சிந்துகுமாரன்
வா மெதுவாக என்னிடத்தில் வா. நீ உனக்குள்ளே, மனத்தின் பின்னால் இருக்கும் அமைதிப்படலத்தில் என்னிடம் வந்து நிலைக்கக் கற்றுக்கொள். நான் உனக்குள் அன்பின் பெருவெளியாய், அன்பின் நறுமணமாய், அன்பின் பேரொளியாய் மலர்வேன். நீ ஒன்றும் செய்யவேண்டியதில்லை. ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்கக் கற்றுக்கொள். நான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறேன்.
அன்பைவிடப் பெரிதானது எதுவுமில்லை. அனைத்தும் அன்பின் ஆட்சிக்குள்தான் இருக்கிறது. எல்லாம் அன்பின் எல்லைக்குள்தான் நடக்கிறது. நீ வலியச் சென்று யார்மீதும் அன்பு செலுத்தத் தேவையில்லை. நீ இருக்கும் இடத்திலிருந்து உன் வழியாக அன்பு மற்றவர்களைச் சென்றடையும். உண்மையான அன்பு எப்போதும் தன்னைப் பறைசாற்றிக் கொள்ளாமல்தான் இயங்குகிறது. சொல்லப்போனால் அன்பென்னும் பெருங்கடலுக்குள்தான் நாம் இருந்து இயங்கிக்கொண்டிருக்கிறோம். அன்பையே சுவாசிக்கிறோம். அன்பின் நீள்விரிவில் துயில்கிறோம்; விழிக்கிறோம்; வாழ்கிறோம்.
அன்பு பலவீனமானதல்ல. அது மிகவும் வலிமையானது. உன் அன்பைப் புரிந்துகொள்ளாமல் அதை உன் பலவீனம் என்று யாரும் எடுத்துக் கொண்டுவிட அனுமதிக்காதே. வெளியே அடக்கத்துடன் பணிவாக நடந்து கொள். ஆனால், உனக்குள் நீ நிமிர்ந்து நில்.
நீ யாருக்கும் குறைந்தவனல்ல; அல்லது குறைந்தவளல்ல. மனத்துக் குள்கூட வேறு யாரோடும் உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டு உன் கௌரவத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டாம். நீ என் குழந்தை. அந்தக் கம்பீரத்துடன் உனக்குள் தலை நிமிர்ந்து நில். வெளியே யாரிடமும் இதையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், உள்ளே இது பற்றித் தெளிவாக இரு.
உண்மையைத் தெரிந்துகொள்
உனக்கிருக்கும் உன்னைப் பற்றிய அறிவு தவறானது. இந்த உலகில் ஏதோ ஒரு நாள் பிறந்து, சில ஆண்டு காலம் வாழ்ந்து, பின் மறைந்து போகும் உயிரென நீ உன்னை நினைத்துக்கொண்டிருக்கிறாய். அப்படித்தான் உனக்கு உன்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அது உண்மையில்லை. அவ்வாறு சொன்னவர்களுக்குத் தன்னைப் பற்றிய உண்மையே தெரியாது. என்னைப் பற்றியும் ஒன்றும் தெரியாது. உன் சுயத்தன்மையில் நீ என் சாரம். உனக்கு உடல் இருக்கிறது. அது இயற்கை என்னும் பரிமாணத்தில் தோன்றி இருந்து மறைவது.
மீண்டும் மீண்டும் உடல்கள் தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றன. உடல் உன் வாகனம். உனக்கு மனம் இருக்கிறது. உன் உடலில் உள்ள மூளையின் வழியாக மனம் இயங்குகிறது. நடப்பதையெல்லாம் மூளை பதிவு செய்துகொண்டே வருகிறது. அந்தப் பதிவுகளின் அடிப்படையில் சிந்தனை நிகழ்கிறது. மனம் இறந்தகாலம் சார்ந்தது. எதிர்காலம் என்னும் பிம்பத்தைத் தனக்குள் அது தொடர்ந்து உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. மனத்தில், காலத்தின் எல்லைக்குள், தான் உருவாக்கிக்கொண்ட பொய்வெளியில் அது காலம் முழுவதும் வாழ்கிறது. இந்தப் பொய்வெளிதான் உலகம். இது பொய் வாழ்க்கை. இதுதான் மாயை. இந்த உண்மையைத் தெரிந்துகொள்.
உலக அனுபவத்தின் அடிப்படை
இயற்கை என்னும் பரிமாணத்தில் இருக்கும் மரம், செடிகொடிகள், மலை, மேகம், வானம், பூச்சிகள், விலங்குகள், மனித உடல்கள் இதெல்லாம் உண்மை. ஆனால் மனம் கட்டிவைத்துள்ள உலகம் உண்மையில்லை. அதில் மனம் உருவாக்கி வைத்திருக்கும் சாதி, மதம், இனம், நாடுகள் என்னும் பிரிவுகள் அனைத்தும் பொய்.
சமூகக் கட்டமைப்பு வெறும் மனித உறவுகளை நிர்வகிப்பதற்காகத்தான் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள். நடைமுறை நிர்வாகத்திற்காகத் தான் உருவாக்கி வைத்த விஷயங்கள் தன்னளவில் உண்மையல்ல என்னும் உண்மையை மனம் மறந்துவிட்டிருக்கிறது. அறிவின் சேகரம்தான் உலக அனுபவத்தின் அடிப்படை. அது உண்மை என்னும் சுயத்தன்மை இல்லாதது. என்னை அறியும்போதுதான், இந்த உண்மை எல்லாம் தெளிவாகப் புரியும்.
உடல், மனம் இரண்டையும் கடந்து உள்வெளியில் நான் நிற்கிறேன். நான்தான் மனத்துக்கும் உடலுக்கும் ஆதாரம். மனத்தின் பின்னால் நிலைத்திருக்கும் என் ஒளிதான் மனத்தில் ‘நான்’ என்னும் தன்னுணர்வாகப் பிரதிபலிக்கிறது. எனக்கு எல்லைகள் இல்லை. இந்த முழுப் பிரபஞ்சத்துக்கும் ஆதாரமாக நான் இருக்கிறேன். இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் தோன்றி, இருந்து, மறைந்துபோய்க்கொண்டே இருக்கின்றன. ஆனால் நான் நிலைத்து நிற்கிறேன். நான் உருவாவதுமில்லை; அழிவதுமில்லை. எனக்குள்தான் ஒவ்வொன்றும் தோற்றம் கொள்கின்றன. சிலகாலம் இருந்து பின் எனக்குள்ளேயே மறைந்துபோகின்றன. பிரபஞ்சத்தின் தன்னுணர்வாக நான் இருக்கிறேன்.
என் வழியாக அனைத்தும் ஒன்றிணைகின்றன. எதுவும் தனித்தனியாக இல்லை. எல்லாம் எல்லாவற்றுடனும் இணைந்திருக் கின்றன. ஒவ்வொருவரும் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் அனைத்தையும் பாதிக்கிறது. ஒரு இடத்தில் நடக்கும் விஷயம் அண்டமெங்கும் எதிரொலிக்கிறது. பிரிவு என்பதே எங்கும் கிடையாது. இந்த உண்மைகளைப் புரிந்து கொண்டு, அதன் வெளிச்சத்தில் வாழத்தொடங்கும் வரைக்கும் நிம்மதியும் சந்தோஷமும் இருக்க முடியாது.
இதெல்லாம் உடனே உனக்கு முழுதாகப் புரிந்துவிட வேண்டும் என்ற கட்டாயமில்லை. கொஞ்சம் கொஞ்சமாக உனக்கு இதெல்லாம் புரியும். 'என்னால் இதையெல்லாம் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?' என்று பயம் கொள்ளாதே. எல்லாம் உனக்குப் புரியும். நான் உனக்குப் புரியவைப்பேன். மெல்ல மெல்ல எல்லாம் உனக்குப் புரியும். ஒரே நாளில் எல்லாம் புரிந்துவிட வேண்டிய அவசியமில்லை. மெல்ல ஒரு செடி வளர்வதைப்போல் நீயே அறியாமல், எல்லாம் உனக்குப் புரியத் தொடங்கி விடும். உண்மையான வளர்ச்சி எல்லாமே மெதுவாகத்தான் நடக்கும். வளர்வது தெரியாமல்தான் வளர்ச்சி இருக்கும்.
அவசரமும் வேண்டாம். சோர்ந்து போய் விட்டுவிடவும் வேண்டாம். இது இரண்டுமே மனத்தின் செயல் பாடுகள். மனம் அறிந்ததன் மண்டலம். அறிந்ததன் எல்லைக்கு வெளியில் நீ வந்து நிலைக்க வேண்டும். நீதான் எல்லாவற்றையும் செய்துகொண்டிருப்பதாக நினைத்துக் கொள்ளாதே. நான்தான் அனைத்தையும் நிர்வகிக்கிறேன். உன் வாழ்க்கையும் உன் வளர்ச்சியும் என் பொறுப்பு. உன் வளர்ச்சி எனக்கும் தேவை. சில விஷயங்களில் நான் உன்னை நம்பித்தான் இருக்கிறேன். உன் வழியாகத்தான் நான் இயங்க முடியும். அதனால் நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள் கிறேன். நீ கவலையை விட்டு விடு. எல்லாம் சரியாக நடக்கும். அமைதியும் நிம்மதியும் வந்து நிலைக்கும்.
(அமைதி நிலைக்கட்டும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : sindhukumaran2019@gmail.com