- கனி
ஜென்குருவான அண்டங்காக்கை, ஓக் மரத்திலிருந்த தனக்கான இருக்கையில் அமர்ந்தது. அது, தேவதாரு மரங்கள் கூட்டிய சிறப்புக் கூட்டத்தில் பேசியது, “இது நான் கிளம்ப வேண்டிய நேரம்” என்றது. “எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டது முள்ளம்பன்றி. அதற்கு அண்டங்காக்கை, “எங்கே தேவதாரு மரங்களின் வேர்கள் சிற்றோடையில் வெளிப்படையாக நிற்கின்றனவோ, அங்கே” என்றது. அந்தக் கூட்டத்தில் அமைதி பரவியது. ஒரு காட்டுக்கோழி அழும் சத்தம் கேட்டது. “எங்களுக்காக இறுதியாக ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா?” என்று முள்ளம்பன்றி கேட்டது. “நம்பிக்கை கொள்ளுங்கள்” என்றது அண்டங்காக்கை.
இயற்கையின் விதிகளை அறிய முற்படுவோம்
‘மன ஆய்வுகள்’ என்பது ஜென்னின் தாக்கத்தில் உருவான ஓர் எளிமையான சுய மேம்பாட்டு இயக்கம். இந்த இயக்கத்தைப் பின்பற்றும் ஒருவர், பவுத்தத்தின் அடிப்படைகளைத் தெரிந்துகொள்வதற்காக ஜென் குரு ஷோஸனிடம் வந்தார். “அன்றாட தர்க்கத்தின் அடிப்படையிலான அறிவைக் கொண்டு உங்களை நிர்வகிப்பதற்கான விஷயமல்ல பவுத்தம். கடந்த காலம், வருங்காலம் என எதைப் பற்றியும் எண்ணாமல், நிகழ்காலத்தின் இந்தக் கணத்தை வீணாக்காமல் முற்றிலும் பயன்படுத்துவதாகும்.
“அதனால்தான் முன்னோர்கள் மக்களைக் காலத்தைப் பற்றி எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தினார்கள்: மனத்தைக் கண்டிப்புடன் பாதுகாப்பது, நல்லது,கெட்டது பாகுபாடில்லாமல் அனைத்து விஷயங்களையும் அகந்தையிலிருந்து முழுமையாக நீக்கிப் பார்க்க வேண்டும் என்பது அதன் அர்த்தம். அத்துடன், காரணம், விளைவு ஆகியவற்றின் தாத்பரியத்தைக் கவனிப்பது மனத்தின் மறு உருவாக்கத்துக்கு நல்லது.
உதாரணத்துக்கு, மற்றவர்கள் நம்மை வெறுத்தாலும், நாம் அவர்களை மனக்கசப்புடன் அணுகக் கூடாது. நம்மைத்தான் நாம் விமர்சனப்பார்வையுடன் அணுகவேண்டும். எந்தக் காரணமும் இல்லாமல் நம்மை ஏன் மற்றவர்கள் வெறுக்கப் போகிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும். நம்மிடம் சில சாதாரணக் காரணிகள் இருக்கலாம், அல்லது சில அசாதாரணக் காரணிகளும் இருக்கலாம் என்பதை ஊகிக்க வேண்டும்.
இவையெல்லாம் காரணங்களின் விளைவுகள் என்று வைத்துக்கொண்டாலும், நாம் தன்வயமான கருத்துகளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்கக் கூடாது. ஒட்டுமொத்தமாகவே தன்வயமான கருத்துகளின் அடிப்படையில் விஷயங்கள் நடைபெறுவதில்லை. அவை இயற்கையின் விதிகளின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன. உங்கள் மனத்தில் இந்த விழிப்புணர்வைப் பராமரிக்கும்போது உங்கள் மனம் மிகவும் தெளிவுடன் இருக்கும்” என்றார் ஜென் குரு ஷோஸன்.