ஆனந்த ஜோதி

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 117: உடம்போடு உயிரின் நட்பை அறியார்

செய்திப்பிரிவு

கரு.ஆறுமுகத்தமிழன்

துறவுபூண ஒருவர் முயன்றால், ‘அருகதை இல்லை’ என்று வேறு சிலர் மறுக்க முடியுமா? மறுத்திருக்கிறார்கள். சைவமடங்கள் பெருகிவளர்ந்த காலகட்டத்தில் இதைக் குறித்து ஒரு சர்ச்சை நடந்திருப்பதாகத் தெரிகிறது. மு.அருணாசலம் குறிப்புத் தருகிறார்:

பதினான்காம் நூற்றாண்டில் சைவசித்தாந்தத் துறவுமடங்கள் உருவாகத் தொடங்கின. பதினாறாம் நூற்றாண்டில் நமச்சிவாயமூர்த்திகள் என்ற பஞ்சாக்கர தேசிகர் திருவாவடுதுறை ஆதீனத்தை நிறுவ, குருஞான சம்பந்தர் தருமபுர ஆதீனத்தை நிறுவ, நிரம்ப அழகிய தேசிகர் துழாவூர் ஆதீனத்தை நிறுவ, சைவசித்தாந்தம் பரப்ப எழுந்த திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட மரபு காலூன்றிக்கொண்டது.

துறவைப் பொதுமைப்படுத்த முடியுமா?

அப்போது எழுந்தது வர்ணச் சிக்கல். ஆளாளுக்குத் துறவு பூண அதிகாரம் இல்லை என்று சிலர் கிளம்பினார்கள். துறவி ஆனோர்க்கு வர்ணம் இல்லை என்றாலும் துறவி ஆவதற்கு வர்ணம் உண்டு என்பது அவர்கள் கருத்துப் போலிருக்கிறது. துறவை அனைவருக்குமாகப் பொதுமைப்படுத்த முடியாது என்று வருண நம்பிகள் மறுக்க, சைவத் துறவிகள் அதை எதிர்முட்ட, பஞ்சாயத்து அரசனிடம் போக, அரசன் சிவாக்கிர யோகியை அழைத்துப் பஞ்சாயத்தைத் தீர்க்கச் சொல்கிறான். துறவு உரிமை சைவர்க்கும் உண்டு என்று தீர்த்துவைத்த சிவாக்கிர யோகி, அதை நிறுவ ஆகமச் சான்றுகளோடு, ‘கிரியா தீபிகை’, ‘சைவ சந்நியாச பத்ததி’ (சைவத் துறவுக்கான நடைமுறைகள்) என்ற வடமொழி நூல்களை எழுதினார். (தமிழ் இலக்கிய வரலாறு-16-ம் நூற்றாண்டு, பாகம் 2, பக்.2005).

மடங்கள் நிறுவிக் கருத்துப் பரப்புவது ஒன்றும் புதிதில்லை. புத்தர் தொடங்கி சமணர், சங்கரர், சைவர் என்று அனைவரும் பின்பற்றிய வழிமுறைதான். தமிழ்நாட்டில் பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்பே மடங்கள் இருந்திருக்கின்றன. திருமந்திரமும் மடம் பேசுகிறது:

வந்த மடம்ஏழும் மன்னும்சன் மார்க்கத்தின்

முந்தி உதிக்கின்ற மூலன் மடவரை

தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்

சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.

(திருமந்திரம் 101)

முதல் மடம் திருமூலர் மடம்; அதிலிருந்து கிளைத்த மாணவ மடங்கள் ஏழு. இம்மடங்கள் அனைத்துக்கும் முதன்மை நூல் ஒன்பது தந்திரங்களும் மூவாயிரம் பாடல்களுமாகச் செய்யப்பட்டிருக்கும், ‘சுந்தர ஆகமம்’ ஆன திருமந்திரம். (இப்பாடல் இடைச்செருகல் என்று சுப.அண்ணாமலையும், திருமூலரின் மாணவர் செய்தது என்று அருணைவடிவேல் முதலியாரும் கூறுவர்).

இப்பாட்டை இடைச்செருகல் என்றே தள்ளி, மடத்தைக் குறிக்கும் மற்றொரு திருமந்திரத்தைக் கவனிக்கலாம்:

உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி

உடம்புஇடை நின்ற உயிரை அறியார்

உடம்பொடு உயிர்இடை நட்புஅறி யாதார்

மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே.

(திருமந்திரம் 2148)

உடம்புகள் மூன்று; மிகுநுண்ணுடல், நுண்ணுடல் (subtle bodies), பருவுடல் (gross body)—உள்ளொட்டி (பனியன்), சட்டை, மேல்குப்பாயம் (கோட்) போல. இவற்றின் உள்நிற்கிறது உயிர். ஆனால் இவற்றுக்குள் ஏன் வந்தோம் என்று புரியாமல் மடத்தனமான வேலைகள் செய்துகொண்டிருக்கிறது—எதைப் போல என்றால், துறவிகள் இருந்து சித்தாந்தம் பயிற்றுவிக்கும் மடத்துக்குள் புகுந்த நாய், சித்தாந்தம் தேடாமல் சோற்றுக்காக மடப்பள்ளியைத் தேடுவதுபோல.

மடம் புதிதல்ல

ஆகவே, மடமும் புதிதன்று; துறவும் புதிதன்று; இடைக்கால அரசு மாற்றத்தால் ஏற்பட்ட வைதிக எதிர்ப்பே புதிது. சமூக இடைவெளி விரும்பியிருக்கிறார்கள் வருண நம்பிகள். போகட்டும். துறவைக் குறித்துத் திருமந்திரக் கருத்தென்ன? துறவுக்கு ஏது வர்ணம் என்பதுதான்.

அறவன், பிறப்புஇலி, யாரும்இலா தான்,

உறைவது காட்டகம், உண்பது பிச்சை,

துறவனும் கண்டீர், துறந்தவர் தம்மைப்

பிறவி அறுத்திடும் பித்தன்கண் டீரே.

(திருமந்திரம்)

கடவுளாக முன்வைக்கப்படுவது ஒரு துறவி. மடம்சார் துறவி அன்று; அறம்சார் துறவி. அவன் வருணம் என்ன? பிறப்பு வரலாறு தெரியாத அனாதி அவன். வருணமெல்லாம் யாருக்குத் தெரியும்? உறவு சொல்ல ஒருவர் இன்றி வாழ்பவன்; ஆகவே வர்ணம் கடந்தவன்; காட்டிலே திரிவான்; பிச்சையெடுத்து உண்பான்; துறவி. தன்னைப் போலவே துறந்தாரைக் கண்டால் ‘என் குலம்’ என்று அவரைத் தன்னுடன் ஒட்டிடும் பித்தன். கண்டுகொள்க. காற்றுக்கென்ன வேலி? துறவுக்கென்ன மூடி?

(தொடர்ந்து திறப்போம்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

SCROLL FOR NEXT