ஆனந்த ஜோதி

ஆக்கல் அழித்தல் காத்தல், அருளல்

செய்திப்பிரிவு

கீழப்பாவூர் கி. ஸ்ரீமுருகன்

மகாவிஷ்ணுவின் தசாவதாரங்கள் அனைத்துமே தனிச்சிறப்பு வாய்ந்தவை. இதுவரை நிகழ்ந்துள்ள ஒன்பது அவதாரங்களிலும் நரசிம்மம் மட்டுமே பக்தனுக்காக எடுக்கப்பட்டது. மற்ற அவதாரங்கள் எல்லாம் அதர்மத்தை அழித்து, தர்மத்தைக் காக்க எடுக்கப்பட்டவை.

கடவுள் எங்கே இருக்கிறார் என்ற கேள்விக்கு, இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று கூறிய, தம் பக்தனின் நம்பிக்கையை நிலைநாட்டவும், பகவானே பக்தனுக்கு அடிமை என்னும் தத்துவத்தை உணர்த்தவும், மாலவன் எடுத்த மாறுபட்ட அவதாரமே நரசிம்மம்.

மனித உடல், சிங்கமுகம், சினத்தின் வடிவம் என்ற போதிலும், இதர அவதாரத்தைவிட நரசிம்மம் மிகவும் விரும்பி, போற்றி வணங்கப்படுகிறது.

பெரிய பெருமாள் என்னும் அடைமொழி

ஆக்கல் (ஒரு நொடியில் தூணிலிருந்து தோன்றி), அழித்தல் (ஹிரண்ய கசிபுவை அழித்து), காத்தல் (பிரகலாதன் உயிரைக் காப்பாற்றி), அருளல் (பிரகலாதன், அவன் தந்தை, 21 தலைமுறைக்கும் அருள்புரிந்து), மறைதல் (வைகுண்டம் சென்றது) ஆகிய ஐம்பணிகளையும் செவ்வனே செய்து பூரண அவதாரமாக விளங்குவதால். நரசிம்மருக்குப் ‘பெரிய பெருமாள்' எனும் அடைமொழியும் உண்டு. திருப்பதி-திருமலையில், சீனிவாசன்-பத்மாவதி திருமண விருந்தில், அமுதை யாருக்கு நிவேதனம் செய்வதென்று பிரம்மா கேட்டபோது, நரசிம்ம சுவாமிக்கு நிவேதனம் செய்யும்படி சீனிவாசன் கூற, அவ்வாறே செய்து, பூஜையை முடித்தபின் எல்லாருக்கும் அமுது படைக்கப்பட்டது.

பெருமாள் கோயில்களில் தாயாருக்குத்தான் முதல் மரியாதை. மகாலக் ஷ்மியை வணங்கிய பின்னரே, மாலவனைத் தொழுவது மரபு. அவ்வாறு பெருமாளைச் சேவித்து, அவனிடம் பிரார்த்திக்கும்போது, பக்தனின் வேண்டுதல்களை நிறைவேற்றும்முன் தாயாரைத் திரும்பிப் பார்ப்பாராம்.

தாயாரும் பக்தனின் குற்றங்குறைகளை நீக்கி, நாராயணன் நம்மைத் தண்டிக்காதபடி, அவனுடைய கோபத்தைத் தணித்து உய்விக்கிறார். ஏனெனில், குற்றம்புரியும் ஜீவர்களை சீறித் தண்டிக்கும் இயல்புடையவன் நாராயணன். ஆகவே, குற்றம் செய்யாதவர் எவருமிலர் (ந கச்சிந் ந அப்ராத்யதி) என எடுத்துச் சொல்லி, குற்றம் காணாமல் பக்தனைக் காக்க வேண்டும் என்பாள் பிராட்டி.

நரசிம்மன், தன்னை வணங்கும் பக்தனுக்கு, அவன் கேட்கும் வரங்களையெல்லாம் முழுமையாகவும், உடனடியாகவும் வழங்கிவிடுவார் என்பது நம்பிக்கை. அதன் பின்னரே, தாயாரின் திருமுகத்தைத் திரும்பிப் பார்ப்பாராம். ஏனெனில், தாயார் முகத்தைத் திரும்பிப் பார்த்தால், எங்கே தன்னுடைய பக்தன் கேட்கும் வரங்களுள் சிலவற்றைக் குறைத்து வழங்கச் சொல்லி விடுவாரோ என்ற பயம்தான். அவ்வாறு செய்ய நேர்ந்தால், பக்தன் மனம் புண்படுமே என்று கருதிதான் நரசிம்மர் இவ்வாறு செய்வாராம். தம்மை நம்பும் பக்தர்களிடம் அவ்வளவு அன்பும் கருணையும் அவனுக்கு!

இத்தகைய கருணைக் கடலான நரசிம்மர் லட்சுமி சமேதராக வீற்றிருந்து தமிழகத்தின் தென்கோடியில் தென்காசி மாவட்டத்தில் புளியங்குடியில் அருள்பாலிக்கிறார்.

நிறைவு பெற்ற நரசிம்மர்

ஆந்திர மாநிலம் அகோபிலத்துக்கும் புளியங்குடிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. அவதாரம் நிகழ்ந்தது அகோபிலத்தில் என்றால், நிறைவுபெற்றது புளியங்குடியில்தான்.

மதுரையை ஆண்ட விஸ்வநாத நாயக்கர் ஆட்சிக் காலத்தில் ‘தென் புதுவை' என்றழைக்கப்பட்ட பகுதி ‘புளியங்குடி' எனும் பெயரால் விளங்கத் தொடங்கியது.

நரசிம்மரின் வடிவங்கள் ஒன்பது. இந்த நவநரசிம்மர்களுள் லட்சுமி நரசிம்மராக புளியங்குடியில் வீற்றிருக்கிறார். மிகுந்த வரப்பிரசாதி இவர். ‘மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது' என்பதுபோல் ஓரடி உயரத் திருமேனியாய் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதியன்று இங்குவந்து வழிபட்டுப் பூரண அருள்பெறலாம். சுவாதி, வாயு பகவானின் நட்சத்திரம். ஆகவே சுவாதி நாளில் வழிபட்டால் வாயுவேகத்தில் வந்து நரசிம்மர் அருள் புரிவார்.

திருமகளைவிட்டு நீங்காத திருமாலே பரதத்துவமாக விளங்குகிறது. திருமகளும், திருமாலும் இணைபிரியா நிலையே, அருளுக்குக் காரணமாவது என்பது வைணவத்தின் கொள்கை. நரசிம்மரைச் சாந்தப்படுத்தி, அவதாரத்தை பூர்த்தியாகச் செய்து, அவரைத் தன்னிலைக்குக் கொண்டு வந்த மகாலக் ஷ்மியுடன் தரிசனம் தரும் இந்தப் பெரிய பெருமாளை வழிபடுபவர் சகல ஐஸ்வர்யங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள் என்று கருதப்படுகிறது. மேலும் பிரம்மா, சிவன் ஆகியோரின் அருளுக்குப் பாத்திரமாகலாம். தொழில் விருத்தி, பதவி உயர்வு, அரசியல் பதவி பெற, எதிரித் தொல்லைகள் ஒழிய சுவாதி நட்சத்திரத்தன்று வழிபடலாம்.

இங்கு நடைபெறும் ‘நரசிம்மப் பிரதோஷமும்' படிபூஜையையும் விசேஷமானவை.

அடிக்கடி கோபம் கொள்பவர்கள், பதற்றம் அடைபவர்கள் இங்கு வந்து லக் ஷ்மி நரசிம்மரை சுமார் இரண்டு நாழிகை நேரம் தியானித்து வழிபட்டால், சாந்தமாகி விடுகின்றனர்.

பழச்சாறு சுவைகொண்ட நிட்சையப்ப ஆற்றின் நீரைப் பருகி நரசிம்மர் தாகம் தணிந்ததாலும், நரசிம்மர் பானகப் பிரியர் என்பதாலும், இங்கு பக்தர்களுக்கு தித்திப்பான தீர்த்தம் வழங்கப்படுகிறது. நரசிம்மர் நித்தியமான அமைதி என்னும் அமிர்தத்தை வழங்குகிறார்.

SCROLL FOR NEXT