ஊரின் சிறப்பே இங்குள்ள திருப்புளியாழ்வார் என்று அழைக்கப்படும் புளிய மரம்தான். இம்மரம் 5,100 ஆண்டுகள் பழமையானதென்று கூறப்படுகிறது. ஆதிசேஷன் அம்சம் என்பதால், இந்த ஊருக்கே சேஷ க்ஷேத்திரம் என்ற பெயரும் உள்ளது.

இந்தப் புளியமரத்தில்தான் நம்மாழ்வார் என்கிற சடகோபன் பதினாறு ஆண்டுகள் யோக முத்திரையுடன் பத்மாசனத்தில் எழுந்தருளி இருந்தார். இந்த விருட்சத்தை ‘உறங்காப்புளி’ என்பர். இந்த விருட்சம் பூக்கும், காய்க்கும். ஆனால் பழங்கள் பழுப்பதில்லை. இரவில் இதன் இலைகள் உறங்குவதில்லை. இந்த இடத்திலேயே நம்மாழ்வாருக்கு, மதுரகவி ஆழ்வார் திருக்கோயில் எடுப்பித்ததாக கர்ணபரம்பரைச் செய்தி உலவுகிறது. இக் கோயிலில் சோழர்களும் பாண்டியர்களும் திருப்பணி செய்துள்ளார்கள்.

SCROLL FOR NEXT