சிங்கம் ஒன்று, சிறைபிடிக்கப்பட்டு வதைமுகாமில் அடைக்கப்பட்டது. தொடக்கத்தில் வதைமுகாமிலிருந்து மற்ற சிங்கங்களைப் பார்ப்பதிலேயே புதிய சிங்கத்துக்கு நேரம் கழிந்தது. மற்ற சிங்கங்களில் பலவும் ஆண்டுக்கணக்கில் அங்கு வசித்துவந்தன. சில சிங்கங்கள் வதைமுகாமிலேயே பிறந்திருந்தன. அவை வனத்தையே பார்த்ததில்லை. புதிதாக வந்த சிங்கம், விரைவிலேயே முகாமிலிருந்த மற்ற சிங்கங்களின் சமூக நடவடிக்கைகளுக்கும் பரிச்சயமானது.
அவை தங்களைக் குழுக்களாகப் பிரித்துகொண்டு வசித்துவந்தன. ஒரு குழு, தங்களைச் சமூகவாதிகள் என்று வரையறுத்துக்கொண்டது. இன்னொரு குழு, வணிகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. மற்றொன்று, கலச்சார நடவடிக்கைகளை நிர்வகித்தது. சிங்கங்கள் சுதந்திரமாக இருந்த காலத்தில் பின்பற்றி வந்த பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள், பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றைப் பாதுகாப்பது இந்த பண்பாட்டுக் குழுவின் பணியாக இருந்தது. பிற குழுக்கள் மதங்களைப் பின்பற்றுபவையாக இருந்தன. வேலிகளற்ற வருங்காலக் காட்டைப் பற்றிய உருக்கமான பிரார்த்தனைப் பாடல்களைப் பாடுவதற்காக அவை ஒன்றுகூடின.
சில குழுக்கள் கலை, இலக்கியச் செயல்பாடுகளில் ஈர்க்கப்பட்டிருந்தன. மேலும் சில குழுக்களைப் புரட்சிகரமான கருத்துகள் வழிநடத்தின. அவை அவ்வப்போது ஒன்றுகூடி தங்களைச் சிறைபிடித்துவைத்திருப்பவர்களுக்கு எதிராகச் சதித்திட்டங்களைத் தீட்டின. எப்போதெல்லாம் புரட்சி வெடிக்கிறதோ, அப்போதெல்லாம், குறிப்பிட்ட குழு மற்ற குழுவால் முழுமையாக அழிக்கப்படும். அல்லது, பாதுகாவலர்கள் கொல்லப்படுவார்கள். சில நாட்களில், மீண்டும் புதிய பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.
புதிதாக வந்த சிங்கம், அந்த முகாமில் எப்போதும் ஆழ்ந்த சிந்தனையுடன் அமைதியாக அமர்ந்திருந்த ஒரு சிங்கத்தைக் கவனித்து வந்தது. அது எந்தக் குழுவிலும் சேராமல் பெரும்பாலும் தனித்தே இருந்தது. அதன் நடவடிக்கை விசித்திரமாக இருந்ததால், அது மற்றவர்களின் நன்மதிப்பு, விரோதம் இரண்டையும் சம்பாதித்தது. அதன் இருப்பு மற்றவர்களிடம் பயத்தையும், தங்களைப் பற்றிய சந்தேக உணர்வையும் தூண்டின. அது புதிதாக வந்த சிங்கத்திடம், “எந்தக் குழுவிலும் இணையாதே! பாவப்பட்ட முட்டாள்களான இவை, எப்போதும் அவசியமானவற்றைத் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்வதில் தீவிரமாக ஈடுபடுகின்றன?” என்று சொன்னது. “அவசியமானது என்று நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?” என்று கேட்டது புதிதாக வந்த சிங்கம்.
“ நம்மைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் கம்பிவேலியின் இயல்பைக் கற்பது” என்றது அந்தச் சிங்கம்.
- கனி