சங்கர் வெங்கட்ராமன்
பாரம்பரியமான கர்னாடக இசை வாத்தியங்களில் மிகவும் பழமை வாய்ந்த வீணையை, பல விதமான பாணிகளில் வாசிக்கும் கலைஞர்கள் நம்முடைய தேசத்தில் நிறைந்திருந்தனர். காரைக்குடி - வீணை தனம்மாள் - வீணை எஸ். பாலசந்தர் ஆகியோரது பாணிகளை உள்ளடக்கிய தஞ்சாவூர் பாணி, மைசூர் பாணி, ஆந்திர பாணி, திருவாங்கூர் அல்லது கேரள பாணி அவற்றில் சில. இதில் தஞ்சாவூர் பாணியில் சிறந்து விளங்கிய கலைஞர்களில் ஒருவர் வீணை பிச்சுமணி அய்யர். அவரின் நூற்றாண்டு விழா அவரின் ரசிகர்கள் மற்றும் அவரின் மாணவர்களால் அண்மையில் மே 18 அன்று கரோனா ஊரடங்கால் இணைய வழியில் கொண்டாடப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் இருக்கும் கத்தரிப்புலம் கிராமத்தில், பாரம்பரியமான இசைக் குடும்பத்தில் ராஜகோபால அய்யர் ஞானாம்பாள் தம்பதிக்கு பிச்சுமணி மகனாகப் பிறந்தார்.
தொடக்கத்தில் பிச்சுமணிக்கு இசையை `ஜாலர்’ கோபால அய்யரும் `தின்னியம்’ வெங்கட்ராம அய்யரும் அளித்தனர். அதன்பின் திருச்சியைச் சேர்ந்த வீணை குப்பண்ணா என்பவரிடம் வீணை வாசிக்கும் பயிற்சியைத் தொடங்கினார். அவரின் 15வது வயதில் திருச்சி தேசிய கல்லூரியில் நடந்த கர்னாடக இசைப் போட்டியில் வெற்றி பெற்றார். தேசியக் கல்லூரி பள்ளியில் பத்தாவது முடித்தபின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டுகள் இசை படித்து வீணை வாசிப்பில் `சங்கீத பூஷணம்’ பட்டத்தைப் பெற்றார்.
டைகர் வரதாச்சாரி போன்ற மேதைகளின் வார்ப்பில் உருவான பிச்சுமணி, அவரின் சம காலத்து கலைஞர்களான கே.எஸ். நாராயணசுவாமி, வி.எஸ்.கோமதி சங்கர அய்யர் ஆகியோரால் பெரிதும் நேசிக்கப்பட்ட கலைஞராக உருவானார்.
வேணு, வயலின், வீணா
பிச்சுமணி அய்யர் காஞ்சி பரமாச்சாரியாரிடம் அளவற்ற பக்தியுடன் இருந்தார். பரமாச்சார்யாவின் விருப்பப்படி வயலின் மேதை லால்குடி ஜெயராமன், புல்லாங்குழல் மேதை என். ரமணி ஆகியோருடன் இணைந்து வயலின் – வேணு – வீணா இசை நிகழ்ச்சிகளை அவரது முன்னிலையிலேயே நடத்தியுள்ளார்.
பல ஆண்டுகளாக சென்னையை அடுத்துள்ள திருமுல்லைவாயல் வைஷ்ணவி தேவி கோயிலில் சரஸ்வதி பூஜை நடக்கும்போது வீணை இசைக் கச்சேரிகளை நடத்தியிருக்கிறார்.
உச்சத்தில் கிரி
சுத்த சத்வாநந்தாவின் பாடலுக்கு இவர் அமைத்த இசையிலேயே தன்னுடைய மேதைமையைக் காட்டியிருப்பார். `வேங்கட கிரி நாத சரணம்’ என்னும் அந்தப் பாடலை ரேவதி ராகத்தில் அமைத்திருப்பார். அதிலும் `கிரி’ (மலையின் உயரத்தைக் குறிக்கும் வகையில்) என்று வரும் இடத்தில் எல்லாம் உச்ச ஸ்தாயியில் சங்கதிகள் இருக்கும். சரணத்தின் முடிவில் கீழ்ஸ்தாயியில் சங்கதிகளை சரணாகதி தத்துவத்தை விளக்கும் வகையில் அமைத்திருப்பார். அவ்வளவு நுணுக்கமாக இசையை அமைக்கும் திறன் படைத்தவர் பிச்சுமணி அய்யர்.
பக்தியைத் திரையில் பரப்பிய வீணை
1940-ல் பிச்சுமணி அய்யரை திரைத் துறைக்கு அழைத்துவந்த பெருமை பிரபல இயக்குநர் கே.சுப்பிரமணியம் அவர்களையே சேரும். அந்தக் காலத்தில் மிகவும் புகழுடன் விளங்கிய மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்பரேஷனில் பிச்சுமணியைச் சேர்த்தார்.
இதில் இடம்பெற்ற கலைஞர்கள்தான் அனைத்திந்திய வானொலி நிலையத்தில் இசை வாத்திய நிகழ்ச்சிகளை அளித்தனர். அதோடு ஜூபிடர் ஸ்டுடியோஸின் ஆஸ்தான வீணைக் கலைஞராகச் சேர்ந்தார். பிரபலமான பலருக்கும் அவர் வீணை வாசிக்கக் கற்றுக் கொடுத்தார். அதில் ஒருவர், மெய்யப்பன் செட்டியாரின் மனைவியான ஏவிஎம் ராஜேஸ்வரி. வீணை வாசிப்பில் பிச்சுமணியின் திறமையை உணர்ந்த மெய்யப்பன் செட்டியார், அவருக்கு ஏவிஎம்மில் நிரந்தரப் பணிக்கு ஏற்பாடு செய்தார். ஏறக்குறைய 16 ஆண்டுகள் ஏவிஎம் நிறுவனத்தில் தனது பங்களிப்பை செலுத்தினார் பிச்சுமணி.
ஏவிஎம்மின் தயாரிப்புகளில் வெளிவந்த பல திரைப்படங்களில் வீணை பிச்சுமணியின் வீணையின் நாதம் ஒலித்திருக்கிறது. வேதாள உலகம், ராம ராஜ்ஜியம், வாழ்க்கை, பெண், பக்த ராவணா போன்ற திரைப்படங்கள் அவற்றில் சில.
`பாக்கியலஷ்மி’ திரைப்படத்தில் இடம்பெற்ற `மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ (சுசீலா), `சம்பூர்ண இராமாயணம்’ படத்தில் இடம்பெற்ற `இன்று போய் நாளை வாராய்’, `வீணை கொடியுடைய வேந்தனே’ பாட்டிலும் வரும் வீணை வாத்திய இசையை வழங்கியவர் பிச்சுமணியே.
வர்ணங்களின் கொடை
நாட்டைக் குறிஞ்சி, கதனகுதூகலம் மற்றும் மலையமாருதம் ஆகிய ராகங்களில் ஸ்வரஜதிக்கள், வசந்த கைசிகி, பிருந்தாவன சாரங்கா மற்றும் அமீர் கல்யாணி ராகங்களில் தில்லானாக்களையும் உருவாக்கி இருக்கிறார். சக வீணைக் கலைஞர்களான வீணை எஸ். பாலசந்தர், சிட்டிபாபு, திருமதி வித்யாஷங்கர் உள்ளிட்ட பலருடன் நெருக்கமான நட்பைக் கொண்டிருந்தார். ஏவிஎம், ஹெச்எம்வி நிறுவனங்களுடன் இணைந்து எண்ணற்ற வீணை வாசிப்புகளை ஆர்பிஎம் ஒலித்தட்டுகளாக பிச்சுமணி அய்யர் அந்நாளில் கொண்டுவந்திருக்கிறார்.
கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற அந்த நாளின் இசை மேதைகள் பலருக்கும் பிச்சுமணி அய்யர் வீணை வாசித்திருக்கிறார். “திரை இசை வாசிப்பதிலும் பாரம்பரியமான வீணை வாசிப்பில் இருக்கும் நுணுக்கங்களை தவறாமல் கடைப்பிடிப்பவர்” என்று பல கலைஞர்களால் புகழப்பட்டவர் வீணை பிச்சுமணி.
மரபும் நவீனமும்
“பிச்சுமணி அய்யரை 1955லிருந்து தெரியும்” என்னும் மிருதங்க மேதை உமையாள்புரம் கே.சிவராமன், “அவருடைய வீணை வாசிப்பின் சுநாதம் அபாரமானது. திரையிசைக்கு வாசித்தாலும் பாரம்பரியமான சட்டகத்துக்குள்தான் அந்த வாசிப்பு இருக்கும்” என்கிறார்.
பாடுவது போல் வீணை வாசிக்கும் பாணியைப் பின்பற்றியவர் பிச்சுமணி அய்யர். மரபை மீறாமல் இருந்த அதே சமயத்தில், வாத்தியத்தின் சத்தத்தை அதிகப்படுத்தும் `பிக்-அப்’களை வாத்தியத்தோடு பொருத்தி பரீட்சார்த்தமாக அந்நாளிலேயே உபயோகப்படுத்தியிருக்கிறார்.
பி.கண்ணன், பி.வசந்தகுமார், ஆர்.விஸ்வேஸ்வரன், சுரேஷ் கிருஷ்ணா (டி.வி.எஸ்.குடும்பத்தைச் சேர்ந்தவர்), வசந்தா கிருஷ்ணமூர்த்தி, ஆர்.எஸ்.ஜெயலட்சுமி, ராம்நாத், கோபிநாத் (ஐயர் பிரதர்ஸ்), ஆர்.ராமன் உள்ளிட்ட பலரும் பிச்சுமணி அய்யரிடம் வீணை வாசிப்பதற்குக் கற்றுக் கொண்டனர்.
விருதுகளும் கவுரவங்களும்
வீணை சண்முக வடிவு விருதை மியூசிக் அகாடமி இவருக்கு இரண்டு முறை அளித்து கவுரவித்திருக்கிறது. சங்கீத நாடக அகாடமி விருது கர்னாடக இசைக்கு இவர் ஆற்றிய சேவைக்காக வழங்கப்பட்டது. தமிழக அரசின் கலைமாமணி விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இவர் இருந்திருக்கிறார்.
நடமாடும் பல்கலைக்கழகமாக தன்னுடைய வாழ்நாள் முழுவதும் எண்ணற்ற மாணவர்களுக்கு இசையின் நுட்பத்தை கற்றுத் தருவதில் பேரானந்தமும் நிம்மதியும் அடைந்த பெருந்தகை பிச்சுமணி அய்யரின் புகழ் காற்றில் அவரின் வீணையின் நாதம் கலந்திருக்கும் வரை ஓயாது நிலைத்திருக்கும்.
தொடர்புக்கு: srikamakshi.sankara@gmail.com