ஆனந்த ஜோதி

இயேசுவின் உருவகக் கைதகள் 09: கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்

செய்திப்பிரிவு

எம்.ஏ. ஜோ

இயேசு சொன்ன இந்தக் கதையில் வரும் மூன்று கதாபாத்திரங்களுக்குப் பெயர் இல்லை.

நள்ளிரவு நேரம். அன்பன் தூங்கிக் கொண்டிருக்கிறான். வெளியே ஏதோ சத்தம் கேட்கிறது. கதவு தட்டப்படுகிறது. போய்க் கதவைத் திறந்தால் நண்பன் நிற்கிறான். கதவை அகலத் திறந்து வரவேற்று அழைத்துப் போய் அமரச் சொல்கிறான். நண்பனின் முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது. களைத்துப் போயிருந்தான். உணவு மீதமுள்ளதா என்று அன்பன் யோசித்தான். அப்பம் ஏதும் மீதம் இல்லை. அன்பன் இருந்த தெருவிலேயே அவனது நண்பன் வீடு இருந்தது. தன் மீது அன்பும் அக்கறையும் கொண்டவன் என்பதால் நள்ளிரவில் அவன் வீட்டுக்குப் போய் உணவுக்காகக் கதவைத் தட்டலாம் என்று துணிந்தான்.

“நான் தான் அன்பன் வந்திருக்கிறேன். என் வீட்டுக்கு நண்பன் ஒருவன் வந்திருக்கிறான். களைத்துப் போய், பசியோடு வந்திருக்கிறான். எங்கள் வீட்டில் இன்று அப்பம் எதுவும் மீதம் இல்லை. அதனால் எனக்கு மூன்று அப்பங்களைக் கடனாகக் கொடு” என்று கேட்டான் அன்பன்.

முதலில் அன்பனின் நள்ளிரவுத் தொந்தரவு தெருவில் இருந்த நண்பனுக்கு எரிச்சலைத் தந்தது. ஆனாலும், எதிர்பாராமல் வந்திருக்கும் அதிதிக்கு உதவுவதற்கு தன்னைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தான்.

“நான் எழுந்து அவன் கேட்கிற அப்பத்தைக் கொடுக்கவில்லை என்றால் அவன் என்னைத் தூங்க விடமாட்டான். கதவைத் தட்டிக் கொண்டே இருப்பான்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டே, எழுந்து போய் அப்பங்களை எடுத்து, கதவைத் திறந்து, காத்திருக்கும் அன்பனிடம் கொடுக்கிறான். இதுதான் கதை.

இயேசு சொன்ன இந்தக் கதை நமக்கு உணர்த்தும் உண்மை என்ன?

தன் நிலையைச் சொல்லி, தன் தேவையைச் சொல்லி அன்பன் கதவைத் தட்டிக் கொண்டே இருந்தது போல நீங்களும் தொடர்ந்து மன்றாடுங்கள்.

நீங்கள் கேட்பது விரைவில் கிடைக்கவில்லையே என்று சோர்ந்து போகாதீர்கள்.

உலகப் புகழ்பெற்ற டிஸ்னி நிறுவனங்களின் நிறுவனரும் திரைப்படத் தயாரிப்பாளருமான வால்ட் டிஸ்னி தன் மகளின் விருப்பத்தை நிறைவேற்ற, பமீலா டிராவர்ஸ் என்கிற பெண் எழுத்தாளரிடம் போய், அவர் எழுதிய ‘மேரி பாப்பின்ஸ்’ எனும் நாவலைத் திரைப்படமாக்க அனுமதி வேண்டினார். ஆனால் டிராவர்ஸ் அதற்கு இசையவில்லை. வால்ட் டிஸ்னி சோர்ந்து போகவில்லை. ஒவ்வோர் ஆண்டும் பல முறை என்று 16 ஆண்டுகள் தொடர்ந்து இங்கிலாந்துக்குப் பயணம் செய்து அங்கு வாழ்ந்த டிராவர்சிடம் தன் வேண்டுகோளை நினைவுறுத்திய வண்ணம் இருந்தார்.

16 ஆண்டுகள் கழித்து, டிஸ்னியின் பொறுமையைப் பாராட்டி, தனது கதையைத் திரைப்படமாக்க டிஸ்னிக்கு அனுமதி தந்தார் டிராவர்ஸ். அத்திரைப்படம் ஆஸ்கரை வென்றதோடு மில்லியன் கணக்கில் வருவாயையும் ஈட்டியது.

"கேட்டுக் கொண்டே இருங்கள் - கொடுக்கப்படும் வரை. தேடிக் கொண்டே இருங்கள், நீங்கள் தேடியது கிடைக்கும் வரை. தட்டிக் கொண்டே இருங்கள், கதவு திறக்கப்படும் வரை.”

(தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com

SCROLL FOR NEXT