ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
.மற்ற சாட்சிகளைவிட மனசாட்சியை மதிப்பவர்களே! உங்களுக்கு 01.09.2020 முதல் 21.03.2022 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும், கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஆறில் நின்ற ராகு ஒருபுறம் நல்லதைச் செய்து மறுபுறம் வீண் டென்ஷன், மன உளைச்சல், மறைமுக எதிர்ப்புகள், என்று கொடுத்தவர் இப்போது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். சோம்பல் நீங்கிச் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டாரைப் பற்றி நன்கு விசாரிப்பது நல்லது. மகனின் அடிப்படை நடத்தைக் கோலங்கள் மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம்.
ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 01.09.2020 முதல் 04.01.2021 வரை ராகுபகவான் செல்வதால் வேலைச்சுமை, வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல்கள், களைப்பு, ஒருவித வெறுப்புணர்வு வந்து செல்லும். உங்களின் தாயார் ஏதோ கோபத்தில் உங்களைச் சொல்லியிருந்தால் அதையெல்லாம் பொருட்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள்.
ரோகிணி நட்சத்திரத்தில் 05.01.2021 முதல் 12.09.2021 வரை ராகுபகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புதுப் பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். கணவன்-மனைவிக்குள் பாசப்பிணைப்பு அதிகரிக்கும். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். பாதியில் நின்ற கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். மனைவிக்கு வேலை கிடைக்கும்.
கார்த்திகை நட்சத்திரத்தில் 13.09.2021 முதல் 21.03.2022 வரை செல்வதால் எதிர்ப்புகள் அதிகமாகும். அரசுக் காரியங்கள் இழுபறியாகும். திடீர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கடந்த காலத்தில் இழந்த நல்ல வாய்ப்புகளை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். வாகனத்தை இயக்கும்போது அலைபேசியில் பேச வேண்டாம்.
வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத்தீரும். பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். வேலையாட்கள் பொறுப்புணர்ந்து நடந்துகொள்வார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உயரதிகாரிகள் இனி உங்களின் ஆலோசனைகளைக் கேட்டுச் செயல்படுவார்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வு இப்போது கைக்கு வரும்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து விரயச் செலவுகளையும், வீண் அலைச்சலையும், தூக்கமில்லாமலும் தவிக்கவைத்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான பதினொன்றில் வந்தமருகிறார். திடீர் யோகம், வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். பிரபலங்களின் சந்திப்பு கிட்டும். பாதியிலேயே நின்றுபோன வீடு கட்டும் பணியை வங்கிக் கடனுதவியால் முழுமையாக முடிப்பீர்கள். வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். புதுப் பொறுப்புகள், பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
கேட்டை நட்சத்திரத்தில் 01.09.2020 முதல் 10.05.2021 வரை கேதுபகவான் செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். விருந்தினர் வருகை, சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சிலர் சொந்தமாகத் தொழில் தொடங்குவீர்கள்.
அனுஷம் நட்சத்திரத்தில் 11.05.2021 முதல் 16.01.2022 வரை கேது செல்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். நகர எல்லையைத் தாண்டி வீட்டு மனை வாங்குவீர்கள். நீண்ட நாட்களாகத் தள்ளிப் போன காரியங்கள் முடிவடையும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.
விசாகம் நட்சத்திரத்தில் 17.01.2022 முதல் 21.03.2022 வரை செல்வதால் பயணங்கள் அதிகரிக்கும். சில காரியங்கள் தடைப்பட்டு முடியும். யாரும் தன்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று புலம்புவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழந்துவிடாதீர்கள். வாகனத்தில் செல்லும் போதும், சாலைகளைக் கடக்கும் போதும் நிதானம் அவசியம். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். இந்த ராகு கேது மாற்றம் ஒதுங்கியிருந்த உங்களை உற்சாகப்படுத்துவதுடன், வசதி வாய்ப்புகளைப் பெருக்கி வெளியுலக்கு அழைத்து வருவதாக அமையும்.
| பரிகாரம் காஞ்சிபுரம் மாவட்டம், செவிலிமேடு எனும் ஊரில் அருள்பலிக்கும் ஸ்ரீ கைலாசநாதரைச் சென்று வணங்குங்கள். மனநிம்மதி உண்டாகும். |
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல |