ஒருமுறை ஜென் குரு கஸன் தன் மாணவர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார். “உயிர்களைக் கொல்வதற்கு எதிராகப் பேசுபவர்களும், உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் பாதுகாக்க வேண்டுமென்று நினைப்பவர்களும் சரியாகவே சிந்திக்கிறார்கள். விலங்குகள், பூச்சிகளைப் பாதுகாப்பதுகூட நல்ல விஷயம். ஆனால், நேரத்தைக் கொல்பவர்கள், செல்வத்தை அழிப்பவர்கள், அரசியல் பொருளாதாரத்தைக் கொல்பவர்களும் இருக்கிறார்களே? அத்துடன், ஞானமடையாமல் போதிப்பவர் என்ன செய்கிறார்?அவர் பௌத்தத்தைக் கொல்கிறார்.”
எதுவுமே இல்லை!
யமவுகா டேஷ்ஷு என்ற இளம் மாணவர், வேறு வேறு ஜென் குருக்களைச் சந்தித்துக்கொண்டிருந்தார். ஒருமுறை, அவர் டோக்கவுன் என்ற ஜென் குருவைச் சந்திக்கச் சென்றார். அவர், தான் இதுவரைக் கற்றுக்கொண்டதைக் குருவிடம் காண்பிக்க வேண்டுமென்று நினைத்தார். “மனம் இல்லை, புத்தர் இல்லை, சுய உணர்வு கொண்ட உயிரினங்களும் உலகில் இல்லை. நம் முன்னால் தெரிவதின் உண்மையான இயல்பு இன்மையே.
முற்றுணர்தல், மாயை, துறவி, இரண்டும் கெட்டான் தன்மை ஆகிய எவையுமே இல்லை. கொடுப்பதற்கோ பெறுவதற்கோ எதுவும் இல்லை” என்று சொல்லிக் கொண்டி ருந்தார் யமவுகா. இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டு அமைதியாகப் புகைத்தபடி இருந்தார் டோக்கவுன். திடீரென்று, அவர் யமவுகாவின்மீது தன் மூங்கில் புகைக்கும் குழாயைத் தூக்கி வீசினார். அவரின் இந்தச் செயல் யமவுகாவுக்குக் கடும் கோபத்தை வரவழைத்தது. “எதுவுமே இல்லை யென்றால், இந்தக் கோபம் எங்கிருந்து வருகிறது?” என்று கேட்டார் குரு டோக்கவுன்.
ஒரு கை ஓசை
மமியா, என்ற ஜென் ஆசிரியர் தனிப்பட்ட பயிற்சிக்காக ஜென் குரு ஒருவரைத் தேடிச்சென்றார். அந்த குரு அவரிடம், ஒரு கையின் ஓசை எப்படியிருக்குமென்று விளக்கும்படி கோரினார். ஒரு கையின் ஓசை எப்படியிருக்கும் என்பதில் தன் கவனத்தைக் குவிக்கத் தொடங்கினார் மமியா. “போதுமான அளவுக்கு நீ கடினமாக உழைக்கவில்லை. உணவு, செல்வம், வஸ்துகள் மற்றும் நான் சொன்ன அந்த ஓசையில் அதீதப் பற்றுடன் இருக்கிறாய். இந்த நிலையில், நீ இறந்துபோவதுதான் சரி. அதுவே உனது பிரச்சினையைத் தீர்க்கும்” என்று குரு தெரிவித்தார்.
அடுத்த முறை மமியா, குருவைச் சந்தித்தார். ஒரு கையின் ஓசையை விளக்குவது குறித்து மீண்டும் குரு கேட்டார். மமியா, உடனடியாகத் தான் இறந்துபோனதாக உணர்ந்தார். “சரி, நீ இறந்துவிட்டாய். ஆனால், அந்த ஓசை என்னவானது?” என்று கேட்டார் குரு. “அதை நான் இன்னும் தீர்க்கவில்லை” என்று பதிலளித்தார் மமியா. “இறந்தவர்கள் பேசமாட்டார்கள், வெளியே போ” என்று மமியாவை அனுப்பிவிட்டார் குரு.