ஆனந்த ஜோதி

மயிலேறும் இராவுத்தன்

செய்திப்பிரிவு

ரா.சுந்தர்ராமன்

தமிழ் மக்களின் முதல் மற்றும் மூத்த கடவுள் முருகனுக்கு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை என அறுபடை வீடுகள் உள்ளன. ஆண்டுதோறும் உலகெங்கும் அமைந்துள்ள முருகன் கோயில்களில் கந்தசஷ்டி, பங்குனி உத்திரம் என இரண்டு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அருணகிரிநாதர் இயற்றிய கந்தர் அலங்காரம், திருப்புகழ் ஆகிய இரு நூல்களும் முருக பக்தர்களிடம் புகழ்பெற்றவை.

கந்தர் அலங்காரத்தில் இரண்டு இடங்களில் இன்றையப் தமிழ்ப் பேச்சு வழக்கில் முஸ்லிம்கள் அதிகம் பயன்படுத்தும் ‘இராவுத்தன்’ (இராவுத்தர்) என்ற அரேபிய வார்த்தையை அருணகிரி நாதர் பயன்படுத்தியிருப்பார். இராவுத்தன் (இராவுத்தர்) என்பதற்குக் குதிரை வீரன் என்பது பொருள், இது ‘ரவா’ ‘துதா’ என்ற சொற்களிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ரவா என்றால் அரசன், துதா-செய்தியாளன். முற்காலத்தில் அரசனுக்குச் செய்தி கொண்டு வரும் குதிரை வீரன் என்ற அர்த்தத்தில் இச்சொற்கள் பயன் படுத்தப்பட்டுள்ளன.

பின்பு அரேபிய நாட்டிலிருந்து தமிழகத்துக்குக் குதிரைகள் விற்க வந்த இஸ்லாமியர் களைக் குறிப்பதாயிற்று. இன்றும் இஸ்லாம் சமுதாயத்தைச் சேர்ந்த பலர் தங்களுடைய பெயரோடு இச்சொல்லை இணைத்துக்கொள்ளும் வழக்கமும் இருந்து வருகிறது. இதுதவிர முஸ்லிம்களில் ஒரு இனத்தார்க்குரிய சிறப்புப் பெயராகவே இன்றைய நாளில் இச்சொல் கையாளப் பட்டு வருகிறது.

இந்த விளிப்பை முருகனுக்குரிய பெயர்களுள் ஒன்றாக, முருகனின் தலைசிறந்த அடியார்களுள் ஒருவ ரான அருணகிரிநாதர் பயன்படுத்தி நமக்கு வழங்கியுள்ளார்.

“கண்டுண்ட செல்லியர் மெல்லியர்

காமக் கலவிக் கள்ளை

மொண்டுண் டயர்கினும், வேல்மறவேன்:

முது கூளித் திரள்

டுண்டுண் டுடுடுடு டூடூ

டுடுடுடு டுண்டு டுண்டு

டிண்டிண் டெனக்கொட்டி ஆட,

வெம்சூர்க் கொன்ற ராவுத்தனே”

“படிக்கும் திருப்புகழ் போற்றுவன்:

கூற்றுவன் பாசத்தினாற்

பிடிக்கும் பொழுது வந்து, அஞ்சல்

என்பாய்; பெரும்பாம்பில் நின்று

நடிக்கும் பிரான் மருகா! கொடுஞ்

சூரன் நடுங்கவெற்பை

இடிக்கும் கலாபத் தனிமயில்

ஏறும் ராவுத்தனே”

- கந்தர் அலங்காரம்

என்ற இருபாடல்களில் அருணகிரி நாதர் முருகப்பெருமானை ‘ராவுத்தன்’ எனச் சிறப்பித்துக் குறிப்பிட்டு வழிபட்டுப் பாடியிருப்பது அவருடைய கலைநிலையையும், சமரச மனப்பான்மையையும் விளக்குகிறது.

முருகன் மீது இனிமையான பண்களைப் பாடிய அருணகிரிநாதர் கி.பி.15-ம் நூற்றாண்டில் விஜயநகர சிற்றரசர் காலத்தில் வாழ்ந்ததாகத் தெரிகிறது. இஸ்லாமியர்கள் தென்னிந்தியாவில் பரவலாகப் பெருகி ஆங்காங்கே ஆட்சிசெய்துவந்த காலம் அது. எனவேதான், அன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் சொற்கள் தமிழ் மக்களின் பேச்சு வழக்கில் கலந்து வரத் தொடங்கியது.

“கற்பக கந்திரு நாடுயர் வாழ்வுறச்

சித்தர் விஞ்சையர் மாகர் சபாசுஎனக்

கட்ட வெங்காடு சூர்கிளை

வேர்அற விடும்வேலா”

(திருநள்ளாறு பற்றிய திருப்புகழ் பாடலில்)

“சுராதி பதிமால் அயனொடு சலாம்இடு

சுவாமி மலை வாழும் பெருமானே” (சுவாமிமலை பற்றிய திருப்புகழ் பாடலில்) என்று தம்முடைய திருப்புகழ் பாடல்களில் ‘சபாசு’, ‘சலாம்’ என்ற வேறுமொழிச் சொற்களைப் பயன்படுத்தியிருப்பார்.

திருப்புகழில் செந்தமிழின் சிறப்பு சிதையாமல் சந்தம் செறிந்து சிறப்பாக இருக்கும். சைவ வைணவ சமரசப் போக்கும் நோக்கும் அருணகிரி நாதரால் பெரிதும் போற்றப்பட்டன. “காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி” என்பது பழமொழி. வழிபாட்டில் திளைத்து மகிழ்ந்த அருணகிரிநாதர் உள்ளத்தில் இனமொழி வேறுபாட்டைக் காண முடியவில்லை. எனவேதான், தன்னுடைய வழிபடு கடவுளும் தமிழின் முதல் கடவுளாகிய முருகனையே ‘இராவுத்தன்’ எனப் பாடிப் புகழ்ந்து, மகிழ்ந்து மனமாறப் போற்றுகிறார்.

மனிதகுலமனைத்தும் ஒரு குலமாக ஒன்றி வாழ ‘மயிலேறும் இராவுத்தன்’ எனப் போற்றப்படும் முருகனின் மலரடிப் பாதங்களை வணங்குவோம்.

SCROLL FOR NEXT