ஓவியர் வேதா
பெரும்பாலான மகிஷாசுரமர்த்தினி சிற்பங்களில், தேவியின் காலடியில் மகிஷாசுரன் மிதிபட்டுக் கிடப்பான். பத்தாம் நூற்றாண்டில் பராந்தகச் சோழன், பொன் கூரை வேய்ந்த சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிருத்த சபை மண்டபத்தின் கீழ்க்கோடியில் காணப்படும் இந்தச் சிற்பம் மிகவும் வித்தியாசமானது.
மகிஷாசுரன், தேவியிடம் " நீ ஒரு பெண்... உன்னால் என்னை வெல்ல முடியாது" என எகத்தாளமாகக் கூறியபடி துள்ளிக் குதித்து ஓடுவது போல் உள்ளது. அவன் கண்களில் ஏளனமும் வாயில் அசட்டுச் சிரிப்பும் காணப்படுகின்றன. அவன் வாயில் காணப்படும் பற்களைத் தான் பாருங்களேன்.
தேவியோ, "உன்னை விட்டேனா பார்... " என்று கண்களில் கோபாவேசத்துடன் கத்தியையும் கேடயத்தையும் ஓங்கியபடி மற்ற கைகளில் சங்கு-சக்கரம், வில்- அம்பு, மணி- பாசம் முதலிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளார்.
வெகுவேகமாகக் காலை முன்னே வைத்து நடக்கும்போது ஏற்படும் அசைவுகளால் இடுப்பில் உள்ள அணிகலன்களும் ஆடைகளும் அசைவதையும் வெகு துல்லியமாகக் காட்டியுள்ளார் சிற்பி. இவை அனைத்தும் ஒரு அடி உயரமும் ஒரு அடி அகலமும் கொண்ட புடைப்புச் சிற்பத்தில் பதிவாகியுள்ளது. தேவியின் அருகில் சிம்ம வாகனம் இல்லை.