ஆனந்த ஜோதி

ரமலான் நிறைவு சிறப்புக் கட்டுரை: ஆசிர்வதிக்கப்பட்ட நோன்பு நாட்கள்

செய்திப்பிரிவு

முகம்மது இப்ராகிம்

ஞானியும் கவிஞருமான ஜலாலுதீன் ரூமி, காலி யாக இருக்கும் வயிற்றில் இனியதொன்று மறைந்திருக்கிறது என்கிறார்.

ஒரு சக்கரத்தின் காலியான பகுதிதான் அதைச் சக்கரமாக்குகிறது என்று தாவோ கூறுகிறது. பொருள் கள் சார்ந்த, புலன்கள் சார்ந்த விழைவுகள் தொடர்பில் குறிப்பிட்ட கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால் தான், புலன்கள் தொடர்பிலான வாழ்க்கையும் சமநிலையுடன் இருக்கும்.

அப்படியான கட்டுப்பாட்டையும் புலனடக்கத்தையும் முறையாக ஒழுங்குபடுத்துவதற்காகவே ரமலான் மாத நோன்பு இஸ்லாம் மார்க்கத்தில் உருவாக்கப்பட்டது.

நோன்பு நாட்களில், மனிதனின் உடல் சார்ந்த இச்சைகள் படிப்படியாக ஒழுங்குபடுத்தப்பட்டுக் கட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன. உடல் சார்ந்த இச்சைகள் இறைவிருப்பத்துக்கு முன்னர் சரணடையும் முறைப்பாடு அது. அதனாலேயே உணவு மட்டுமின்றி உடல் சார்ந்த அனைத்து வகைப் பசிகளிலிருந்துமான உபவாசமாக ரமலான் நோன்புக் காலம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒரு நெறிமுறைக்குட்பட்ட இந்த நோன்புக் காலத்தில், சூழ்நிலை சார்ந்து உடலில் எழும் உடனடி உணர்ச்சிகளுக்குத் தீனிபோட வேண்டிய அவசியமில்லை என்பதை மனித ஆன்மா அறியத் தொடங்குகிறது. பூமியில் இருக்கும் உடல் வழியாக மனிதப் பிரக்ஞை செயல்படுகிறது. ஆனால், அது பூமிக்குச் சொந்தமானதல்ல என்பது இந்த நோன்புக் காலத்தில் உணரப்படுகிறது.

முழுமையான நம்பிக்கையுடன் நோன்பு இருக்கும் மனிதர் ஒருவர், இந்தப் பூமிக்கு வந்திருக்கும் யாத்ரிகனாகத் தன்னை உணர்கிறார். வெறும் பிழைப்பைத் தாண்டிய லட்சியமொன்றுக்காகப் படைக்கப்பட்ட உயிர்தான் நான் என்று அவருக்குப் புரியத் தொடங்குகிறது.

உணவும் நீரும் தாராளமாக மற்ற நாட்களில் கிடைப்பதால் அதன் அருமையே தெரியாமல் நம்மில் பலரும் இருக்கிறோம். நோன்புக் காலத்தில் தான் உணவும் நீரும் சொர்க்கத்திலிருந்து அளிக்கப்பட்ட பரிசு என்பதை வசதியான மக்களும் உணர்வார்கள். எளிமையான உணவும் நீரும் புனிதமாகும் மாதம் இது.

பசித்திருக்கும் வேளையில்தான் மனிதன், உலக வாழ்க்கை சார்ந்த ஆசைகளிலிருந்து விடுபட்டுக் கடவுளின் பக்கத்தில் செல்கிறான். அதனாலேயே இறைத்தூதர் அண்ணல் நபிகள், ஆன்மிகரீதியான பசியே தனது மகத்துவம் என்று கூறினார்.

அதனால்தான் இந்தப் புனிதமான ரமலான் மாதம் ஆசிர்வதிக்கப்பட்ட மாதமாகக் கருதப்படுகிறது. நமது வாழ்க்கை, செயல்கள் ஆகியவற்றின் மேல் இறைவனின் ஆசிர்வாத ஒளி பரவட்டும்.

SCROLL FOR NEXT