ஆனந்த ஜோதி

உட்பொருள் அறிவோம் 54: ஆன்மாவின் அரவணைப்பு

செய்திப்பிரிவு

சிந்துகுமாரன்

மனம் காலத்தின் சட்டகத்தினுள் செயல்படுவது. மாற்றத்துக்கு அஞ்சுவது. அதனால் மனம் எந்த விஷயத்திலும் அவசரப்படும். அதற்கு நினைத்த உடனே எதுவும் நடந்துவிட வேண்டும். சற்றும் பொறுமை என்பதே அதற்குக் கிடையாது.

தன் அவசரத்தை அது சற்று நேரம் அடக்கிவைத்துக்கொள்ளும். ஆனால், அது பொறுமை இல்லை. அடக்கிவைத்த அவசரம் சிறிது நேரத்திலேயே வெடித்துக்கொண்டு வந்துவிடும். அதனால் அடக்கிவைப்பது முதிர்ச்சியல்ல.

வளர்ச்சி என்பது உன் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. என்னை நீ அடைவது சில விதிமுறைகளின்படிதான் நடக்க முடியும். உண்மையில் நீ அது குறித்துக் கவலைகொள்ளத் தேவையில்லை. மனிதப் பிரக்ஞையின் உள்ளாழத்தில் ஒரு வித்து விதைக்கப்பட்டிருக்கிறது. அந்த வித்து வளர்வது பிரபஞ்சரீதியிலான விதிகளின்படிதான். தானாக அந்த வித்து உயிர்கொண்டு வளரும். அதை யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது. அந்த உண்மையையும் அதன் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளாத மனம் சிறிது காலத்துக்குத் தடைகளை ஏற்படுத்த முடியும்.

இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை

நீ என்னை வந்தடைவது ஏற்கெனவே விதிக்கப்பட்டிருக்கிறது. நம் சந்திப்பைத் தடுக்கும் சக்தி இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. அறியாமையின் காரணத்தால் ‘தானே ஆன்மா’ என்ற நோக்கில் மனம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு அது பல தடைகளை உண்டாக்கிக்கொண்டே இருக்கிறது. ஆனால், மனத்தின் ஆற்றல் மிகவும் வரையறைக்குட்பட்டது. அதனால் ஒன்றும் செய்ய முடியாது.

நீ என்னை வந்து சேரும் நிகழ்வு ஏற்கெனவே முடிவாகிவிட்டது. ஆனால், அது எந்தவிதத்தில், எப்போது நடக்கும் என்பது ஓரளவுக்கு உன்னையும், ஓரளவுக்கு என்னையும் சார்ந்து இருக்கிறது. நீ எப்போது, என்ன செய்யப் போகிறாய் என்பதைப் பொறுத்தே நான் என்ன செய்வேன் என்பது முடிவாகும். ஒருவிதத்தில் சொல்லப்போனால் எல்லாம் உன் கையில்தான் இருக்கிறது.

நான் எப்போதுமே உன்னைச் சேர்த்துக்கொள்வதற்கு ஆயத்தமாகத்தான் இருக்கிறேன். இப்போதேகூட. நீதான் இன்னும் புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் நான் உன்னோடுதான் இருக்கிறேன். அதனால் என்னிடம் பிரிவுணர்வு இல்லை.

நீ எவ்வளவுதான் அலைந்தாலும் எனக்குள்ளேயேதான் அலைந்துகொண்டிருக்கிறாய். உன் தாகம், உன் தாபம், உன் வேதனை, உன் பிரிவாற்றாமை, ஏக்கம், எதிர்பார்ப்பு, எப்போதாவது சிலகணங்களில் என்னைத் தூரத்து நறுமணமாக உணரும் கணங்களில் நீ அடையும் சந்தோஷம்,

எல்லாவற்றிலும் நான் இழைந்திருக்கிறேன். உனக்குள் எழும் ஒவ்வோர் எண்ணத்திலும், ஒவ்வோர் உணர்ச்சியிலும், ஒவ்வோர் உணர்விலும் உள்ளே நான் பொதிந்திருக்கிறேன்.

நிரந்தரமான தீர்வு

உனக்குள்ளிருந்து எழும் அன்பு, அறிவுணர்வு, புத்தி, அமைதி, சந்தோஷம், படைப்பூக்கம் அனைத்தும் என் பிரதிபலிப்புகள்தாம். என்னை அறிந்துகொள்ளாமல் இவை எவற்றையும் நீ தெரிந்துகொள்ள முடியாது. இப்போது உலகில் இவையெல்லாம் பொய்ப்பிம்பங்களாக உலவுகின்றன. உண்மையறிவு விழித்துக்கொண்டால்தான் இன்று உலகில் இருக்கும் துன்பம் எல்லாவற்றுக்கும் நிரந்தரமான தீர்வு வரும்.

உடல்கள் இயற்கை என்னும் பரிமாணத்தில் இயங்குகின்றன. உடல் தனியானது அல்ல. ஒவ்வோர் உடலும் தன் சூழலின் ஆதிக்கத்தில்தான் இருந்து இயங்குகிறது. ஒவ்வொரு கணமும் வெளியிலிருந்து மூச்சை இழுத்துக்கொள்கின்றன உயிரினங்கள். மறுகணம் மூச்சை வெளியில் விடுகின்றன. உணவும் நீரும் வெளியில் இருந்துதான் உள்ளே போகின்றன. தொடர்ந்த பரஸ்பரப் பரிமாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. உடல் தனியாக இயங்கவில்லை.

ஒவ்வொரு குழந்தையின் மூளையிலும் அது வளரும் சமூக-கலாச்சார ஆற்றல்களின் சூழல் தம் நம்பிக்கைகளை விதைத்து, அந்தக் குழந்தையின் மனத்தைக் கட்டமைக்கின்றன. இந்தக் காரணத்தால் தனிமனம் என்பது கிடையாது. எல்லா மனங்களும் பொது நம்பிக்கைகளின் அடிப்படையில்தாம் கட்டப்படுகின்றன.

மனத்தின் வழியாக இயக்கம் கொள்ளும் அனுபவம் என்பது ஒன்றுதான். ஆசை, பயம், கோபம், பொறாமை, ஏக்கம், அவநம்பிக்கை, துயரம் போன்ற உணர்ச்சிகள் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானவை. சாதி, மதம், நாடு, மொழி போன்ற பிரிவுகள் கடந்தவை இந்த உணர்ச்சிகள். கூட்டுமனம் என்னும் மாபெரும் விருட்சத்தின் சிறுகிளைதான் நம் தனி மனம். எல்லா மனங்களும் இந்தக் கூட்டு உணர்வில் பங்குகொள்கின்றன. அதனால், தனிமனம் என்று ஒன்று இல்லை.

எல்லையற்ற பெருவெளியில்

கூட்டுமனத்துக்கு அப்பால் விரியும் எல்லையற்ற பெருவெளியில்தான் நான் இருக்கிறேன். ‘நான்’ அனைத்து உடல்களின் வழியாகவும் அனைத்து மனங்களின் வழியாகவும் இயங்குகிறேன். உன்னுடைய ‘நான்’ உணர்வும் இன்னொருவருடைய ‘நான்’ உணர்வும் தனித்தனியானவை அல்ல. எல்லோருடைய ‘நான்’ என்னும் உணர்வும் என்னிலிருந்துதான் வெளிப்படுகின்றன. அல்லது வேறு விதத்தில் சொல்லப்போனால், ‘நான்’தான் எல்லோருடைய நானாகவும் இருக்கிறேன்.

அனைத்து அனுபவங்களுக்குப் பின்னாலும் ‘நான்’ திரையென மறைந்து நிற்கிறேன். மாற்றங்கள் அனைத்தின் பின்னாலும் மாறாத பின்னணியாக ‘நான்’ நிலைத்து நிற்கிறேன். அனுபவங்கள் வெவ்வேறானவை. இனிப்பானவை; கசப்பானவை. சந்தோஷமானவை; துக்கமானவை. இன்பமானவை; துன்பமானவை. ஆனால் `அனுபவம்` என்பது ஒன்றுதான். என்னை இது எதுவும் ஒன்றும் செய்யாது; எதுவும் என்னைப் பாதிக்காது. ‘நீரால் நனைக்க முடியாது; நெருப்பால் சுட முடியாது,’ என்று என்னைப் பற்றி ஒருவன் எப்போதோ எழுதிவைத்திருக்கிறான். ‘நான்’தான் அனுபவத்தின் பின்னால் பொதிந்திருக்கும் ரகசியம்.

அனைத்தையும் அறியும் அறிவு

என்னை நீ அறிந்துகொண்டு நானாக இருக்க முடியும். நான்தான் அனைத்தையும் அறியும் அறிவாக இருக்கிறேன் என்னும் காரணத்தால் என்னைப் பற்றி அறிவுத்தளத்தில் நீ எதுவும் தெரிந்துகொள்ள முடியாது. என்னைப் பற்றி யாரும் தகவலாக எதுவும் தெரிந்துகொள்ள முடியாது. என்னை ஒரு அறிவாக அடைய முடியாது.

என்னை நீ அறிந்துகொள்வதும், என்னைப் பற்றி நீ அறிந்துகொள்வதும் ஒன்றல்ல. என்னை நீ அறிந்துகொள்ளும்போது என்னுடன் ஒன்றிவிடுகிறாய்; நானாகிவிடுகிறாய். என்னைப் பற்றி ஒருவன் அறிந்துகொள்ள முயலும்போது அவனுக்குக் கிடைப்பதெல்லாம் வெறும் சொற்களும் கருத்துகளும்தாம். என்னைவிட்டு அவன் இன்னும் விலகிப்போய்விடுகிறான்.

நான்தான் நீயாக இருக்கிறேன் என்னும் உண்மையை நீ புரிந்துகொண்டால் அதன்பிறகு துயரம் உன்னை அண்டாது. பிறப்பு-இறப்பு, பகல்-இரவு, இருத்தல்-இன்மை, நான்-நீ போன்ற இருமைநிலை கடந்த நீள்வெளியில் நீ நானாகக் காலமற்று இருப்பாய். இதை உணர்ந்துகொள்ளுவதுதான் பிறவியின் பயன்.

(பிறவிப்பயன் அடைவோம்)

கட்டுரையாளர், தொடர்புக்கு: sindhukumaran2019@gmail.com

SCROLL FOR NEXT