தனுசு ராசி வாசகர்களே!
நல்லதோ, அல்லதோ முடிவெடுத்து விட்டால் முன் வைத்த காலைப் பின் வைக்காமல் முடித்துக் காட்டுவதில் வல்லவர்கள் நீங்கள். உங்கள் ராசியிலேயே இந்த சார்வரி ஆண்டு பிறப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். அடிக்கடி கோபப்படுவீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். என்றாலும், எதிர்பார்த்த பணம் வரும். தடைபட்ட காரியங்களை முடிப்பீர்கள். திருமணம், புதுமனைப் புகுவிழா, சீமந்தம் என வீடு களைகட்டும். வருங்கால நலனைக் கருத்தில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைபாக்கியம் இல்லாத தம்பதியினருக்குக் குழந்தைபாக்கியம் உண்டாகும்.
14.04.2020 முதல் 7.7.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்வதால் திடீர் யோகம், பணவரவு, மகிழ்ச்சியெல்லாம் உண்டாகும். குடும்பத்தில் கூச்சல், குழப்பங்கள் விலகும். உடல் ஆரோக்கியம் சீராகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். 8.7.2020 முதல் 12.11.2020 வரை உங்கள் ராசிக்குள்ளே குரு அமர்ந்து ஜென்ம குருவாக இருப்பதால் பழைய பிரச்சினைகள் தலைதூக்கும். மஞ்சள் காமாலை, காய்ச்சல், காது வலி வரக்கூடும். மற்றவர்களை நம்பிப் பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். 13.11.2020 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி 2-ம் வீட்டிலேயே அமர்வதால் குடும்பத்தில் நிலவிவந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். மருந்து மாத்திரைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். படித்து, பட்டம் வாங்கியும் கல்வித் தகுதிக்கேற்ப நல்ல வேலையில்லாமல் திண்டாடினீர்களே! புது வேலை அமையும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் நல்ல விதத்தில் ஏற்பாடாகும்.
01.09.2020 முதல் கேது உங்கள் ராசியை விட்டு விலகுவதால் முன்கோபம் நீங்கும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். ஆனால், கேது 12-ல் நுழைவதால் ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். சில நாட்களில் கனவுத் தொல்லையால் தூக்கம் இல்லாமல் போகும். 01.09.2020 முதல் 6-ம் வீட்டுக்கு ராகு வருவதால் வி.ஐ.பி.க்கள், வேற்றுமதத்தைச் சார்ந்தவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வீர்கள். அரசாங்க விஷயங்கள் உடனே முடியும். வழக்குகள் சாதகமாகும்.
சனிபகவான் 14.04.2020 முதல் 25.12.2020 வரை ஜென்மச்சனியாக இருப்பதால் சலிப்பு, சோர்வு, ஏமாற்றம் வந்து நீங்கும். 26.12.2020 முதல் வருடம் முடியும் வரை பாதச்சனியாகத் தொடர்வதால் திடீர்ப் பயணங்களும், திடீர்ச் செலவுகளும் அதிகரிக்கும். காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது. வாகனத்தில் அதிவேகம் வேண்டாம். கண் எரிச்சல், பல் வலி வந்துபோகும். பொங்குசனி நடைபெறுபவர்களுக்கு வீடு, மனை வாங்கும் யோகமும், வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும்.
14.4.2020 முதல் 3.5.2020 வரை மற்றும் 4.6.2020 முதல் 30.7.2020 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். கடன் பிரச்சினை தலைதூக்கும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் செலவினங்கள் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் ஆனி, புரட்டாசி மாதங்களில் அதிரடி லாபத்தைக் காண்பீர்கள். தை, பங்குனி மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்கள் உங்களைக் கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும். உங்களில் நெடுநாள் கனவான பதவி உயர்வும், சம்பள உயர்வும் வருட மத்தியில் உண்டு. எப்போதும் உங்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
இந்தத் தமிழ்ப் புத்தாண்டு உடல்நலக்குறைவு களைத் தந்தாலும், பணப்புழக்கம், செல்வாக்குடன் பதவியையும் தருவதாக அமையும்.
பரிகாரம் : திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் வீர ஆஞ்சநேயரைச் சென்று வணங்குங்கள். துப்புரவுப் பணியாளருக்கு உதவுங்கள். ஏற்றம் உண்டாகும்.