எம்.ஏ. ஜோ
கொடுத்தவர்கள் கணக்குக் கேட்பதும், பெற்றுக் கொண்டவர்கள் கணக்குக் கொடுப்பதும் இயல்புதானே? அதுதொடர்பாக இயேசு சொன்ன கதை தாலந்துகளின் கதை.
நெடும்பயணம் செல்வதற்கு முன்னர், தன் பணியாளர்கள் மூவரை அழைத்த தலைவர், ஒருவருக்கு ஐந்து தாலந்துகளும், இன்னொருவருக்கு இரண்டு தாலந்துகளும், மூன்றாம் நபருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார்.
‘தாலந்து’ (Talent) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நாம் இன்று திறமை என்றே பொருள் கொள்கிறோம். ஆனால், இயேசுவின் காலத்தில் அது பெருமதிப்பு கொண்ட நாணயம். பொன்னால் ஆன தாலந்து நாணயத்தின் இன்றைய மதிப்பு பத்து லட்சம் டாலருக்கு மேல் இருக்கும் என்கிறார்கள்.
ஐந்து தாலந்துகளைப் பெற்ற பணியாளர், அவற்றைக் கொண்டு வணிகம் செய்து, ஐந்தைப் பத்தாக்கினார். இரண்டு தாலந்துகள் பெற்றவரும் அவற்றை வைத்து வணிகம் செய்து, மேலும் இரண்டு தாலந்துகளை ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவர் அதை இழந்துவிடக் கூடாது என்ற பயத்தில், அதை நிலத்தில் புதைத்து வைத்தார்.
பயணம் முடிந்து திரும்பிய தலைவர், மூவரையும் அழைத்துக் கணக்குக் கேட்டார். ஐந்து தாலந்தைப் பத்தாக்கியவரும், இரண்டு தாலந்தை நான்காக்கியவரும் வந்து தாங்கள் ஈட்டிய பணத்தைத் தந்தனர். மிகவும் மகிழ்ந்த தலைவர், அவர்கள் இருவரையும் நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளர் என்று பாராட்டி, பெரிய பொறுப்புகளில் அவர்களை அமர்த்துவதாக வாக்களித்தார்.
தான் பெற்ற ஒரு தாலந்தை நிலத்தில் புதைத்துவைத்த பணியாளர், அதைத் தோண்டி எடுத்து வந்து, தான் அப்படிச் செய்ததற்கு ஒரு வினோதமான விளக்கம் சொன்னார். “ஐயா, நீர் எத்தகைய ஆள் என்பது எனக்குத் தெரியும். எனவே, நீர் கொடுத்த ஒரு தாலந்தை வைத்து வணிகம் செய்ய முயன்று அதையும் இழந்துவிட்டால் நீர் என்னை என்ன செய்வீரோ எனப் பயந்து, அதை அப்படியே பத்திரமாகத் திருப்பிக் கொடுத்துவிடலாம் என்று நினைத்து நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ நீர் தந்த தாலந்து” என்று அதைத் திருப்பிக் கொடுத்தார். கடும் கோபம் கொண்ட தலைவர் அவருக்குக் கடுமையான தண்டனை வழங்கினார்.
இந்தக் கதையின் மூலம் இயேசு சொல்ல விரும்பிய உண்மைகள் பலவாக இருக்கலாம். நமக்குத் தரப்படும் தாலந்துகளைத் தருவது இறைவன். தங்களின் திறமைகளை நினைத்து இறுமாப்பு கொள்வோருக்கும், தற்பெருமை பேசித் திரிவோருக்கும் புரியாத உண்மை இதுதான். திறமைகள் இறைவனால் தரப்பட்டவை. எனவே இறைவனின் புகழுக்காக, இறைவனின் பிள்ளைகளாகிய மக்களின் நலனுக்காக அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
நமது திறமைகளைப் பயன்படுத்தாமல் புதைப்பது தவறு. நமக்குப் பொருளும் புகழும் சேர்ப்பதற்காக மட்டும் நமது திறமைகளைப் பயன்படுத்துவதும் தவறு.
திறமைகள் எல்லோருக்கும் சமமாகத் தரப்படுவதில்லை. ஒருவருக்கு ஐந்து தாலந்துகளும், ஒருவருக்கு இரண்டும், ஒருவருக்கு ஒன்றும் தரப்படுகின்றன. இது கடவுளின் திருவுள்ளம்.
‘நான் வாழ்வில் வெற்றிபெற்று மகிழ்ச்சியாய் வாழ எனக்குத் தரப்பட்டதே போதும்’ என்று புரிந்து, அவற்றை மூலதனமாக்கி வெற்றி பெறுவதே விவேகம்.
யாருக்கு இந்த விவேகம் எளிதில் வாய்க்கிறது? கடவுள் நம் மீது அன்பும் அக்கறையும் கொண்ட தந்தை என்பதைப் புரிந்துகொள்வோருக்கே. மாறாக, தாலந்தை நிலத்தில் புதைத்த அறிவற்ற அந்தப் பணியாளரைப் போன்று, கடவுளை ஒரு இரக்கமற்ற நடுவராகப் பார்த்துப் பயப்படுவோருக்கு தங்கள் திறமைகளைப் பயன்படுத்தி உழைக்கத் தோன்றாது. அவற்றைப் புதைக்கவே தோன்றும்.
நம்மை இயக்கவல்லது அன்புதான். அச்சம் நம்மை முடக்கிவிடுகிறது. அன்பு தரும் ஆற்றலால் இயங்கிக்கொண்டே இருப்பவர்களா நாம்? அல்லது அச்சத்தால் முடங்கிப்போனவர்களா?
நமக்கு இவ்வுலகில் தரப்பட்ட நல்லவைக்கெல்லாம் ஒருநாள் கணக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் நம்மில் இருந்தால், நல்லது செய்ய நாம் இயங்கிக்கொண்டே இருப்போம்.
(தொடரும்)
கட்டுரையாளர்,
தொடர்புக்கு : majoe2703@gmail.com