ஆனந்த ஜோதி

இயேசுவின் உருவகக் கதைகள் 05: கடைசியில் வந்தவர்களுக்கும்

செய்திப்பிரிவு

எம்.ஏ. ஜோ

இயேசு சொன்ன கதைகளிலேயே கொஞ்சம் புதிரான கதை இதுதான். படித்தவுடன் ‘இது சரிதானா? இது நியாயம் தானா?’ என்று கேட்க வைக்கும் கதை. ஆனால், தோண்டத் தோண்ட கிடைக்கும் புதையலைப் போல யோசிக்க யோசிக்க முத்தான உண்மை களை நம் முன்வைக்கும் கதை இது.

அந்த நிலக்கிழாருக்குச் சொந்தமான திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்ய வேலையாட்கள் தேவைப்பட்டனர். அதனால் அவர் காலை 6 மணிக்கே போய்த் தேடினார். வேலை தேடிக் காத்திருந்த சில வேலையாட்களிடம் நாளொன்றுக்குக் கூலியாக ஒரு வெள்ளி நாணயம் தருவதாகச் சொன்னார். தோட்ட வேலையாட்களுக்கு அது மிக நல்ல சம்பளம். எனவே, அவர்கள் உடனே சம்மதித்து வேலை செய்யச் சென்றனர். அவருக்கு இன்னும் வேலையாட்கள் தேவைப்பட்டனர். வேலையின்றி வாடுவோர் பலர் இருந்ததால் அவர் காலை 9 மணிக்கு, பகல் 12 மணிக்கு, பிற்பகல் 3 மணிக்கு, பின்பு கடைசியாக மாலை 5 மணிக்குப் போய் அப்போது வேலையின்றி நின்ற ஆட்களை வேலைக்கு அமர்த்தினார்.

இவர்களிடம் கூலி என்ன வென்று சொல்லவில்லை. “நேர்மையான கூலி தருவேன்” என்று அவர் சொன்னதால் அதற்கு மேல் அவர்கள் எதையும் கேட்க வில்லை. போய் வேலை செய்தார்கள். மாலை 6 மணிக்கு அந்த நாளுக்கான வேலை முடிந்ததும் கூலி தரப்பட்டது.

முதலில், மாலை 5 மணிக்குக் கடைசியாய் வந்தவர்களுக்குக் கூலியாக ஒரு வெள்ளி நாணயம் தரப்பட்டது. காலையிலேயே வேலைக்கு அமர்த்தப்பட்டு நாள் முழுவதும் வேலை செய்தவர்கள் இதைப் பார்த்ததும் என்ன நினைத்தார்கள்? “மாலை 5 மணிக்கு வந்து ஒரு மணி நேரமே வேலை செய்தவர்களுக்கு ஒரு வெள்ளி நாணயம் கூலி என்றால் காலையிலிருந்தே வேலை செய்யும் நமக்கு நிறையப் பணம் கிடைக்கும்” என்று நம்பினார்கள். ஆனால், அவர்களுக்கும் அதே தொகைதான் தரப்பட்டது. கோபத்தில் அவர்கள் நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்தார்கள். “கடைசியில் வந்து ஒரு மணி நேரமே வேலை செய்தவர்களோடு, பகல் முழுவதும் கடும் வெயிலில் வேலை செய்த எங்களையும் சமமாக்கி விட்டீரே?” என்றார்கள்.

நிலக்கிழார் சொன்னார்: “ஒரு வெள்ளி எனும் கூலிக்கு ஒத்துக்கொண்டு தானே வேலை செய்ய வந்தீர்கள்? உங்களோடு பேசியபடி உங்களுக்குரியதைத் தருகிறேன். வாங்கிக் கொண்டு; செல்லுங்கள்.

உங்களுக்குப் பேசிய கூலியைக் கடைசியில் வந்தவர்களுக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது உங்களுக்குப் பொறாமையா?” என்றார்.

தங்களுக்குத் தரப்பட்டதை மட்டும் பார்ப்பவர்களுக்கு என்ன தோன்றும்? நன்றியுணர்வு. பிறருக்குத் தரப்பட்டதையே பார்த்துக்கொண்டிருப்ப வருக்கு என்ன தோன்றும்? பொறாமை.

சரி, கடைசியில் வந்தவருக்கும் தாராளமாக அவர் ஒரு வெள்ளி தந்தது எதனால்? மாலை 5 மணி வரை அவர்கள் வேலை செய்யாததற்குக் காரணம், யாரும் அவர்களை வேலைக்கு அமர்த்தவில்லை என்பதுதான். வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு யார் பொறுப்பு? அந்த அப்பாவி தொழிலாளர்கள் அல்ல. அது மட்டுமல்ல. இன்னொரு முக்கியமான காரணம் இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு வெள்ளி கிடைத்தால் தான் அவர்களும் அவர்கள் குடும்பமும் பிழைக்க முடியும். தொழிலாளிகள் மட்டுமல்ல, அவர்களின் குடும்பமும் வறுமையின்றி வாழத் தேவையான சம்பளத்தை ஆங்கிலத்திலே “லிவிங் வேஜ்” (living wage) என்கின்றனர். மாண்புடன் வாழத் தேவையான சம்பளம்.

இதுவே குறைந்தபட்ச ஊதியமாக இருக்க வேண்டும் என்று சொன்ன பொருளாதார அறிஞர் ஜான் ரஸ்கின் இயேசு சொன்ன இந்தக் கதையின் அடிப்படையில்தான் தன் நூலுக்கு “கடைசியில் வந்தவருக்கும்” (Unto This Last) என்று பெயர் சூட்டினார். தென்னாப்பிரிக்காவில் ரயில் பயணம் ஒன்றின் போது ஒரு நண்பர் தந்த இந்த நூலை வாசித்த மகாத்மா காந்தி, அது தன்னில் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்.

பிற மனிதரின் உழைப்பை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு ஊதியம் தருகின்ற முதலாளிகளுக்கும் அரசுகளுக்கும் இக்கதை என்ன சொல்லலாம்;? ‘ஒருவரின் ஊதியத்தைக் கணிக்கும்போது அவர் எவ்வளவு உழைத்தார் என்பதை மட்டும் பார்க்காமல் அவரும் அவரது குடும்ப மும் வறுமையின்றி வாழ எவ்வளவு தேவைப்படும் என்றும் யோசியுங்கள்.’

இக்கதை நம் அனைவருக்கும் என்ன சொல்லலாம்? ‘பிறரோடு உங்களை ஒப்பிட்டுப் பொறாமையில் புழுங்காமல், கடவுள் உங்களுக்குத் தந்திருப்பதை நினைத்து மகிழ்ந்திருங்கள். பிறருக்கும் தாராளமாகத் தரும் இறைவனைக் குறை சொல்லாமல் அவரின் அன்பையும் தாராளக் குணத்தையும் எண்ணி மகிழுங்கள். வறுமையின் கொடிய கரங்கள் தீண்டாத நல்வாழ்வு வாழத் தேவையான ஊதியம் கடைநிலை ஊழியருக்கும் கிடைக்குமாறு செய்யுங்கள்.’

(தொடரும்)

கட்டுரையாளர்,

தொடர்புக்கு : majoe2703@gmail.com

SCROLL FOR NEXT