குருவாயூரில் குடிகொண்டுள்ள கிருஷ்ணனுடன் நேரில் பேசுவதாக அமைந்த நாராயணீயத்தை இயற்றியவர் மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி. சம்ஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட இவ்வழகிய பாடல்கள் வாசிப்போருக்கும் வாசிக்கக் கேட்போருக்கும் நோய் நீங்கும் நன்மருந்து என்ற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது.
கேரளத்தில் உள்ள பரதப்புழை என்ற நீளா நதியின் வடகரையில் திருநாவா என்ற திருத்தலத்தின் அருகில் மேல்புத்தூரில், பொ. ஆ.1560-ல் அவர் பிறந்தார். நாராயண பட்டத்திரியின் தகப்பனார் மாத்ருத்தர். பட்டத்திரி, சிறுபிராயத்தில் பண்டிதராக இருந்த தன் தந்தையிடமே பயின்றார்.
ரிக்வேதத்தை மாதவச்சாரியாரிட மும் தர்க்கசாஸ்திரத்தை தாமோதராசாரியர் என்பவரிடமும் கற்றுக்கொண்டார். அச்யுத பிஷாரடி என்ற குருவிடம் வியாகரணம் என்ற மிகக் கடினமான இலக்கணத்தைக் கற்று முடித்தபோது இவருக்கு வயது பதினாறு.
யாரும் கேட்டிராத குருதட்சணை
அச்யுத பிஷாரடி வாதநோயால் பீடிக்கப்பட்டிருந்தார். அவரால் தமது கை கால்களை நகர்த்தவும் முடியாது. தினம்தோறும் பத்துப் பேருக்குக் குறையாமல் அவருடைய சீடர்கள் அவரைக் குளிப்பாட்டி தூக்கிவந்து ஆசனத்தில் அமர்த்துவது வழக்கம். அதன்பிறகு பாடம் நடக்கும். நோயின் கடுமையைத் தாங்கிக்கொண்டு அச்யுத பிஷாரடி பாடம் நடத்துவார் .
இதைக் கவனித்துவந்த பட்டத்திரிக்கு ஒரு யோசனை தோன்றியது. குரு குலவாசம் முடிந்து புறப்படும்போது குருவிடம் கேட்டார்.
“குருதட்சணையாக என்ன வேண்டும்?”
“குருவுக்கு யாரும் தட்சணை கொடுக்க முடியாது! அப்படிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் வித்தையைக் கற்றுக்கொடு. ஆனால், குருதட்சணை வாங்காதே. இதுவே நீ எனக்கு அளிக்கும் குருதட்சணை.”
“குருவே மன்னிக்க வேண்டும். நான் குருதட்சணையாக உங்கள் வாதரோகத்தை வேண்டுகிறேன்.”
அச்யுத பிஷரெடி எவ்வளவோ மறுத்தும் பட்டத்திரியின் மன்றாடலே வென்றது.
தனது தவ வலிமையால் தன்ரோகத்தை பட்டத்திரிக்கு தத்தம் செய்து கொடுத்தார். வாதரோகம் அப்படியே சீடனுக்கு மாறிவிட்டது. நடக்க முடியாத நிலையில் பட்டத்திரி அவர் வீட்டுக்குக் கொண்டுவரப் பட்டார். பட்டத்திரியின் நிலையைக் கண்டு வீட்டார் அதிர்ந்தனர்.
முடங்காத அறிவு
பூர்வமீமாம்சம், உத்தரமீமாம்சம், வியாகரணம் முதலிய சாஸ்திரங்களில் புகழ்மிக்க விற்பன்னராக நாராயண பட்டத்திரி விளங்கினார். ஆயினும், குருவின் அறிவை ஏற்று மகானாவதைவிட, அவரது நோய்த் துயரத்தை ஏற்று மனிதன் ஆனதே அவர் சிறப்பு.
நாராயண பட்டத்திரியின் ரோகத்தைக் குணப்படுத்த அவர் வீட்டார் பார்க்காத வைத்தியர் இல்லை. வேண்டாத தெய்வமில்லை. அந்த ஊரிலிருந்த எழுத்தச்சன் என்ற பிரபல ஜோதிடர் ப்ரசன்னம் எனப்படும் சோழி உருட்டிப் பார்த்து, “குருவாயூர் சென்று அங்கே உள்ள நாராயணசரஸ் என்னும் தீர்த்தத்தில் நீராடி கொடிக்கம்பம் தாண்டி பகவானைத் தரிசிக்கச் செல்லும் வழியில் பகவானுக்கு வலப்பக்கம் உள்ள திண்ணையில் உட்கார்ந்து நாக்கில் மச்சத்தைத் தொட்டுப் பாடச்சொல்! இதுவே நோய்க்கு நிவாரணம்” என்றார்.
மீனை வாயில் தொட்டுப் பாடுவதாவது? நாராயண பட்டத்திரி இவ்வாறு செய்வது தகுமா என்று எல்லோரும் திகைத்தனர். பட்டத்திரி புன்னகைத்தார். பகவான் கிருஷ்ணனின் முதல் அவதாரமான மச்சாவதாரம் தொடங்கி தசாவதாரம் முழுமையும் பாடலாகப் புனையவே தாம் பணிக்கப்பட்டிருப்பதாய் உணர்ந்தார்.
ஒப்பற்ற ஆன்ம அனுபவம்
அவ்வாறே அந்தத் திண்ணையில் பட்டத்திரி நூறு நாட்கள் அமர்ந்து நாராயணிய நாயகனான குருவாயூரப்பன் பெருமையை பாகவதத்தின் சாரமாக நாராயணீயம் என்ற பெயரில் பாடலானார். நோய் தீவிரமடைந்து கொண்டே போயிற்று.
இறைவனை நோக்கி எழுப்பிய வினாக்களாகவே இவரது பாடல்கள் வெளிப்பட்டன. ஆயிரம் பாடல்கள் பாடி முடிந்ததும் நோய் மறைந்து பூரணநலம் பெற்றார் பட்டத்திரி. குருவாயூரப்பனைத் தரிசனம் செய்யச் செல்லும் வழியில் இடப்பக்கம் உள்ள திண்ணையில் ஒரு செப்புப் பட்டயம் இருக்கிறது. அதில் மலையாளத்திலும் தமிழிலும் நாராயண பட்டத்திரி, நாராயணீயம் எழுதிய இடம் என்று எழுதப்பட்டுள்ளது. இன்னும் குருவாயூர் கோயிலில் நாராயணீயம் ஒலிக்கிறது.
நோயிலிருந்து தமது உடல்நலம் வேண்டிப் பாடத் தொடங்கி, உலகோர் நலம்பெற வேண்டுமென்ற பொதுநலம் நாடும் தெளிவினைப் பெற்று, உலகமே தனது குடும்பம் என்ற உயரிய சிந்தனையில் கலக்கின்ற ஒப்பற்ற ஆன்ம அனுபவத்தைப் பெறத்தூண்டுகிறது நாராயணீயம்.
உலகெல்லாம் நோய்த்தொற்று பரவிப் பயமுறுத்தும் இவ்வேளையில் நாராயணீயம் பொதுநலம் சிறக்கப் பாடுகிறது. உலகைக் காக்க முனைந்தால் நாமும் நலம் பெறலாம் என்பதே நாராயணீயத்தின் நாதம்.
(தேடல் தொடரும்)
கட்டுரையாளர்,
தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com