ஆனந்த ஜோதி

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 01.09.2020 முதல் 21.03.2022 வரை - கடக ராசி வாசகர்களே

செய்திப்பிரிவு

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு கலங்காத நீங்கள், கையிலிருப்பதை வாரி வழங்கும் வள்ளல்கள். 01.09.2020 முதல் 21.03.2022 வரை உள்ள காலகட்டத்தில் ராகு-கேது என்ன செய்ய போகிறார்கள் என்று பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் பன்னிரண்டில் அமர்ந்துகொண்டு அடுக்கடுக்காகப் பல பிரச்சினை களையும், நெருக்கடிகளையும் தந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு லாப வீட்டுக்கு வருவதால் தன்னம்பிக்கையையும் பண வரவையும் கொடுப்பதுடன் வீண் செலவுகளையும் குறைப்பார். சவாலான காரியங்களைக்கூட சர்வ சாதாரணமாக இனி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். குழந்தை இல்லாத தம்பதியருக்குக் குழந்தை பாக்யம் கிட்டும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். 11-ல் ராகு இருப்பதால் அரைகுறையாக நின்றுபோன பல வேலைகள் உடனே முடியும்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 01.09.2020 முதல் 04.01.2021 வரை ராகுபகவான் செல்வதால் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். வேலை கிடைக்கும். தடைகள் நீங்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பூர்வீகச் சொத்தைச் சீர் செய்வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். புதுப் பொறுப்புகள் தேடி வரும்.

ரோகிணி நட்சத்திரத்தில் 05.01.2021 முதல் 12.09.2021 வரை ராகுபகவான் செல்வதால் தோற்றப் பொலிவு கூடும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பேச்சில் கனிவு பிறக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும். மனைவி உங்கள் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார்.

கார்த்திகை நட்சத்திரத்தில் 13.09.2021 முதல் 21.03.2022 வரை செல்வதால் எதிர்ப்புகள் அடங்கும். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் விரைந்து முடியும். வியாபாரம் செழிக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கடையை நவீனமாக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களுடைய தொலைநோக்குச் சிந்தனைக்குப் பாராட்டுகள் கிடைக்கும். பதவி உயரும். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்திருந்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய வீடான ஐந்தாம் வீட்டுக்கு வந்து அமர்கிறார். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். ஆனால், அவர்களால் அலைச்சலும் செலவுகளும் உண்டு. கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும் உணவை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். சேமித்து வைத்த காசில் சொந்தமாக ஒரு வீட்டை வாங்குவீர்கள்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

கேட்டை நட்சத்திரத்தில் 01.09.2020 முதல் 10.05.2021 வரை கேதுபகவான் செல்வதால் மனோபலம் கூடும். மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உங்களைக் குறைகூறிக் கொண்டிருந்தவர்களையெல்லாம் ஒதுக்குவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அனுஷம் நட்சத்திரத்தில் 11.05.2021 முதல் 16.01.2022 வரை கேது செல்வதால் உள்மனத்தில் ஒருபயம், சின்ன சின்னப் போராட்டம், விபத்துகள், கை, கால் மரத்துப் போகுதல், உடம்பில் இரும்பு, கால்சியம் சத்துக் குறைபாடுகள் வந்து நீங்கும். குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது. விசாகம் நட்சத்திரத்தில் 17.01.2022 முதல் 21.03.2022 வரை செல்வதால் அடிப்படை வசதிகள் பெருகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பிதுர்வழிச் சொத்தைப் போராடி பெறுவீர்கள். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறுவீர்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். பால்ய நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். இந்த ராகு மாற்றம் திடீர் யோகங்களையும், அந்தஸ்தையும் தருவதாகவும், கேது மாற்றம் அவ்வப்போது முன்கோபத்தையும், மன இறுக்கத்தையும் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்

காஞ்சிபுரம் மாவட்டம், வடநாகேஸ்வரம் எனும் ஊரில் வீற்றிருக்கும் நாகேஸ்வரரைச் சென்று வணங்குங்கள். ஆரோக்கியம், அழகு கூடும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT