வா.ரவிக்குமார்
சமயக்குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகரின் திருவெம்பாவை சிவபெருமானைத் துதிக்கும் பாடல்களின் தொகுப்பாகும். திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பாடல்களையும் ஒருசேர மார்கழி மாதத்தில் பாவை நோன்பின் ஒரு பகுதியாகப் பெண்கள் பாடுவது மரபு.
பிரபஞ்சத்தை வழிநடத்தும் சக்தி
மனோன்மணி, சேட்டை, வாமை, சர்வ பூதகமணி, பலப்பிதமணி, நலவிகாரணி, கலவிகாரணி, காளி ரௌத்ரி, வாமை ஆகியோர் நவசக்திகளின் அம்சங்கள். ஈரேழு லோகத்திலும் அருட்செயல்களைப் புரியும் நவசக்திகளின் அம்சம் ஒன்றிணைந்து சிவனைத் துதிக்கும் தத்துவத்தை உள்ளடக்கியது திருவெம்பாவையின் பாடல்கள்.
எம்.எல்.வி. பாணியில்…
திருவெம்பாவையின் பாடல்களை இசை மேதை எம்.எல்.வசந்தகுமாரி பாடிய விதம், இசையுலகில் மிகவும் பிரபலம். அவரின் பாணியில் சைந்தவி பிரகாஷ், வித்யா கல்யாணராமன், சுசித்ரா பாலசுப்பிரமணியம், வினயா கார்த்திக் ஆகிய கர்னாடக இசைக் கலைஞர்கள் `ராகமாலிகா’ தொலைக்காட்சிக்காக பாடியிருக்கின்றனர்.
பௌளி, கேதாரம், பிலஹரி, தேவகாந்தாரி, யதுகுலகாம்போஜி, கமாஸ், ரீதி கௌளை, தன்யாசி, நாட்டைக்குறிஞ்சி உள்ளிட்ட ராகங்களில் பத்துக்கும் மேற்பட்ட திருவெம்பாவை பாடல்கள், நான்கு பெண்களின் ஒத்திசைவான குரலில் தம்புராவின் ரீங்காரத்துடன் கேட்கும்போது, காற்றின் வழியாக பக்தி நம் மனத்துள் தவழ்கிறது.
தீயாடும் கூத்தன், ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன் அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம், என்று பலவாறு இறைவனைத் துதிக்கும் இந்தத் திருவெம்பாவை பாடல்களில் பக்திக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம், மொழியின் செழுமைக்கும் கொடுக்கப்பட்டிருக்கும். நேர்த்தியான உச்சரிப்பில் கேட்பவரை ஏகாந்தமான பரவசத்துக்கு உட்படுத்தும் சிறப்போடு வெளிவந்திருக்கிறது.
இணையச் சுட்டி: https://bit.ly/2w1MCWl