ஆனந்த ஜோதி

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 01.09.2020 முதல் 21.03.2022 வரை - விருச்சிக ராசி வாசகர்களே

செய்திப்பிரிவு

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் மிக்கவர்களே. உங்களுக்கு 01.09.2020 முதல் 21.03.2022 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும், கேதுவும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்து நின்று காரியத்தடைகளையும், மன உளைச்சல்களையும் கொடுத்துவந்த ராகு பகவான் இப்போது ராசிக்கு ஏழாம் வீட்டில் வந்து அமர்கிறார். உங்களின் அறிவாற்றலை மழுங்க வைத்தவர் இப்போது உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக் கொண்டுவரப்போகிறார்.

வீண் விவாதங்கள், அலைச்சல்கள், கோபதாபங்கள் எல்லாம் குறையும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. என்றாலும் களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் அமர்வதால் மனைவியுடன் வரும் சின்ன சின்னப் பிரச்சினைகள் பெரிதாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். எந்த விஷயமாக இருந்தாலும் சுயமாக யோசித்து முடிவெடுக்கப் பாருங் கள். குழந்தை பாக்யம் உண்டு. அத்யாவசியப் பயணம் இருந்தால் மட்டும் மேற்கொள்வது நல்லது.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 01.09.2020 முதல் 04.01.2021 வரை ராகுபகவான் செல்வதால் வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பழைய கடன் பிரச்சினையில் ஒன்று தீரும். வழக்கு சாதகமாகும்.

ரோகிணி நட்சத்திரத்தில் 05.01.2021 முதல் 12.09.2021 வரை ராகுபகவான் செல்வதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். சொந்தபந்தங்களின் பலம், பலவீனம் அறிந்து செயல்படத் தொடங்குவீர்கள்.

கார்த்திகை நட்சத்திரத்தில் 13.09.2021 முதல் 21.03.2022 வரை செல்வதால் சவாலான காரியங்களை யும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். அரைகுறையாக நின்ற கட்டிட வேலைகளைத் துரிதப்படுத்துவீர்கள். சிலர் புது வீட்டுக்குக் குடி புகுவீர்கள். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும்.

வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உங்கள் அணுகு முறையை மாற்றுவீர்கள். புதிய முதலீடுகளைப் பற்றி யோசிப்பீர்கள். பழைய பாக்கிகள் கைக்கு வரும். உங்களின் கடின உழைப்புக்கேற்றாற்போல பதவி உயர்வும் அடைவீர்கள்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் நின்றுகொண்டு உங்களைப் பக்குவமில்லாமல் பேசவைத்த கேது பகவான் இப்போது உங்கள் ராசியிலேயே வந்தமருவதால் இனி சமயோஜிதப் புத்தியுடன் பேச வைப்பார். எப்போது பார்த்தாலும் எதிர்மறையாகச் சிந்தித்த நீங்கள் இனி ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவீர்கள். ராசிக்குள் கேது அமர்வதால் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. அவ்வப்போது கோபப்படுவீர்கள். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

கேட்டை நட்சத்திரத்தில் 01.09.2020 முதல் 10.05.2021 வரை கேதுபகவான் செல்வதால் கை, கால் அசதி, சோர்வு, தொண்டைப் புகைச்சல், சளித் தொந்தரவு, காய்ச்சல் வந்து நீங்கும். இடைத்தரகர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். திடீர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

அனுஷம் நட்சத்திரத்தில் 11.05.2021 முதல் 16.01.2022 வரை கேது செல்வதால் கடந்தகாலக் கசப்பான அனுபவங்களை நினைத்துப் பார்த்துத் தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். வேற்றுமதத்தைச் சார்ந்தவர்களால் ஆதாயமடைவீர்கள். இளைய சகோதர வகையில் விவாதங்கள் வந்தாலும் பாசம் குறையாது. வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் உதவிகள் உண்டு. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை.

விசாகம் நட்சத்திரத்தில் 17.01.2022 முதல் 21.03.2022 வரை செல்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். பணப்பற்றாக்குறையைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். குடும்பத்திலும் கலகலப்பான சூழல் உருவாகும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சொந்தபந்தங்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

இந்த ராகுகேது மாற்றம் கொஞ்சம் மன உளைச்சலையும், வேலைச்சுமையையும் கொடுத்தாலும் சகிப்புத்தன்மையால் சாதிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்

விழுப்புரம் மாவட்டம், தும்பூர் எனும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநாக கன்னியம்மனைச் சென்று வணங்குங்கள். வாழ்வு சிறக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT