ஆனந்த ஜோதி

சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர்

செய்திப்பிரிவு

ஏழடி உயரத்தில் ஆஜானுபாகுவாக, கம்பீரமாகக் காவல் காக்கும் இந்தத் துவாரபாலகரைப் பாருங்கள்! அத்தனை அழகாக இருக்கிறார். தலையைச் சுற்றி வட்டவடிவில் தலையலங்காரம், காதுமடலின் மேல் இரண்டு பக்கங்களிலும் தாமரை மொட்டு போன்ற அணிகலன்கள், அதிலிருந்த தொங்கும் முத்தாரங்கள், கர்ண குண்டலங்கள், மார்பிலும், கைகளிலும் விதம்விதமான அணிமணிகள், மேலிரண்டு கரங்களில் சங்கு சக்கரம், தலைக் கிரீடத்திலிருந்து தொங்கும் மலர்ச்சரங்கள்.

இடையிலிருந்து தொங்கும் சலங்கை மாலையை, தூக்கிய காலின் மேல் விட்டிருக்கும் பாங்கு வெகு அருமை. சலங்கைகள் ஒவ்வொன்றும் தனித்தனியே தெரியும்படி அமைத்திருக்கும் விதம் பிரமிக்க வைக்கிறது.

இடுப்பில் இருந்து தொங்கும் ஆடைகள் கூடக் காற்றில் அசைவது போல் ஒரு பிரமை ஏற்படுகிறது. தூக்கிய வலக்காலை, கதாயுதத்தைச் சுற்றியுள்ள நாகத்தின் தலை மீது ஒயிலாக வைத்திருக்கும் பாங்கும், இடக்காலை நன்கு ஊன்றியபடி நின்றிருக்கும் நிலையும் ஆண்மையின் வெளிப்பாடாக உள்ளது.

இடக் கரம் கதாயுதத்தைப் பிடித்தபடியும், வலக் கரம் ஒரு விரலை மேல்நோக்கி நீட்டி நமக்கும் மேலே இறைவன் ஒருவன் உள்ளே இருக்கிறான் என்பதைச் சொல்லாமல் சொல்வது போலும் உள்ளது. முகத்திலே மந்தகாசமும், வாயில் இரண்டு கோரைப் பற்களின் கூர்மையும், கரங்களில் உள்ள கூரிய நகங்களையும்கூட விட்டுவைக்கவில்லை சிற்பி.

இந்தச் சிற்பம், ஸ்ரீவைகுண்டம் கோயிலில் உள்ளது. இக்கோயிலுக்கு, ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை சேரர்களும் பாண்டியர்களும் திருப்பணிகளைச் செய்துள்ளனர். பதினாறாம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் காலத்தில் வடமலையப்பப் பிள்ளையான் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மன், இந்த ஆலயத்துக்குத் திருப்பணிகள் செய்து, நிவந்தங்கள் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT