ஆனந்த ஜோதி

இயேசுவின் உருவகக் கதைகள் 3: நல்லவன் ஏன் கொண்டாடப்படுவதில்லை?

செய்திப்பிரிவு

எம்.ஏ. ஜோ

இயேசு சொன்ன ஊதாரி மைந்தனின் கதையில் வரும் மூத்த மகன் இளைய மகனிலிருந்து முற்றிலும் மாறுபட்டவன். இளைய மகனுக்குத் தந்தையின் வீடு போதுமானதாக இல்லை. இவ்வளவு அன்புமிக்க ஒரு தந்தை இருந்தும், அந்தத் தந்தையின் வீட்டில் எல்லா வசதிகளும் இருந்தும் இவனுக்குத் திருப்தி இல்லை.

மூத்த மகனுக்கு, தந்தை போதும். தன் வீடு போதும். தந்தையின் வயலில் அவன் தினமும் செய்கிற வேலை போதும். வேறு எந்த ஆசையும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தச் சூழலில் திடீரெனத் தன் தம்பி இப்படியொரு காரியத்தைச் செய்தது அவனுக்குள் மிகுந்த துயரத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும். தன் தம்பி கேட்டதும் சொத்தைப் பிரித்துக் கொடுத்த தன் தந்தை மீதும் மூத்த மகனுக்குக் கொஞ்சம் கோபம் இருந்திருக்க வேண்டும்.

வழக்கம் போல வயலில் வேலை செய்து விட்டு, வீட்டுக்கு வந்த மூத்த மகன், வீட்டில் ஆடல், பாடல் சத்தம் கேட்டு, அதற்கான காரணம் புரியாமல் குழம்பி, பணியாட்களில் ஒருவரை அழைத்துக் காரணம் கேட்கிறான். தம்பி திரும்ப வந்ததையும், அவன் நலமாகத் திரும்பி வந்ததால் பெருமகிழ்ச்சி அடைந்த தந்தை அவனின் வருகையைக் கொண்டாட விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதையும் அவர் சொல்ல, மூத்த மகனுக்குப் பெருங் கோபம் வந்தது. வீட்டுக்குள் காலடி எடுத்துவைப்பதற்கே நாணினான்.

அதைக் கேட்ட தந்தை, ஓடோடி வந்து, உள்ளே வருமாறு மூத்த மகனைக் கெஞ்சிக் கேட்கிறார். மூத்த மகனின் வருத்தமும் கோபமும் அவன் வார்த்தைகளில் தெறிக்கின்றன. “இத்தனை ஆண்டுகளாக உம் கட்டளைகளை ஒருபோதும் நான் மீறியதில்லை. உமது அடிமை போன்று, உமக்காக வேலை செய்கிறேன். என்றாலும் என் நண்பர்களோடு மகிழ்ந்து கொண்டாட எதுவும் இதுவரை நீர் தந்ததில்லை. ஆனால், விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துக்களையெல்லாம் அழித்து விட்ட இந்த உம் மகன் திரும்பி வந்ததும், இவ்வளவு ஆடம்பரமான விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறீர்” என்கிறான்.

வீட்டுக்குள்ளே வர மறுக்கும் மூத்த மகனின் கோபத்தை ஆற்ற, “மகனே, நீ என்னுடன் இருக்கிறாய். என்னுடையதெல்லாம் உன்னுடையதே. ஆனால், இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாட வேண்டும். ஏனென்றால், இறந்து போன உன் தம்பி மீண்டும் உயிர் பெற்றுள்ளான். காணாமல் போயிருந்தவன் மீண்டும் கிடைத்திருக்கிறான்” என்கிறார் தந்தை. அதோடு கதை முடிகிறது.

மூத்த மகன், தன் தம்பியின் செயல்களை மட்டும் பார்க்கிறான். தந்தை தன் இளைய மகனை முழுவதுமாகப் பார்க்கிறார். மூத்தவன் கடந்த காலத்தை விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறான். தந்தை கடந்ததை மறந்து, எதிர்காலத்தை நோக்குகிறார்.

உடலளவில் தந்தைக்கருகில் இருந்தால் மட்டும் போதுமா? தவறு செய்து தொலைந்து போவோரை தந்தையைப் போலவே இரக்கத்தோடு பார்க்கும் விழிகள் நமக்கும் வேண்டாமா? அவர்கள் வருந்தி, திருந்தி, திரும்புவதை மகிழ்ந்து கொண்டாடும் மனம் வேண்டாமா? இவையெல்லாம் வாய்த்தால் தானே உள்ளத்தளவில் தந்தைக்கு நெருக்க மானவர்களாக இருக்க முடியும்?

இந்தக் கதையில் நாம் யார்? மூத்த மகனா, இளைய மகனா?

(தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com

SCROLL FOR NEXT