ஆனந்த ஜோதி

ஜென் துளிகள்: புத்தரும் மனமும்

கனி

‘புத்தர் என்பது உங்கள் மனம்தான்’ – இதுதான் தன்னுடைய மிகச் சிறந்த போதனை என்று புகழ்பெற்ற ஜென் குரு ஒருவர் கூறினார். இந்த ஆழமான கருத்தால் ஈர்க்கப்பட்ட துறவி ஒருவர், மடாலயத்திலிருந்து விடைபெற்று, ஒரு வனத்துக்குச் சென்று தியானம் செய்தார். வனத்தில் இருபது ஆண்டுகளைக் கழித்தார் அந்தத் துறவி. ஒரு நாள், அந்த வனத்தின் வழியாகப் பயணம் மேற்கொண்டிருந்த மற்றொரு துறவியைச் சந்தித்தார் அவர். தான் படித்த ஜென் குருவிடம்தான் அந்தத் துறவியும் படித்தார் என்பதை உடனடியாக அவர் தெரிந்துகொண்டார்.

“குருவின் மிகச் சிறந்த போதனையைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததைத் தயவுகூர்ந்து என்னிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்” என்றார் அவர். பயணம் மேற்கொண்டிருந்த துறவியின் கண்கள் பிரகாசமாயின. “நிச்சயமாக. இதைப் பற்றி குரு எப்போதும் தெளிவாக இருந்தார். புத்தர் என்பது உங்கள் மனமில்லை, என்பதுதான் அவரின் மிகச் சிறந்த போதனை என்று அவரே கூறியிருக்கிறார்” என்றார் அந்தத் துறவி.

பூனைக்குப் புத்த இயல்பு இருக்கிறதா?

ஒரு மாலைப் பொழுதில், கேம்பிரிட்ஜ் ஜென் மையத்தில் தர்ம உரையை முடித்த சியுங் சானிடம், மாணவர் ஒருவர், ஜென் மையத்தில் வளர்க்கப்பட்டுவந்த ‘கேட்ஸ்’ என்ற பூனையைச் சுட்டிக்காட்டி, “இந்தப் பூனை, தன்னைப் பூனை என்று சொல்லிக்கொள்வதில்லை, இதற்கு, ‘தெரியாத மனம்’ இருக்கிறது என்று முன்னர் கூறியிருந்தீர்கள். இந்தப் பூனை ஞானத்துடன் இருக்கிறதா? ஆனால், அப்படியிருக்கும்பட்சத்தில், மனிதர்கள் மட்டும்தான் ஞானம் அடைய முடியும் என்று ஏன் பௌத்தம் போதிக்கிறது?” என்று கேட்டார்.

“ஞானம் என்றால் என்ன?” என்று கேட்டார் சியுங் சான்.

“எனக்குத் தெரியாது” என்றார் மாணவர்.

“ஞானம் என்பது ஞானமில்லை. யாராவது ஒருவர், ‘நான் ஞானமடைந்துவிட்டேன்’ என்று கூறினால், அவர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளார் என்று அர்த்தம். மாணவர்கள் பலர், ‘எனக்கு ஞானம் வேண்டும்! எனக்கு ஞானம் வேண்டும்!’ என்று நினைக்கிறார்கள். அந்த வகையான சிந்தனையுடன் அவர்களால் ஒருபோதும் ஞானத்தை அடைய முடியாது” என்றார்.

“பூனை, ஞானத்தைப் பற்றியோ, ஞானமின்மையைப் பற்றியோ ஒருபோதும் நினைப்பதில்லை. பூனை என்பது வெறும் பூனைதான். பூனைக்குப் புத்த இயல்பு இருக்கிறதென்று உன்னால் சொல்ல முடியுமா? பூனைக்குப் புத்த இயல்பு இருந்தால், அதனால் ஞானத்தை அடைய முடியும். ஒருவேளை, அதனிடம் புத்த இயல்பு இல்லையென்றால் அதனால் ஞானமடைய முடியாது” என்றார் சியுங் சான்.

“ம்ம்… எனக்குத் தெரியவில்லை” என்றார் மாணவர்.

சியுங்-சான் சிரித்தபடி, “ம்ம், தெரியவில்லை என்பது நல்லது. மிகவும் நல்லது” என்றார்.

கேள்விகளற்ற இடம்

ஜென் குரு ஒருவரைச் சமூக நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த மனநல மருத்துவர், அவரிடம் தன் மனத்தில் இருந்த கேள்வி ஒன்றைக் கேட்க முடிவுசெய்தார். “சரியாக, எந்த வகையில் நீங்கள் மக்களுக்கு உதவுகிறீர்கள்?” என்று கேட்டார் மருத்துவர்.

“நான், அவர்களைக் கேள்விகளே கேட்க முடியாத இடத்துக்கு இட்டுச்சென்றுவிடுவேன்” என்றார் குரு.

SCROLL FOR NEXT