ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
மிதுன ராசி வாசகர்களே!
எஎதிலும் புதுமையைப் புகுத்துபவர்களில் வல்லவர்கள் நீங்கள். உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் இந்த சார்வரி ஆண்டு பிறப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். தள்ளிப்போன திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
14.04.2020 முதல் 7.7.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 8-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்ந்திருப்பதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பணப்பற்றாக்குறை, வீண் அலைச்சல், சிறு விபத்து வந்து செல்லும். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். 8.7.2020 முதல் 12.11.2020 வரை குருபகவான் 7-ம் வீட்டிலேயே தொடர்வதால் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளாலும், நண்பர்கள், உறவினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். அவ்வப்போது வரும் சிறு சிறு வாக்குவாதங்களைப் பெரிதுபடுத்த வேண்டாம்.
குழந்தை பாக்கியம் உண்டு. பிள்ளைகளின் பெருமைகளைச் சொல்லி சொந்தபந்தங்கள் மத்தியில் திருப்தியடைவீர்கள். மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்விகச் சொத்தை உங்கள் ரசனைக்கேற்பப் புதுப்பிப்பீர்கள். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஆனால், 13.11.2020 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 8-ல் சென்று மறைவதால் வீண் அலைச்சல், வதந்திகள், இனம்புரியாத கவலை, ஒருவித பய உணர்வு வந்து செல்லும். பிள்ளைகளிடம் எதிர்மறையாகப் பேச வேண்டாம். அவர்களிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள்.
1.09.2020 முதல் ராகு உங்கள் ராசியை விட்டு விலகுவதால் தலைக்குமேல் தொங்கிக்கொண்டிருந்த கத்தியாக நெருக்கடிகள் இருந்ததே, அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். பெரிய நோய்கள் இருப்பதைப் போல நினைத்தீர்களே, அந்த பயம் விலகும். அழகு, ஆரோக்கியம் மேம்படும். கேது 6-ல் நுழைவதால் வழக்கு வெற்றியடையும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வீண் அலைச்சல் குறையும். வெளிவட்டாரத்தில் உங்களை எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். பெரிய பதவிகள் தேடி வரும். சொந்த ஊர் திருவிழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிமாநிலங்களில் உள்ள புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
14.04.2020 முதல் 25.12.2020 வரை 7-ல் சனி தொடர்வதால் முன்கோபம், படபடப்பு, வீண் கவலை வந்துபோகும். மனைவியின் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மனைவிவழி உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். 26.12.2020 முதல் அஷ்டமத்துச் சனியாக வருவதால் எதிலும் பயம், போராட்டம், மறைமுக விமர்சனம், தோல்வி மனப்பான்மை, வீண்பழி வந்து போகும். பணப்பற்றாக்குறை, கணவன் மனைவிக்குள் பிரிவு வந்து நீங்கும். வாகனத்தைக் கவனமாக இயக்குங்கள். விபத்துகள் நிகழக்கூடும். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழும். யாருக்காகவும் சாட்சி, உத்திரவாதக் கையெழுத்திட வேண்டாம். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். சிலர் உங்களைத் தவறான போக்குக்குத் தூண்டுவார்கள்.
12.12.2020 முதல் 05.01.2021 வரை உங்கள் ராசிக்குச் சுக்கிரன் 6-ல் மறைவதால் கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வீட்டிலும் கழிவு நீர்க் குழாய் அடைப்பு, குடிநீர்க் குழாய் அடைப்பு, மின்னணு, மின்சாரப் சாதனப் பழுது வந்து நீங்கும்.
14.04.2020 முதல் 03.05.2020 வரை செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்வதால் இக்காலக்கட்டத்தில் நெருப்பு, மின்சாரச் சாதனங்களைக் கவனமாகக் கையாளுங்கள். சொத்து வாங்கும் போது தாய்ப்பத்திரத்தைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். பழைய வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கப் புதிய திட்டம் தீட்டுவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துப் போக வேண்டியது இருக்கும். முன்பின் அறியாதவர்கள், புது நிறுவனங்களிடம் கவனம் தேவை. புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை கூடும்.
மூத்த அதிகாரிகளின் மனத்தைப் புரிந்து நடந்துகொள்ளுங்கள். உங்கள் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக நிதானிப்பது நல்லது. புது வேலை வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் சாதித்துக் காட்டுவீர்கள். பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம். பழைய சம்பளப் பாக்கியும் கைக்கு வரும். இந்தப் புத்தாண்டு முற்பகுதியில் ஓரளவு முன்னேற்றத்தையும், மையப்பகுதியில் பணவரவையும், இறுதிப் பகுதியில் அலைச்சல்களைத் தந்தாலும் வெற்றியையும் தரும்.
பரிகாரம் : கடலூர் மாவட்டம், எழுமேடு எனும் ஊரில் அருள்பாலிக்கும் பச்சைவாழியம்மனைச் சென்று வணங்குங்கள். ஆதரவற்ற மாணவியின் கல்விக் கட்டணத்தைச் செலுத்துங்கள். செல்வம் பெருகும்.