ஆனந்த ஜோதி

81 ரத்தினங்கள் 44: பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே

செய்திப்பிரிவு

உஷாதேவி

மதுராவில் வாழ்ந்தவள் திருவக்ரா. கம்சனுக்கு வாசமிகு சந்தனம் அரைத்து அவனுக்குப் பூசிவிடுவாள். அவள், கூன்விழுந்த உடலைக் கொண்டவள். கம்சனின் உத்தரவுப்படி கிருஷ்ணரும் பலராமரும் மதுராவுக்கு அழைத்துவரப்பட்டபோது, கூனி திருவக்ரா, கிண்ணங்களில் மணமிக்கச் சந்தனத்தை நிரப்பி அரண்மனைக்கு வழக்கம்போல எடுத்துச் சென்றாள்.

அரண்மனையில் கூனியைக் கண்ட கிருஷ்ண பகவான், சுந்தரி என்று அழைத்தார். இதைக் கேட்டதும் மகிழ்ந்து போனாள் திருவக்ரா. ஊரில் அனைவரும் அவளைக் கூனி என்று அழைத்த துயரம் எல்லாம் மறைய, தன் கையால் சந்தனத்தை எடுத்து கண்ணனின் கால், கை, முகம் எங்கும் சந்தனத்தைப் பூசிவிட்டாள்.

அரசனுக்குப் பூசக் கொண்டுவந்த சந்தனத்தை எனக்குப் பூசிவிட்டாயே என்று உடலும் மனமும் குளிர்ந்து சொன்ன கிருஷ்ணன், கூனியின் கால் கட்டை விரலைத் தன் காலால் அழுத்தி மிதித்து அவளது மோவாயைத் தொட்டு நிமிர்த்தினார். கூனி திருவக்ரா, அழகான இளம்பெண்ணாகத் தோற்றம் எடுத்தாள்.

கிருஷ்ணர் அவளைப் பார்த்தவுடன் அழைத்தது போலவே எழில்கோலம் கொண்ட சுந்தரி ஆனாள் கூனி. கிருஷ்ண பகவான் பூமியில் பிறந்து வளர்ந்து நடமாடிய காலத்தில் தான் வாழவில்லையே என்று புலம்பியபடி, என் கையால் சந்தனம் பூசும் நற்பேறு கிடைக்கவில்லையே என்று அரற்றுகிறாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.

(ரகசியங்கள் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com

SCROLL FOR NEXT