சுவாமி விவேகானந்தர் கல்கத்தாவில் ஜூலை 4ம் தேதி முக்தியடைந்தார். அவருடைய புண்ணிய திதி என்று சொல்லப்படும் இந்த நாளையொட்டி, என்.ஜி.எம். கல்லூரி மாணவர்களிடம் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் பேசியதன் தொகுப்பு யூடியூபில் பலரின் கவனத்தை ஈர்த்துவருகிறது. அதிலிருந்து ஒரு பகுதி:
தெற்கே ராமேசுவரத்தில் இருக்கும் ஒருவர் வடக்கே காசிக்கு செல்லவேண்டும் என்றும், வடக்கே காசியில் இருக்கும் ஒருவர் தெற்கே ராமேசுவரத்திற்கு செல்லவேண்டும் என்று நினைக்கும் வரையில் நம்முடைய தேசம் கலாச்சார ரீதியில் ஒரு வல்லர சாகவே இருக்கும் என்றார் சுவாமி விவேகானந்தர். அந்த வகையில நம்முடைய பூமி ஆன்மிக கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட பூமி.
அஞ்ஞானம் என்னும் இருளில் இந்த உலகம் இருந்த காலத்திலேயே மிகப் பெரிய ஆன்மிக ரிஷிகள் பலர் தோன்றி, மனிதனின் ஆத்மாவை ஆராய்ந்து, மனிதனின் ஸ்வரூபம் என்ன என்று தெளிந்து, அதையே வேதங்களாக வடித்துத் தந்தது, காலம் காலமாக வந்த ரிஷி பரம்பரையினர் அந்த ஆன்மிக வெளிச்சத்தால், அஞ்ஞான இருளைப் போக்கியிருக்கின்றனர். வேத காலத்திலிருந்து விஞ்ஞான காலம் வரை தொடர்கிறது. அந்த பரம்பரையில் வந்தவர்தான் சுவாமி விவேகானந்தர்.
பலம், பலவீனம்
தன்னைத்தான் அறிந்துகொள்வதே ஆன்மிகம் என்றவர், வழிபாட்டோடு நின்றுவிடக் கூடாது, அதையும் கடந்து அதற்கு பொறுப்பு இருக்கிறது என்றார். வழிபாட்டுத் தலங்களை விட்டு வெளியே வந்து ஆன்மிகக் காரியங்களை செய்ய வேண்டும். மனித வளத்தை மேம்படுத்துவதே ஆன்மிகம் என்றார். ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும். அதுவே ஆன்மிகத்தில் புதிய விடியல் என்றார் சுவாமி விவேகானந்தர்.
பலத்தைக் கொண்டு, பலவீனத்தை போக்க வேண்டும். வந்தோம் இருந்தோம் என்று போவது வாழ்க்கை அல்ல என்பதைப் புரியவைத்தவர் சுவாமி விவேகானந்தர். மனித வள மேம்பாட்டை, மனிதனின் அளப்பரிய ஆற்றலை வளர்ப்பதன்மூலம், எத்தகைய காரியங்களையும் செய்யக் கூடியவன் அவன் என்றவர். சுவாமி விவேகானந்தரை அவரின் கருத்தில் ஆழமாக ஈடுபட்டு உணரவேண்டும்.
உன்னுள் அனைத்து ஆற்றல்களும் இருக்கின்றன. உனக்கு நிகர் நீயே. உன் மீது நம்பிக்கை வை. உன்னால் எதுவும் முடியும். வழக்கமான சம்பிரதாயமான சடங்கில் விவேகானந்தருக்கு நம்பிக்கை இல்லை. மதம் என்பது ஆன்மிகம் என்னும் தெளிவைக் கொண்டவர். நான் மறைந்த பின் ஆயிரம் ஆண்டுகள் என்னுடைய தாக்கம் இருக்கும் என்றார். இந்த தீர்க்க தரிசனம் யாருக்கு வரும்?
இளைஞர்களின் மீதான நம்பிக்கை
இளைஞர்களின் மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால்தான் அவர் பிறந்த ஜனவரி 12, `இளைஞர் தினம்’ என்று மைய அரசு அறிவித்துள்ளது. இளைஞர்களின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையால்தான், “100 இளைஞர் களை தாருங்கள் உலகத்தையே மாற்றிக் காட்டுகிறேன்" என்றார். விவேகானந்தரின் கருத்துகளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை தங்களின் மனத்தில் கொண்டு, செயற்கரிய செயல்களை செய்பவர்களாக மாணவர்கள் சரித்திரத்தில் இடம்பெற வேண்டும்.
ஒவ்வொரு இளைஞனும் தன்னை முதலில் உயர்த்திக் கொள்ள வேண்டும். அதன்பின் தனக்கு வந்த உயர்வைக் கொண்டு, அதற்குக் காரணமாக இருந்த சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என்றார் சுவாமி விவேகானந்தர். சாதி, மத, இன பேதங்களைக் கடந்து ஒன்றுபட்ட கலாச்சாரமே, பாரத கலாச்சாரம். இதில் மலிவான சிந்தனைகளுக்கு இடமே இல்லை. பணம், பதவி, புகழ் போன்ற சாதாரண இலக்குகளை நோக்கமாகக் கொள்ளாமல் உலக நன்மை என்னும் பரந்துபட்ட சிந்தனையை இளைஞர்கள் தங்களின் மனத்தில் கொண்டு, உயர்ந்த நோக்கத்தை தங்கள் வாழ்க்கையின் லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”.
தொகுப்பு: திரு
காணொலியைக் காண: https://bit.ly/3iCGMOk