துலாம் ராசி வாசகர்களே!
பிறர் தன்னைக் குற்றம் குறை கூறிக் குதர்க்கமாகப் பேசினாலும் மனம் தளராதவர்கள் நீங்கள். உங்கள் ராசிக்கு மூன்றாம் ராசியில் இந்த சார்வரி ஆண்டு பிறப்பதால் பாதியிலேயே நின்றுபோன காரியங்கள் உடனே நிறைவேறும். உங்கள் மகளுக்கு எதிர்பார்த்தபடியே நல்ல வரன் அமையும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக்கொண்டிருந்த உங்கள் மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சொத்துப் பிரச்சினைகள் வருட மத்தியில் தீரும். பிரபலங்களின் நட்பு கிடைப்பதுடன் அவர்களால் சில காரியங்கள் முடியும்.
14.04.2020 முதல் 7.7.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்வதால் தாயாருக்கு முதுகு வலி, மூட்டு வலி, தாய்வழி உறவினர்களாலும் அலைச்சல், செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். 08.07.2020 முதல் 12.11.2020 வரை குருபகவான் 3-ம் வீட்டில் மறைந்திருப்பதால் சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். சில நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டுச் சிலரைக் கடிந்து கொள்வீர்கள். 13.11.2020 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீடுகட்டும் பணி தாமதமாகும். பழைய பிரச்சினைகள், சிக்கல்கள் திரும்புகின்றனவோ என்றெல்லாம் பயப்படுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். தாய்வழிச் சொத்தைப் போராடிப் பெறுவீர்கள்.
01.09.2020 முதல் கேது ராசிக்கு 2-ம் வீட்டுக்கு வருவதால் யாரையும் விமர்சித்துப் பேச வேண்டாம். பார்வைக் கோளாறு, பல்வலி வந்து நீங்கும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் வந்து போகும். எட்டாம் வீட்டுக்கு ராகு வருவதால் திடீர்ப் பயணங்கள் அதிகமாகும். சேமிப்புகள் கரையும். தந்தையாரின் உடல்நிலையில் மேம்பாடு உண்டாகும். யாரும் உங்களைப் புரிந்துகொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள்.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் 25.12.2020 வரை சனி 3-ல் நிற்பதால் பெரிய திட்டங்கள் நிறைவேறும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். தூரத்து சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். 26.12.2020 முதல் வருடம் முடியும்வரை சனி 4-ல் அமர்வதால் தாயாருக்கு நெஞ்சு வலி வந்து போகும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அவருடன் விவாதங்கள் வந்துபோகும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள், அலைச்சல்கள் ஏற்படும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்கவேண்டி வரும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை உடனுக்குடன் செலுத்தி விடுங்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.
18.03.2021 முதல் 11.04.2021 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் மனைவிக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அவருடன் கருத்து மோதல்களும் வரும். சிறு சிறு வாகன விபத்துகள் நிகழும். மின் சாதனங்கள், மின்னணுச் சாதனங்களையெல்லாம் கவனமாகக் கையாளுங்கள்.
18.2.2021 முதல் 13.4.2021 வரை செவ்வாய் 8-ல் மறைவதால் சகோதரர்களால் நிம்மதியிழப்பீர்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். உங்கள் சக்திக்கு மீறிய எந்த உறுதிமொழியும், யாருக்கும் தர வேண்டாம். கூடுதல் செலவுகளால் திணறுவீர்கள். பணம் எடுத்துக்கொண்டு செல்லும் போதும், கொண்டு வரும் போதும் உங்கள் கவனத்தைச் சிதற விடாதீர்கள். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை நவீன உத்தியால் விற்றுத் தீர்ப்பீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்கள் கடை தேடி வருமளவுக்குக் கடையை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள்.
மாசி, பங்குனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளைப் போட்டு போட்டியாளர்களைத் திக்குமுக்காட வைப்பீர்கள். பங்குதாரர்களின் தொந்தரவுகள் குறையும். உத்தியோகத்தில் வைகாசி, பங்குனி மாதங்களில் புதிய பதவிகள் வரும். உயரதிகாரி, உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். சக பணியாளர்களின் சொந்த விஷயங்களில் தலையிட்டுப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பீர்கள். கணினித் துறையினர்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
இந்தத் தமிழ்ப் புத்தாண்டு சின்னச் சின்ன முடக்கங்களை, சங்கடங்களைத் தந்தாலும், எதிர்பாராத திடீர் முன்னேற்றங்களும், உயர்ந்த அந்தஸ்தும் தேடித்தருவதாக அமையும்.
பரிகாரம் : மதுரை மாவட்டத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு மீனாட்சி அம்மனைச் சென்று வணங்குங்கள். சாலை விபத்தில் சிக்கியவருக்கு உதவுங்கள். கடன் பிரச்சினை தீரும்.