ஆனந்த ஜோதி

இயேசுவின் உருவகக் கதைகள் 07: ஏழைக்குப் பெயரிட்ட மனித குமாரன்

செய்திப்பிரிவு

எம்.ஏ. ஜோ

மிகுந்த எச்சரிக்கை உணர்வோடும் பொறுப்புணர்வோடும் பணத்தைக் கையாளாவிட்டால் பணம் எண்ணற்ற தீமைகளுக்கு நம்மை இட்டுச்சென்று விடும் என்பதை இயேசு பலமுறை நினைவுறுத்தினார். ஒரு முறை “நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது” என்று தீர்க்கமாகச் சொன்னார். இதன் பொருள் என்ன? பணத்துக்குப் பணிவிடை செய்யும் அடிமை நீங்கள் என்றால் உங்கள் மனத்திலோ வாழ்க்கையிலோ கடவுள் இருக்க மாட்டார்.

இப்படி அவர் பேசியது பரிசேயருக்கு எரிச்சலூட்டியது. காரணம், அவர்கள் படித்தவர்கள் மட்டுமல்ல. பணக்காரர்களும் கூட. பாதாளம்வரை பாயக்கூடிய பணத்தின் அருமையை, ஆற்றலை அறியாத அப்பாவி என்றெண்ணி, அவர்கள் இயேசுவை ஏளனம் செய்தனர். அவர்களுக்காக இயேசு “செல்வந்தரும் லாசரும்” எனப்படும் இந்தக் கதையைச் சொன்னார்.

ஆடம்பர ஆடைகள் அணிந்து தினமும் அறுசுவை உணவு உண்டு வாழ்ந்த செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவனது மாளிகை வாசலில் லாசர் என்ற பிச்சைக்காரர் இருந்தார். உடலெல்லாம் புண்ணாகி நோயுற்றிருந்த அவர் செல்வந்தன் உண்டது போக, ஏதாவது மீதி தனக்குக் கிடைக்குமா என்று ஏங்கினார். செல்வந்தன் அவரைக் கண்டுகொள்ளவே இல்லை.

காலம் கரைந்தது. இருவரும் இறந்தனர். அவர்களின் நிலை தலைகீழாக மாறிப் போனது. வாழும்போது மாளிகையில் இருந்தவர், இறந்த பின் நரகத்தில் புதைக்கப்பட்டார். வாழும்போது தெருவில் ஆதரவின்றிக் கிடந்த ஏழை லாசர் இறந்த பின் விண்ணகத்தில் அமர்த்தப்பட்டார்.

இந்தக் கதைக்கு உள்ள தனிச்சிறப்பு என்ன தெரியுமா? இயேசு தான் சொல்லும் கதைகளில் வரும் கதைமாந்தர் யாருக்கும் பெயர் சூட்டுவதில்லை. அந்த விதிக்கு விலக்காக இந்தக் கதையின் நாயகனாகிய ஏழை நோயாளிக்கு லாசர் என்று பெயர் சூட்டுகிறார். அதற்கு ‘கடவுளின் உதவி பெற்றவர்’ என்று பொருள். செல்வந்தர்களின் பெயரை அனைவரும் அறிவர். அப்பாவி ஏழைகளின் பெயர்கள் யாருக்குத் தெரியும்?

பொருள் இல்லாதவர்கள் பெயர் இல்லாதவர்கள்தாம். இயேசு இந்த விதியை மாற்றுகிறார். ஏழைக்குப் பெயர் சூட்டி, செல்வந்தரைப் பெயர் இல்லாமல் விட்டுவிடுகிறார்.

ஒன்றைக் கவனித்தீர்களா? இந்தச் செல்வந்தன் பெரும் குற்றங்கள் செய்த குற்றவாளி அல்ல. கொடுக்க மறுத்தது மட்டுமே அவன் செய்த குற்றம்.

ஆனால், கொடுப்பதில் உள்ள பேரானந்தத்தை உணர்ந்த செல்வந்தர்களும் இருக்கிறார்கள். ‘கிவிங் ப்ளெட்ஜ்’ (Giving Pledge) என்றொரு பெரும் செல்வந்தர் குழு இருக்கிறது. கிவிங் ப்ளெட்ஜ் என்றால் ‘கொடுக்க வாக்குறுதி’ என்று பொருள். வறுமை ஒழிப்பு, நோய் அழிப்பு, கல்வி, புலம்பெயர்ந்தோர் நலன் போன்ற நோக்கங்களுக்காக, உலகெங்கும் நிகழும் மனிதநேயப் பணிகளுக்காக 3,580 கோடி டாலர் தருவதாக அறிவித்து பில் கேட்ஸும் அவருடைய மனைவி மிலின்டா கேட்ஸும், 3510 கோடி டாலர் தருவதாக வாக்களித்து வாரன் பஃபெட் என்ற செல்வந்தரும் இணைந்து 2010-ம் ஆண்டில் இந்தக் குழுவைத் தொடங்கினர்.

இந்த மனிதநேயப் பணிகளுக்காகத் தங்கள் சொத்தில் குறைந்தபட்சம் பாதியையாவது தர வாக்களிக்கும் பெரும் செல்வந்தர்கள் யாரும் இதில் சேரலாம் என்று அறிவித்து, சேருமாறு மற்ற செல்வந்தர்களுக்கு இம்மூவரும் அழைப்பு விடுத்தனர். இன்று, நமது விப்ரோ நிறுவனர் அஸிம் ப்ரேம்ஜி உட்பட இக்குழுவில் 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கடவுளின் பார்வையில் கோடிகள் பெரிதல்ல. இருப்பது ஒரு தட்டுச் சோறுதான் என்றாலும், பசித்திருக்கும் இன்னொருவரைப் பார்த்ததும், அதில் பாதியைப் பகிர்ந்து தருகிற ஏழை எளிய மக்கள் அநேகர்.

“கொடுங்கள். உங்களுக்குக் கொடுக்கப்படும்” என்று சொன்னவர் இயேசு. அவர் சொன்ன இக்கதை, கொடுக்காதவர்களை எச்சரித்து, கொடுக்க அழைக்கும் கதை.

(தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com

SCROLL FOR NEXT